திங்கள்சந்தை: குமரியில் மிக அதிக விலை மதிப்பிலான திமிங்கலத்தின் வாந்தி மூலம் வெளி வரும் அம்பர் கிரீஸ் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். திமிங்கலங்கள், உணவு சாப்பிட்ட பின் ஜீரண சக்திக்காக ஒரு விதமான மெழுகு போன்ற திரவத்தை வாந்தி மூலம் வெளியேற்றும். திமிங்கலங்கள் வெளியேற்றும் கழிவுகளுக்கு அம்பர் கிரீஸ் என்று பெயர். கடல் அலைகளால் கரைக்கு அடித்து வரும்போது உருண்டை வடிவம் பெற்று கடற்கரையில் அம்பர்கிரீஸ் ஒதுங்குகின்றன. விலை உயர்ந்த வாசனை திரவியம் மற்றும் ஆபரணங்கள் செய்வதற்கு அவை பயன்படுவதால் ஒரு கிலோ அம்பர் கிரீஸ் அதன் நிறத்துக்கேற்ப பல லட்சம் ரூபாய்க்கு கள்ளச்சந்தையில் விலைபோகிறது.
ஒன்றிய அரசு திமிங்கிலத்தின் அம்பர் கிரீசை சேகரிப்பதற்கு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் நாகர்கோவில் அடுத்த சுங்கான்கடை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட விலை மதிப்புமிக்க ஒரு பொருள் கை மாற இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, போலீசார், சுங்கான்கடை பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது இந்திராகாலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகத்துக்கிடமான நபர்கள் உள்ளதாக வந்த தகவலின் பேரில் அந்த வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மேலும் வீட்டருகே நின்ற சொகுசு காரிலும் சோதனை நடந்தது. இந்த சோதனையில் சொகுசு காரில் ஒரு பையில் சுமார் 5 கிலோ எடையுள்ள 2 துண்டு அம்பர் கிரீஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் மதிப்பு பல கோடி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்தவர்களை போலீசார் பிடிக்க முயன்றனர். இதில் ஒருவர் தப்பி விட 5 பேரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர். அவர்களை உடனடியாக இரணியல் காவல் நிலையம் கொண்டு சென்றனர். விசாரணையில் அவர்கள் தென்காசி மாவட்டம் பண்பொழி சிவராமபேட்ைடயை சேர்ந்த சுப்பிரமணியன் (45), ராமநாதபுரத்தை சேர்ந்த சுல்தான் (52), குமரி மாவட்டம் திருவட்டாரை சேர்ந்த சில்வர் ஸ்டார் (47), வர்ஜித் (47), சென்னை பஜனை கோயில் தெருவை சேர்ந்த வரதராஜன் (40) என்பது தெரிய வந்தது.
அவர்கள் சென்னையில் இருந்து அம்பர் கிரீஸ் கொண்டு வந்ததாக தெரிவித்தனர். தப்பி ஓடியவர் நாகர்கோவிலை சேர்ந்த தனபாலன் (59) ஆவார். தனபாலன் மற்றும் அவரது மனைவியையும் போலீசார் தேடி வருகிறார்கள். பிடிபட்ட 5 பேரையும் வனத்துறையினர் கைது செய்து நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தற்போது கைப்பற்றப்பட்டுள்ள அம்பர் கிரீஸ் ரூ.5 கோடிக்கும் அதிகமானதாக இருக்கும் என கூறப்படுகிறது.
