×

பள்ளிக்கரணை அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று நடக்கிறது 11வது கட்டமாக ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்: பொதுமக்கள் பயன் பெற சென்னை மாநகராட்சி அழைப்பு

சென்னை: ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம் 11ம் கட்டமாக பள்ளிக்கரணை அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று நடக்கிறது என்றும், பொதுமக்கள் பயன் பெற சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மண்டலத்திற்கு ஒரு மருத்துவ முகாம் வீதம் மொத்தம் 15 ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டு, இதுவரை 10 கட்டங்களாக நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்களில் இதுவரை 24,587 பேர் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, பெருங்குடி மண்டலம், பள்ளிக்கரணையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று(19ம்தேதி) ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம் 11வது கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த மருத்துவ முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதில், பொது மருத்துவம், 17 துறைசார் நிபுணர்களின் மருத்துவ ஆலோசனைகள், அடிப்படை மற்றும் உயர்நிலை மருத்துவப் பரிசோதனை, முழுமையான உடல் ஆரோக்கிய பரிசோதனை, காசநோய், தொழுநோய் பரிசோதனை, ஆரம்ப புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை ஆகிய மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது.

மேலும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்தல், மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு அங்கீகார சான்றிதழ் வழங்குதல், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பிரச்சாரம் போன்ற இணைச் சேவைகளும் வழங்கப்படுகிறது. பெருங்குடி மண்டலம், பள்ளிக்கரணையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று நடைபெறவுள்ள ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Nalam Kaakum Stalin ,Pallikaranai Government ,Higher Secondary ,School ,Chennai Corporation ,Chennai ,Chennai Corporation… ,
× RELATED பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பாதை...