பெரம்பூர், டிச.17: வியாசர்பாடி எம்கேபி நகர் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் மனோஜ் அகர்வால் (51), வெள்ளி பொருட்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் மனோஜ் அகர்வால் மற்றும் அவரது மனைவி சுனிதா அகர்வால் மற்றும் பிள்ளைகள் வீட்டில் இருந்தபோது, அடையாளம் தெரியாத ஒருவர் வீட்டிற்கு வந்துள்ளார். மனோஜ் அகர்வால் அந்த நபரிடம் விசாரித்தபோது, தான் போலீஸ் என கூறியுள்ளார். ஐடி ரெய்டு வந்துள்ளது என நினைத்து மனோஜ் அகர்வாலின் பிள்ளைகள் மாடிக்கு சென்று விட்ட நிலையில் வந்த மர்ம நபர் தன்னை நுங்கம்பாக்கம் தனிப்படை போலீஸ் என கூறி வீட்டில் சோதனை நடத்தி, பெட்ரூமில் இருந்த ரூ.11 லட்சம் ரொக்கம், 2 செல்போன்கள் மற்றும் வெள்ளி பொருட்களை எடுத்துக்கொண்டு நாளை காவல் நிலையத்தில் வந்து பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டு சென்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மனோஜ் அகர்வால் தனது வழக்கறிஞர் மனோஜ்குமார் என்பவரை வீட்டிற்கு வரவழைத்தார். அப்போது, அந்த நபர் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனோஜ்குமாரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து மனோஜ் அகர்வால் நேற்று முன்தினம் எம்கேபி நகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், முகமூடி, ஹெல்ெமட் அணிந்து வந்த ஒருவர் மனோஜ் அகர்வால் வீட்டிற்குள் சென்று வெளியே வருவது தெரியவந்தது. இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிந்து போலீஸ் எனக்கூறி வெள்ளி வியாபாரி வீட்டில் கைவரிசை காட்டிய டுபாகூர் போலீஸ் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
