×

புதிய கிரெடிட் கார்டு வழங்கக் கூடாது வாடிக்கையாளர்களை சேர்க்க கோடக் மகிந்திரா வங்கிக்கு தடை: விதிகளை பின்பற்றாததால் ரிசர்வ் வங்கி அதிரடி

மும்பை: ஆன்லைன் மற்றும் மொபைல் பேங்கிங் மூலம் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கவும், புதிதாக கிரெடிட் கார்டு வழங்கவும் கோடக் மகிந்திரா வங்கிக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கிய செயல் திட்டங்களின்படி கோடக் மகிந்திரா வங்கி செயல்படவில்லை. வங்கி சமர்ப்பித்த விவரங்களின்படி, ஐடி மேலாண்மை, உள்கட்டமைப்பு, கோர் பேங்கிங் தொடர்பாக விதிமுறைகளைப் பின்பற்றவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் வங்கியின் ஆன்லைன் செயல்பாடுகளில் இடையூறு ஏற்பட்டதால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர். கடந்த 15ம் தேதியம் இத்தகைய இடையூறு நிகழ்ந்தது.

தொடர்ந்து விதிகளை கடைப்பிடிக்காத காரணத்தால் இந்த வங்கி ஆன்லைன் மற்றும் மொபைல் பேங்கிங் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை விதிக்கப்படுகிறது. இதுபோல் புதிய கிரெடிட் கார்டு வழங்குவதும் தடை செய்யப்படுகிறது. அதேநேரத்தில் ஏற்கெனவே உள்ள கோடக் மகிந்திரா வாடிக்கையாளர்களுக்கு வங்கிச் சேவைகள் வழங்குவது, கிரெடிட் கார்டு வழங்குவதற்குத் தடையில்லை.

கடந்த 2 ஆண்டுகளில் இந்த வங்கியில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள், குறிப்பாக கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் மிக அதிகமாக நடைபெற்றுள்ளன. இது ஐடி உள்கட்டமைப்புக்கு மேலும் சுமையை கூட்டுவதாக அமைந்துள்ளது எனவே, வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அடுத்ததாக வங்கியின் செயல்பாடுகள் குறித்து தணிக்கை செய்யும்போது, ரிசர்வ் வங்கிக்கு திருப்தி அளிக்கும் வகையில் விதிகளை பூர்த்தி செய்திருந்தால், அப்போது இந்த தடை குறித்து மறு பரிசீலனை செய்யப்படும். இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுபோல், எச்டிஎப்சி வங்கியின் மீது 2020 டிசம்பரில் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்திருந்தது. பின்னர் 2022 மார்ச்சில் தடையை விலக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

The post புதிய கிரெடிட் கார்டு வழங்கக் கூடாது வாடிக்கையாளர்களை சேர்க்க கோடக் மகிந்திரா வங்கிக்கு தடை: விதிகளை பின்பற்றாததால் ரிசர்வ் வங்கி அதிரடி appeared first on Dinakaran.

Tags : Kotak Mahindra Bank ,Reserve Bank ,MUMBAI ,RBI ,
× RELATED ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் எதிரொலி:...