சினிமா டயலாக் பேசி வலையில் வீழ்த்தினார் 9 பெண்களை திருமணம் செய்து பாலியல் தொழிலில் தள்ளிய வாலிபர்: ஆந்திராவில் அதிரடி கைது

திருமலை: ஆந்திராவில் சினிமா டயலாக் பேசி காதல் திருமணம் செய்த 9 மனைவிகளை  மிரட்டி பாலியல் தொழிலில் தள்ளிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர் அருண்குமார்(32). இவர் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து பாலியல் தொழிலில் தள்ளியதாக அவரது மனைவிகள் எனக்கூறி 2 இளம்பெண்கள், விசாகப்பட்டினம் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து டிஜிபி கவுதம் சவாங் உத்தரவின்பேரில், விசாகப்பட்டினம் துணை காவல் ஆணையர் ஐஸ்வர்யா ரஸ்தோகி தலைமையிலான போலீசார் விசாரணையை தொடங்கினர். இந்த விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அருண்குமார் எந்த வேலைக்கும் செல்லாமல் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்தார்.

அடிக்கடி சினிமா பார்க்கும் பழக்கமுடையவர். பல பெண்களின் பின்னால் சுற்றி அவர்களிடம் திரைப்பட வசனங்களை பேசி தனது காதல் வலையில் வீழ்த்தினார். குறிப்பிட்ட காலத்திற்கு பின் மிகவும் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலுக்கு அந்த பெண்களை தள்ளியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் பெண்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுவரை அருண்குமார் 9 பெண்களை திருமணம் செய்து அவர்களை பாலியல் தொழிலில் தள்ளியுள்ளார். கன்சர்ல பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து நேற்று முன்தினம் அருண்குமாரை கைது செய்தனர். அருண்குமார் வசித்து வரும் வீட்டில் துப்பாக்கி, வீச்சரிவாள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அருண் குமாரால் பாதிக்கப்பட்ட பெண்கள், நேரடியாக போலீசாரை அணுகும்படி போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>