×

ஷகிரா மாதிரி யோசி… பியான்சே போல பாடு!

நன்றி குங்குமம் தோழி

பின்னணி பாடகி தன்விஷா

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டவர். முதல் பாடல் ‘ஆயுத எழுத்து’ படத்தில் ‘யாக்கை திரி’. அதைத் தொடர்ந்து பல வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. ஏ.ஆர்.ரஹ்மான் மட்டுமில்லாமல் யுவன் சங்கர்ராஜா, மணி ஷர்மா, அமித் திரிவேதி என பல இசை அமைப்பாளர்களுடன் இணைந்து பாடல்களைப் பாடியுள்ளார். இவரின் ஸ்பெஷாலிட்டியே பல மொழிகளில் பாடுவது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மட்டுமில்லாமல், லாட்டின், ஸ்பானீஷ், போர்ச்சுகீஸ், அராபிக் என ஃபாரின் மொழிகளிலும் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். தற்போது துருவ நட்சத்திரம் படத்தில் ஒரு பாடலைப் பாடியுள்ளார் பிரபல பின்னணி பாடகி தன்விஷா. இவர் இசைக் கலைஞர்களை கவுரவிக்கும் கிராமி விருதினைப் பெற்ற முதல் இந்திய பெண்.

‘‘நான் அடிப்படையில் கிராஃபிக் டிசைனர். பாட்டு முறையா கற்றுக் கொள்ளவில்லை. நண்பர்களுடன் சேர்ந்து இருக்கும் போது பாடுவேன். அப்படி ஒரு நிகழ்வில் நான் பாடின பாட்டை யாரோ பதிவு செய்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களிடம் காண்பித்துள்ளார். ஒரு நாள் திடீரென்று அவரின் ஸ்டுடியோவில் இருந்து எனக்கு போன் வந்தது. ‘நான் ஏ.ஆர்.ரஹ்மான் பேசுறேன். நாளை ஸ்டுடியோவிற்கு வாங்க’ன்னு சொல்லி வச்சுட்டார். எனக்கு ஒன்னுமே புரியல. அவர்தான் பேசினாரா… இல்லை யாராவது பிராங்க் செய்றாங்களா? போய்தான் பார்ப்போன்னு வந்தேன். அன்று ஆரம்பித்த என் இசைப் பயணம் இன்றும் தொடர்கிறது.

முறையாக இசைப் பயில ஆரம்பித்தது…

யாக்கை திரி பாடலை தமிழ் மற்றும் ஹிந்தியிலும் பாடினேன். எனக்கு ஸ்டுடியோவில் பாடி பழக்கமில்லை. சார்தான் இதுதான் டியூன், பாடல் வரிகள்னு சொல்லி ஒவ்ெவாரு வரியையும் எப்படி பாடணும்னு சொன்னார். அப்படித்தான் நான் அந்த பாடலைப் பாடினேன். ஒரு பக்கம் பயம், மறுபக்கம் நான்தான் பாடுகிறேனான்னு சந்தேகம். நான் முறையாக சங்கீதம் பயிலவில்லை. அப்படி இருந்தும் என் குரலுக்கான வாய்ப்பு கிடைச்சிருக்கு. அதை மேலும் மெருகாக்க வெஸ்டர்ன் கிளாசிக்கல் மற்றும் ஹிந்துஸ்தானி கற்றுக்கொள்ள ஆரம்பிச்சேன்.

எனக்கு எந்த ஒரு விஷயமும் கற்றுக்கொள்ளவும் பிடிக்கும். பின்னணி பாட்டு மட்டுமில்லாமல் கோயரிலும் நான் பாடுவேன். சிலர் பின்னணி பாடல்கள் மட்டும் பாடுன்னு சொல்லுவாங்க. இசைகளில் என்ன பேதம். அனைத்து ஸ்டைலில் பாடினால்தான் அதில் உள்ள சின்னச் சின்ன நுணுக்கங்கள் மற்றும் பாடல் வரிகளில் உள்ள உணர்ச்சிகளை புரிந்து கொள்ள முடியும். புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி, குரு, போஸ் படத்தில் நான் கோரஸ் கூட பாடியிருக்கேன்.

