குமரி மாவட்டத்தில் தென்னை, நெல், வாழை, ரப்பர் சாகுபடிக்கு அடுத்த இடத்தில் மரவள்ளி கிழங்கு சாகுபடி இருந்து வருகிறது. அறுவடை செய்யப்படும் மரவள்ளி கிழங்குகளை கேரள வியாபாரிகள் அதிக அளவு குமரி மாவட்டத்திற்கு வந்து வாங்கிச்செல்கின்றனர். இதுபோல் மரவள்ளி கிழங்கு ஜவ்வரிசி உற்பத்திக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. குமரி மாவட்டத்தில் உள்ள சந்தைகளில் ஒரு கிலோ மரவள்ளி கிழங்கு ரூ.25 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குமரி மாவட்ட மக்கள் மத்தியில் மரவள்ளி கிழங்கிற்கு நல்ல வரவேற்பு உண்டு. காலை உணவிற்கு கூட மரவள்ளி கிழங்குகளை பயன்படுத்தும் பழக்கம் குமரி மாவட்டத்தில் இருந்து வருகிறது. மரவள்ளிக்கிழங்கில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
இந்த மரவள்ளிக்கிழங்கு சாகுபடிக்கு விவசாயிகள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது. மேலும் நல்ல லாபத்தை அள்ளி தரக்கூடிய ஒரு சிறந்த பயிராக விளங்குகிறது. இந்த மரவள்ளிகிழங்கு சாகுபடியை பொறுத்தவரை சரியான நல்ல ரகங்கள் மற்றும் நிலம் தயாரிப்பு முறைகள் மிகவும் அவசியம். கோ 1, ரூபா, கீர்த்தி மற்றும்‚ சில்பா, லதா மற்றும்‚ கலா போன்ற ரகங்கள் உள்ளன. கிழங்குகள் மங்கலான பழுப்பு நிறத்திலும், உள்சதை வெள்ளை, மஞ்சள், சிகப்பு மற்றும் ஊதா போன்ற நிறங்களில் இருக்கும். துண்டுகளாக்கிய கிழங்குகளையும் நடுவதற்கு உபயோகப்படுத்தலாம். ஹெக்டருக்கு 1875-2500 கிலோ கிழங்குகள் நடுவதற்கு தேவைப்படும். பாசனவசதி இருந்தால் வருடம் முழுவதும் எந்த மாதத்திலும் நடவு செய்யலாம்.
இருப்பினும் மானாவாரியில் மே - ஜூன் மாதம் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்ய ஏற்ற பருவகாலங்கள் ஆகும். செம்மண், கரிசல் மண் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்ய ஏற்றது. மண்ணில் தழைச்சத்து அதிகம் இருக்கவேண்டும். களிமண், வண்டல் மண்ணில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யகூடாது. அதேபோல் நல்ல காற்றோட்ட வசதியும், தண்ணீர் தேங்காமலும் இருக்கவேண்டும். மரவள்ளிகிழங்கு சாகுபடி நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக உழுது பயன்படுத்த வேண்டும். கடைசி உழவின்போது 25 டன் தொழுஉரம் இட்டு மண்ணுடன் நன்கு கலந்துவிட வேண்டும். பிறகு 75 செ.மீ இடைவெளியில் பார் அமைக்கவேண்டும்.
கிழங்குகளை நடுவதற்கு முன்பு ெஹக்டருக்கு 40 கிலோ தழைச்சத்து 60 கிலோ மணிச்சத்து, 120 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய ராசயன உரங்களை இடவேண்டும். பிறகு பார்களின் பக்கவாட்டில் கிழங்குகளை நடவேண்டும். இதுபோல் மரவள்ளி செடியின் கம்புகளை அரை அடி நீளத்துடன் 8-10 கணுக்களுடன் நடவு செய்யலாம். நடவு செய்வதற்கு முன்பு நடவு செய்யும் கம்புகளை பூசண மருந்துக்கரைசலில் ஊற வைத்து நடவு செய்யலாம். இதனால் நோய் தாக்குதலை தடுக்கலாம். மானாவாரி மற்றும் பசானப் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வறட்சியைத் தாங்கும் விதமாக ஊட்டச்சத்துக் கரைசலில் கரணை நேர்த்தி செய்யவேண்டும். நடவு செய்தவுடன் முதல் பாசனமும், அதன் பிறகு மூன்றாவது நாள் உயிர்தண்ணீரும் விடவேண்டும்.
பிறகு 3 மாதங்கள் வரை 7 முதல் 10 நாள் இடைவெளியில் பாசனம் செய்யவேண்டும். அதற்கு மேல் 8வது மாதம் வரை 20 முதல் 30 நாட்களுக்கு ஒருமுறை பாசனம் செய்தால் போதுமானது.
சொட்டு நீர்ப்பாசனம் அமைப்பது மிகச்சிறந்ததாகும். மரவள்ளி கிழங்கு உரம்போடும்போது ஒரு ஏக்கருக்கு 4 கிலோ அசோஸ்பைரில்லம் 40 கிலோ மணலுடன் கலந்து நடவு செய்து 30வது நாளில் இடவேண்டும்.
ஒரு ஏக்கருக்கு 80 கிலோ தழை சத்து, 225 கிலோ மணி சத்து, 160 கிலோ சாம்பல் சத்து தேவைப்படும். இவற்றில் அடியுரமாக ஏக்கருக்கு 40 கிலோ யூரியா, 225 கிலோ சூப்பர் பாஸ்பேட், 80 கிலோ பொட்டாஷ் உரங்களை இடவேண்டும். மேலும் அடியுரமாக ஏக்கருக்கு 100 கிலோ ஜிப்சம் இடவேண்டும். நடவு செய்த 20வது நாள் முதல் களை எடுக்க வேண்டும். அப்போது முளைக்காத கரணைகளுக்கு பதில் புதிய கரணைகளை நடவு செய்யவேண்டும். பிறகு 3ம் மாதம் களை எடுத்து மண் அணைக்க வேண்டும். செடி நட்டு 60வது நாளில் செடிக்கு இரண்டு கிளைகளை மட்டும் விட்டுவிட்டு மீதியை அகற்றிவிடவேண்டும்.
மரவள்ளியை தாக்கும் பூச்சிகள்
மரவள்ளி பயிர்களை அதிகம் தாக்குவது வெள்ளை ஈக்கள் ஆகும். மேலும் மாவுப்பூச்சி, சிவப்பு சிலந்தி பேன் ஆகியவையும் மரவள்ளியை தாக்கும் இதற்கு 5 சதவீதம் வேப்பங்கொட்டைச் சாறு(100 லிட்டர் தண்ணீருக்கு 5 கிலோ வேப்பங்கொட்டை பொடி) தெளிக்கலாம். இதனால் வெள்ளை ஈ கட்டுப்படுத்தப்படும் அல்லது ஒரு ஏக்கருக்கு அசிரோபேகஸ் பப்பாயே என்ற ஒட்டுண்ணியை 100 என்ற எண்ணிக்கையில் விடவேண்டும்.இலைகள் மஞ்சள் நிறம் கலந்த பழுப்பு நிறமாகி உதிர ஆரம்பிக்கும். நிலத்தில் வெடிப்புகள் உண்டாகும். இவையே அறுவடைக்கான அறிகுறியாகும். 240 நாட்களில் ஹெக்டருக்கு 20-25 டன் கிழங்குகள் கிடைக்கும்.
