×

ஹரித்துவார் கும்பமேளா!: கொரோனா கட்டுப்பாடுகளை மீறி கங்கையில் புனித நீராடிய 100-க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி..!!

டெஹ்ராடூன்: ஹரித்துவார் கும்பமேளாவில் கலந்துகொண்ட 100க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திராக்கண்ட் மாநிலம் ஹரித்துவாரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 1ம் தேதி தொடங்கியது. இந்தியாவில் கொரோனா 2ம் அலை காட்டுத்தீயாய் பரவி வருவதால் கும்பமேளா நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கைவிடுத்தனர். ஆனால் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் நிகழ்ச்சி நடைபெறும் என்று உத்திராக்கண்ட் மாநில அரசு அறிவித்தது. இந்நிலையில் கும்பமேளா விழாவின் முக்கிய நிகழ்வான 2ம் நீராடல் நேற்று நடைபெற்றது. கங்கையில் புனித நீராட நாடு முழுவதும் இருந்து சுமார் 28 லட்சம் பேர் ஹரித்துவார் குவிந்தனர்.

அரசு கூறிய எந்த விதிகளும் கடைபிடிக்காமல் ஒரேநேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் கங்கை நீராடினர். முகக்கவசம் அணிதல், கொரோனா பரிசோதனை சான்றிதழ் அவசியம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் காற்றில் பறந்தன. இந்த நிலையில் கும்பமேளா நிகழ்ச்சியில் 2 நாட்களில் 18 ஆயிரம் பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 102 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக கும்பமேளாவில் கலந்துக்கொண்ட மற்றவர்களுக்கும் கொரோனா பரவி இருக்கும் என்று கூறப்படுகிறது. நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கும்பமேளாவில் பங்கேற்றுள்ளனர். இதனால் அனைத்து மாநிலங்களிலும் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.


Tags : Haridwar Kumbamela , Haridwar Kumbh Mela, Ganges, 100 Corona
× RELATED ஹரித்வார் கும்பமேளாவில் கலந்துகொண்ட 30 சாதுக்களுக்கு கொரோனா தொற்று உறுதி