- சேலம்
- சித்தர் கோயில்
- வர்ஷினி
- வரதராஜன்
- பாரதி நகர்
- Veeravanallur
- திருநெல்வேலி
- நாயக்கன்பட்டி, நலம்பட்டி
சேலம்: சேலம் அடுத்த சித்தர்கோயில் அருகில் தனியார் ஹோமியோபதி மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு திருநெல்வேலி பக்கமுள்ள வீரவநல்லூர் பாரதிநகரை சேர்ந்த வரதராஜன் என்பவரின் மகள் வர்ஷினி (22) இறுதியாண்டு படித்து வந்தார். இவர் கல்லூரி அருகேயுள்ள நல்லாம்பட்டி நாயக்கன்பட்டியில் லட்சுமணன் என்பவரின் அடுக்குமாடி வீட்டில் தோழியுடன் அறை எடுத்து தங்கியிருந்தார். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை விடுமுறையையொட்டி ஊருக்கு சென்ற வர்ஷினி, கடந்த 4 நாட்களுக்கு முன்பு சேலம் வந்து அவரது அறையில் தங்கியிருந்தார். அவரது தோழி அட்சயா ஊருக்கு சென்றுவிட்டு நேற்று காலை அறைக்கு வந்தார். அப்போது மல்லார்ந்த நிலையில் படுக்கையிலேயே வர்ஷினி இறந்து கிடந்தார்.
தகவலறிந்து வந்த இரும்பாலை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், மாணவியின் தந்தை வரதராஜன் நேற்றுமுன்தினம் இரவு சந்தித்து பேசிவிட்டு சென்றது தெரிந்தது. தொடர் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மாணவி வர்ஷினி, திருநெல்வேலியை சேர்ந்த 40 வயதான 2 குழந்தைகளின் தந்தையான ஒருவரை காதலித்து வந்துள்ள தகவல் கசிந்துள்ளது. இது தந்தை வரதராஜனுக்கு பிடிக்கவில்லை. இதுதொடர்பாக வீட்டில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஊருக்கு சென்றிருந்த நேரத்திலும் பெற்றோர் வர்ஷினியை கண்டித்துள்ளனர். ஆனால் அவர் கேட்கவில்லை என கூறப்படுகிறது.
ஊருக்கு சென்ற மாணவி அடுக்குமாடி வீட்டில் 3வது மாடியில் மொட்டை மாடியுடன் கூடிய தனியாக இருக்கும் அறையில் தங்கியிருந்தார். அவரது தோழி வந்து பார்க்கும்போது சடலமாக கிடந்தார். கழுத்து பக்கம் லேசாக கன்னியிருந்தது. கதவு வெளிபக்கமாக தாழிடப்பட்டிருந்ததால் மாணவியின் சாவில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரது தந்தை வரதராஜன் மகளிடம் பேசிவிட்டு இரவு சுமார் 8.30 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது தான் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
மகளின் காதலை ஏற்றுக்கொள்ளாத அவர் மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றிருக்கலாம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அவரது உடல் அருகே தலையணை கிடந்தது. எனவே காதலை கைவிடுமாறு தந்தை வற்புறுத்தி கூறியும் அவர் கேட்காத நிலையில் தலையணையை முகத்தில் போட்டு அழுத்தி கொன்றிருக்கலாம் எனவும் தெரியவருகிறது. தலைமறைவாக உள்ள தந்தை வரதராஜன் வந்தால் தான் முழுவிவரம் தெரியவரும். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் அவர் விபரீத முடிவு எதுவும் எடுத்துவிட்டாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. மாணவியின் உடல் சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது ஒரு கையில் புளூகலர் இருப்பதால் உடலில் விஷம் இருக்கும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
