×

பராமரிப்பு பணி காரணமாக பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தம்

ராமேஸ்வரம்:  பாம்பன் ரயில் பாலத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் அருகே பாம்பன் ரயில் பாலத்தில் சென்சார் கருவியில் ஏற்பட்ட பழுதினால் நேற்று முன்தினம் ரயில்கள் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் ராமேஸ்வரத்தில் இருந்து செல்ல வேண்டிய கோவை வாராந்திர சிறப்பு ரயில் மற்றும் மாண்டுயாடிஹ் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னை செல்ல வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில் மட்டும மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது. நேற்று பாம்பன் ரயில் பாலத்தில் சென்சார் கருவியை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். கருவி சீரமைக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், பாலத்தில் ரயில் இயக்க உயரதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை.

மேலும் பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் ராமேஸ்வரம் - மண்டபம் இடையே ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  இதனால் ராமேஸ்வரத்தில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து ரயில் பெட்டிகளும் பயணிகளின்றி மண்டபம் ரயில் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. நேற்று 2வது நாளாக ராமேஸ்வரத்திலிருந்து செல்ல வேணடிய அனைத்து ரயில்களும் மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றன. நேற்று காலை சென்னையில் இருந்து வந்த ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில், மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு மீண்டும் நேற்று இரவு 8.55 மணிக்கு மண்டபத்தில் இருந்து பயணிகளுடன் சென்னை புறப்பட்டு சென்றது.

நேற்று மாலை 5 மணிக்கு திருப்பதி சிறப்பு ரயிலும் மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து திருப்பதி புறப்பட்டு சென்றது. நேற்று முன்தினம் ரத்து செய்யப்பட்ட மாண்டுயாடிஹ் வாராந்திர சிறப்பு ரயில் நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு மண்டபத்தில் இருந்து பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.
பாம்பன் பாலத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து அதிகாரிகளின் ஆய்வுக்குப்பின், ராமேஸ்வரம் - மண்டபம் இடையே ரயில் போக்குவரத்து நடைபெறும் என ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.

Tags : Bomben Bridge , Railway Bridge, Pampan Railway Bridge, Trains, Rameshwaram
× RELATED பராமரிப்பு பணிகளுக்காக பாம்பன் பாலத்தில் அடுத்த 67 நாள் ரயில் சேவை கட்