பேக்ரவுண்ட் ஸ்கோர்…

திரைப்படம் அல்லது விளம்பரங்கள் எதுவாக இருந்தாலும் அதற்கான பேக்ரவுண்ட் ஸ்கோர் மிகவும் முக்கியம். இசை இல்லாமல் ஒரு படத்தை பார்ப்பதற்கும் பேக்ரவுண்ட் ஸ்கோருடன் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். ஸ்டுடியோவில் ஒரு பாட்டுக்கு எப்படி இசை அமைக்கிறாங்கன்னு உடன் இருந்து பார்ப்பேன். ஒருமுறை எனக்கு பீட், ரிதம் கேட்டா போதும், என் மண்டைக்குள் இசை அப்படியே ஓட ஆரம்பிக்கும்.

ரங் தே பதந்தி படத்தில் பகத் சிங்கை தூக்கிலிடும் காட்சி. அந்த சிச்சுவேஷனுக்கான பீலிங்கை நம்முடைய குரலில் கொடுக்கணும். அந்த பாட்டுக்கான திரை நம் கண் முன் ஓடும். இதுதான் டியூன், பாடல் வரிகள்னு சொல்லி பாட சொன்னாங்க. நாம் திரையில் பார்க்கும் காட்சிக்கு ஏற்ப உணர்வுகளை நம்முடைய குரலில் கொண்டு வரணும். ரஹ்மான் சாருக்காக ஜெர்மன் ஜிப்ரிஷ் பேக்ரவுண்ட் ஸ்கோர் எழுதிக் கொடுத்திருக்கேன்.

ஃபாரின் மொழிகள்…

பேக்ரவுண்ட் ஸ்கோர் செய்ய ஆரம்பிச்ச போது ஏற்பட்ட தாக்கம். ஜெர்மன் ஜிப்ரிஷ், பிரஞ்ச் ஜிப்ரிஷ் ஸ்கோர் எழுதும் போது அந்த மொழிகளில் பாடல்கள் பாடினால் என்ன என்று தோன்றியது. நான் கொஞ்சம் கொஞ்சமாக ஸ்பானிஷ், போர்சுகல், அராபிக் போன்ற மொழிகளில் உள்ள பாடல்களை கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். பாடலில் உள்ள வரிகளின் உச்சரிப்பை கேட்டு அதேபோல் பிராக்டிஸ் செய்வேன். ஒரு பாடகராக இருக்கும் போது, இசை சார்ந்து விஷயங்களை தெரிந்து ெகாள்ள வேண்டும்.

100% நம்முடைய உழைப்பை போட்டால்தான் அதில் 80% ஆவது நம்மால் செய்ய முடியும். யுடியூப் வந்த பிறகு பர்வீன் சுல்தான், உஸ்தாத் ரஷித் கான் அவர்கள் பாடிய பாடல்களை டவுண்லோட் செய்து, பயிற்சி எடுப்பேன். மேலும் வெளிநாட்டு பாடகர்களான காலித், ஃபிர்தோஸ், லாட்டின் அமெரிக்க பாடகர்கள் குளோரியா எஸ்டிஃபான், செலியா க்ரூஸ், குஸ்தாவோ செராடி போன்றவர்களின் பாடல்களும் எனக்கு இன்ஸ்பிரேஷன்.

லாடின் இசைக் குழு…

எனக்கு மற்ற மொழிகள் மேல் ஆர்வம் இருந்தது. அந்த ஆர்வம்தான் என் இசைக்குழு அமையக் காரணம். இந்த குழுவை 2008ல் துவங்கினோம். நவீன் பேஸ், ஷ்யாம் கீபோர்ட், ஜியோராஜ் டிரம்மர், ஆல்வின் பர்கஷன்ஸ் இவங்க தான் என் குழு. லாடின் பாடல்கள் மட்டுமில்லாமல் கோலிவுட் பாடல்களிலும் அந்த இசையினை கொண்டு புதுமையாக முயற்சி செய்வோம். லாடின் பொறுத்தவரை அதன் ரிதம்களை கொண்டு வருவது மிகவும் கடினம். அதற்கு குறைந்தபட்சம் ஒரு நாள் பத்து மணி நேரம் கஷ்டப்பட்டு பயிற்சி எடுப்ேபாம்.

