×

தமிழக வரலாற்றில் முதன் முறையாக 25 மாவட்டங்களில் பெட்ரோல் விலை சதமடித்தது: கடலூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சியில் 101ஐ தாண்டியது : சென்னையில் 99.19க்கு விற்பனை

சேலம்: நாடு முழுவதும் நடப்பு மாதம் 13வது நாளாக நேற்றும் பெட்ரோல், டீசல் விலையேற்றப்பட்ட நிலையில், தமிழக வரலாற்றில் முதன் முறையாக 25 மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100ஐ கடந்தது. கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரியில் 101ஐ தாண்டியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு தினமும் மாற்றி அமைக்கிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏற்ற நிலையில் இருக்கிறது. இதனால், நாடு முழுவதும் 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100ஐ கடந்துள்ளது. நாட்டிலேயே மிக அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 108ஐ தாண்டி விற்கப்படுகிறது. இம் மாதத்தை (ஜூன்) பொறுத்தளவில் ஒருநாள் விட்டு ஒரு நாள் விலையேற்றத்தை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகிறது.

இதனால், கடந்த 1ம் தேதியில் இருந்து நேற்றைய தினம் (26ம் தேதி) வரை 13 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் பெட்ரோல் 31 காசும், டீசல் 34 காசும் அதிகரிக்கப்பட்டது. இதன்மூலம் இம்மாதம் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு 3.20ம், டீசல் 3.12ம் அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் 98.88க்கு விற்கப்பட்ட நிலையில், நேற்று 31 காசு உயர்ந்து 99.19க்கு விற்கப்பட்டது. டீசல் 92.89ல் இருந்து 34 காசு உயர்ந்து 93.23க்கு விற்பனையானது. சேலம் மாநகர பகுதியில் பெட்ரோல் 100க்கும், டீசல் 93.95க்கும் விற்கப்பட்டது.

தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை பொறுத்தவரை அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தேனி, தஞ்சாவூர், திருவாரூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய 25 மாவட்டங்களில் ெபட்ரோல் விலை 100ஐ தாண்டிவிட்டது. இதில், திருப்பத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் பெட்ரோல் ₹101ஐ தாண்டியுள்ளது. மிக அதிகபட்சமாக கடலூரில் 101.33க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்கப்பட்டது.

இதேபோல், டீசல் விலை 4 மாவட்டங்களில் 95ஐ கடந்துள்ளது. அதிகபட்சமாக கடலூரில் ஒரு லிட்டர் டீசல் 95.28க்கு விற்பனையானது. மற்ற மாவட்டங்களில் 94க்கும் அதிகமாக விற்கப்பட்டது.  வரலாற்றில் முதன்முறையாக தமிழகத்தில் 25 மாவட்டங்களில் நேற்றைய தினம் பெட்ரோல் விலை சதமடித்துள்ளது.இந்த தொடர் விலையேற்றத்தால், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Tamil Nadu ,Cuddalore ,Krishnagiri ,Kallakurichi ,Chennai , For the first time in the history of Tamil Nadu, petrol prices have crossed 100 in 25 districts: Cuddalore, Krishnagiri, Kallakurichi surpassed 101: Chennai sells at 99.19
× RELATED ஜெய்பீம் பட உண்மை சம்பவத்தில்...