பராமரிப்பு பணிக்காக கொடைக்கானல்- அடுக்கம் சாலையில் போக்குவரத்து நிறுத்தம்: மலைக்கிராம மக்கள், விவசாயிகள் அவதி

கொடைக்கானல்: கொடைக்கானல்- அடுக்கம் சாலையில் பராமரிப்பு பணிக்காக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் மலைக்கிராம மக்கள்,  விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கொடைக்கானலுக்கு வரும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்காக வத்தலக்குண்டு, பழநி வழியாக என 2 சாலைகள் உள்ளன. மழைக்காலங்களில்  இந்த சாலைகளில் ராட்சத மரங்கள் சாய்ந்தும், பாறைகள் உருண்டு விழுந்தும், மண்சரிவு ஏற்பட்டும் போக்குவரத்து துண்டிக்கப்படும். குறிப்பாக  கொடைக்கானல்- பழநி சாலையில் மழைக்காலங்களில் போக்குவரத்து துண்டிப்பு அதிகளவில் நடக்கும். இதற்கு மாற்றாக கடந்த 15 ஆண்டுகளுக்கு  முன்பு பெருமாள்மலை- அடுக்கம் வழியாக கும்பக்கரை வரை சாலை அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை இச்சாலை திறக்க முடியாத நிலை  இருந்து வருகிறது.

எனினும் இருசக்கர மற்றும் இலகுரக வாகனங்கள் இச்சாலையில் சென்று வருகின்றன. மழைக்காலத்தில் இந்த சாலையின்  குறுக்கேயும் அடிக்கடி பாறைகள் உருண்டு விடுவதுடன் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் திறக்கப்படாத  இச்சாலையில் மீண்டும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக அரசின் சார்பில் ரூ.80 லட்சம் நிதி  ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கி நடந்து வருகிறது.

இதற்காக கொடைக்கானல்- அடுக்கம் மலைச்சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்திற்கு தடை  விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்த மலைக்கிராம மக்கள், விவசாயிகள் போக்குவரத்து வசதியின்றி கடும் அவதிக்குள்ளாகி  வருகின்றனர். எனவே சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>