என் குழுவினர்கள் எல்லாரும் என்னைப் போல் புதுமையாக செய்ய விரும்புவார்கள். ‘நீ இந்த போர்சுகல் அல்லது அரபிக் பாட்டை பாடு’ன்னு என்னை மேடிவேட் செய்வார்கள். பெரும்பாலும் வெளிநாட்டு பாடல்களில் ஹார்மனி இசையினை தேர்வு செய்து பாடுவோம். இதில் அரபிக் பாடல்களை எடுத்துக் கொண்டால் அதில் எகிப்து, மொரோகன் அரபிக்ன்னு இருக்கும். அதே போல் மெக்சிகன், அமெரிக்கன், ஸ்பானிஷ் என ஒவ்வொரு மொழியிலும் அதன் உச்சரிப்பு மாறுபடும்.

சவுத் அமெரிக்கன் பிரசிலியன் பாடலில் போர்ச்சுக்கல் தாக்கம் இருக்கும். பாடும் போது வார்த்தை உச்சரிப்பில் தவறு வந்துவிடக்கூடாதுன்னு ரொம்பவே கவனமா இருப்பேன். இதற்காக யுடியூபில் அந்தந்த மொழி படங்கள், சீரியல்களைப் பார்ப்பேன். எந்த வார்த்தைக்கு எப்படி நாக்கு மடித்து பேசுகிறார்கள் என்று கவனிப்பேன். மேலும் பல நாடுகளில் எனக்கு நண்பர்கள் உள்ளனர். அவர்களுக்கு வாய்ஸ் நோட் அனுப்பி உச்சரிப்பினை சரி செய்து கொள்வேன். இப்படித்தான் ஒவ்வொரு மொழியினையும் புரிந்து கொண்டு பாடுகிறேன்.

உங்களின் இசை அமைப்பாளர்கள்…

நான் பெரும்பாலும் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் இசையில் பாடி இருக்கேன். அவர் நல்ல கிரியேட்டர். நம் எண்ணத்திற்கு முழு சுதந்திரம் தருவார். ஏர்டெல் விளம்பரம், அதில் உன் விருப்பம் போல் பாடுன்னு சொன்னார். ஆப்ரிக்கன், ஸ்பானிஷ் மற்றும் ஜிப்ரிஷ் மொழிகள் அந்த விளம்பர பாடலில் சேர்க்கப்பட்டு இருக்கும். அந்த விளம்பரத்தில் வரும் முக்கியமான பீட் இசையினை என் குரலால் வாசித்து இருப்பேன். அவருக்கு அது பிடித்து இருந்தது.

‘இது நல்லா இருக்கு. நீ அப்படியே செய்’ன்னு சொல்லிட்டார். அவர் அப்படி சொல்லும் போது நமக்குள் ஒரு தன்னம்பிக்கை ஏற்படும். புதுசா முயற்சி செய்ய தூண்டும். ஒவ்வொரு முறை ஸ்டுடியோ போகும் போது இன்று என்ன சாலஞ்ச் இருக்கும்ன்னு யோசித்துக் கொண்டே போவேன். ஜெய்ஹோ பாட்டு… நான் ஸ்டியோக்குள் போனதும் இந்த பாட்டுக்கு ஷகிரா மாதிரி யோசி, பியான்சே போல பாடுன்னு சொன்ன போது எனக்கு என்னென்னு புரியல.

