×

தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 165 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் கூடுதலாக வருகை: பதற்றமான பகுதிகளுக்கு அனுப்ப முடிவு

சென்னை: தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மேலும் 165 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் வருகின்றனர். இவர்களை பதற்றமான வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இந்த தேர்தலில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவுக்காக தமிழகத்தில் மொத்தம் சுமார் 68,250 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. தேர்தல் நடத்தும் பணியில் 4 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் போலீசாரை ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறியும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் தேர்தல் பணிக்கான 190 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்தனர். அதன்படி, பாதுகாப்பு பணிக்காக இதுவரை 25 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் தமிழகம் வந்துள்ளனர். ஒரு கம்பெனியில் அதிகப்பட்சமாக 90 வீரர்கள் வரை இடம் பெற்றிருப்பார்கள். இவர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதிகளில் தேர்தல் பாதுகாப்பாக நடைபெறும் வகையில் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மேலும் 165 துணை ராணுவ வீரர்கள் நேற்று (ஏப்ரல் 1) முதல் படிப்படியாக தமிழகம் வர தொடங்கியுள்ளனர்.

இந்த 165 கம்பெனி துணை ராணுவ வீரர்களும் தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்படுவார்கள். எந்தெந்த பகுதிகளுக்கு எவ்வளவு துணை ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்க வேண்டும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள போலீஸ் உயர் அதிகாரிகள் முடிவு செய்வார்கள்.  தற்போது 39 தொகுதிகளுக்கும் இறுதி வேட்பாளர் விவரம் வெளியிடப்பட்டுள்ளதால், எந்தெந்த வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என்று கண்டறியும் பணிகளை போலீசார் செய்து வருகிறார்கள். அந்த பகுதிகளுக்கு கூடுதல் துணை ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டு, தமிழகத்தில் அசம்பாவிதம் எதுவும் இல்லாமல் அமைதியான மற்றும் பாதுகாப்பான முறையில் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

The post தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 165 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் கூடுதலாக வருகை: பதற்றமான பகுதிகளுக்கு அனுப்ப முடிவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...