அவர் என்னிடம் இதை வித்தியாசமான குரலில் பாடணும்னு சொல்லி அனுப்பிட்டார். மறுநாள் விடியற்காலை இரண்டு மணிக்கு எனக்கு போன் செய்தார். தூக்கத்தில் எழுந்தவுடன் பேசினா நம்ம குரல் வித்தியாசமா இருக்கும். நான் ஹலோன்னு சொன்னதும், எனக்கு இந்த டீப் குரல் தான் வேணும் என்றார். மேலும் அதில் ஸ்பானிஷ் சேர்க்க ெசான்னார். ஹிந்தி பாடலில் ஸ்பானிஷான்னு கேட்ட போது, நீ சேரு நல்லா இருக்கும்னு சொன்னார். அந்த பாடலுக்குதான் எனக்கு விருது கிடைச்சது.

இன்றும் அவரின் ஸ்டுடியோவிற்கு போகும் போது எல்லாம் புதுசா ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள்வேன். இவர் மட்டுமில்லை யுவன் சங்கர் ராஜா மற்றும் அமித் திரிவேதி அவர்களுடன் பாடும் போதும் பல விஷயங்களை கற்று இருக்கேன். இவர்களும் எனக்கான முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள். இப்ப ரீசன்டா ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள் இசையமைத்திருக்கும் துருவ நட்சத்திரம் படத்திற்காக ஒரு பாடல் பாடி இருக்கேன். கிளாசில் பாட்டில் ஸ்பானிஷ் ராப் பாடி இருக்கேன்.

கிராமி விருது…

ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் இடம் பெற்ற ‘ஜெய் ஹோ’ பாடலுக்கு ஸ்பானிஷ் வரிகளை எழுதியதற்காக எனக்கு இந்த விருது கிடைச்சது. நான் இதை எதிர்பார்க்கவே இல்லை. இப்ப நினைச்சாலும் ரோலர் கோஸ்டர் ரைட் போல உணர்வேன். விருதை அறிவித்த போது ரொம்வே பயந்தேன். காரணம், நான் அந்த மேடையில் ஒட்டுமொத்த இந்திய பெண்களின் பிரதிநிதியாக நின்றிருந்தேன். பியான்சே, ஹைடி கோல்மென், ஷகிரா என பல பிரபல பாடகர்கள் ஏறிய சிகப்பு கம்பளத்தில் நானும் இருக்கிறேன்னு நினைச்ச போது ரொம்பவே பெருமையாக இருக்கு. இதற்கு முழுக்க முழுக்க ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள்தான் காரணம். அவர் அன்று இந்த வரிகளை சேர்க்க சொல்லாமல் இருந்திருந்தா எனக்கு இந்த விருது கிடைச்சிருக்காது. இந்த விருது எனக்கு பலவிதமான மொழிகளுக்கான அறிமுகம் என்றும் சொல்லலாம்.

எதிர்கால திட்டங்கள்…

இந்த வருஷம் நிறைய பாடல்கள் இருக்கு. நான் இப்ப மலாய் கற்கிறேன். ஆல்பம் ஒன்று செய்ய வேண்டும். நிறைய பாடணும். நிறைய கத்துக்கணும். மெடிடேஷன் டிராக், குறிப்பிட்ட சில மந்திரங்களை எடுத்து அதைக் கொண்டு இசை அமைக்க இருக்கேன். மலாய் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் எக்ஸ்ப்ளோர் செய்யணும். ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் பாடல், ராஜஸ்தானி மற்றும் குஜராத்தி என மூன்று விதமான பாடல்களுக்கு நானே வரிகள் எழுதி இசை அமைத்து இருக்கேன். அதற்கான வாய்ப்பு வந்தால் அதை ஏற்கவும் நான் தயார்.

தொகுப்பு: ஷம்ரிதி

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

The post ஷகிரா மாதிரி யோசி… பியான்சே போல பாடு! appeared first on Dinakaran.

Tags : Shakira… ,Beyoncé ,Kunkum Dodhi ,Tanvisha Ozhipuyal ,AR Rahman ,Yuvan Shankarraja ,Mani Sharma ,Dinakaran ,
× RELATED ரூ.116 கோடி வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய பாப் பாடகி ஷகிராவுக்கு 8 ஆண்டு சிறை