×

சிறுகதை-கண்ணிலே அன்பிருந்தால்…

நன்றி குங்குமம் தோழி

வாசகர்களே! கதையில் வரும் ஒரே கதாநாயகனான என்னைப் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால்தான், இந்தக் கதையை நீங்கள் நன்றாக ரசித்து படிக்க முடியும். என்னைப் பற்றி பெருமையாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இருந்தாலும் இரண்டொரு வார்த்தை சொல்லி விடுகிறேன். எனக்கு வயசு 70. மத்திய அரசு ஓய்வு பெற்ற ஊழியர். பென்ஷன் ரூ.30,000/- வருகிறது. என் ஒரே பையன் அமெரிக்காவில் வேலை செய்கிறான். ஒரே பெண் துபாயில் செட்டில் ஆகிவிட்டாள். கீழ் போர்ஷனை வாடகை விட்டதில் வாடகை ரூ. 15,000/- வருகிறது. எனக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. இண்டு பேப்பரில் ஒரு வரி விடாமல் படிப்பேன். TVயில் கிரிக்கெட் நியூஸ், டிஸ்கவரி சேனல் மட்டும்தான் பார்ப்பேன்.

“வாழ்க்கையில் ஒருவன் நாலு பேர் மதிக்கிற மாதிரி வாழ வேண்டும். நாலு பேரை பார்த்து வாழ வேண்டும்” என்று சொல்வார்கள். என்னை பொறுத்தவரை அந்த நாலு பேர் என்பது, நான், என் மனைவி, என் பையன், என் பெண் மட்டுமே. அவர்களைப் பற்றியே எப்போதும் நினைத்துக் கொண்டு இருப்பேன். ஜல்லிக்கட்டு, நீட் தேர்வு, 8 வழிச்சாலை… இதைப் பற்றி எல்லாம் பேச மாட்டேன். பேசினால் வாக்குவாதம் வந்துவிடும். கிரிக்கெட் பார்ப்பேன். ஆனால் அதைப் பற்றி யாரிடமும் பேச மாட்டேன். பேசினால் தோனி கட்சி, விராட் கட்சி என்று ஏதாவது பிரச்னை வரும். எதற்கு வீண் வம்பு? பேசி என்ன பயன்? என்னைப் பொறுத்தவரை உலகில் இரண்டே பிரச்னைதான் முக்கியம். ஒன்று பென்ஷன் 1ந்தேதி வந்து விட வேண்டும்.

முதல் தேதி அன்றே பேங்குக்கு போய் பாஸ் புக்கில் என்ட்ரி போட்டு வந்து விடவேண்டும். ஆனால் பணம் எடுக்க மாட்டேன். எனக்கு வீட்டு வாடகையே போதும். இரண்டாவது இண்டேன் கேஸ் புக் செய்தால் கரெக்டாக வந்து விட வேண்டும். என்னிடம் இரண்டு சிலிண்டர் கேஸ் உண்டு. அதுவே எனக்கு அறுபது நாளைக்கு வரும். ஆனால் ஒன்று போனால், உடனே இன்னொன்றை புக் செய்து விடுவேன். இவைகளை தவிர வேறு எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டேன்.

பஸ்ஸில் உட்கார்ந்து போகும் போது யாராவது கண் தெரியாதவர்கள் என் அருகில் நின்றால், எனக்கு எரிச்சலாக இருக்கும். அவர்கள் என்னை விட்டு நகரும் வரை தவிப்பாக இருக்கும். இவர்கள் ஏன் வெளியே வருகிறார்கள் என்று தோன்றும். இவர்கள் சாலையில் கடக்கும் போது பஸ் சிறிது மெதுவாக செல்லும். அதுவே எனக்கு கோபத்தை தரும். நான் யாரிடமும் உதவி கேட்க மாட்டேன். யாருக்கும் உதவி செய்ய மாட்டேன். இதுதான் எனது கொள்கை.

சரி, இப்போது கதையை மேலே படியுங்கள். ஒரு நாள் எனது கண் ஒரே உறுத்தலாக இருந்தது. எரிச்சல் வேறு. எங்கள் ஆவடி பகுதியில் BLUE SKY கண் மருத்துவமனை பிரபலமானது. டாக்டர் பாபு தங்கம் மிக நல்லவர். அவரிடம் சிகிச்சைக்காக சென்றேன். சுமாரான கூட்டம். உங்களுக்குத் தெரியும். கண் ஆஸ்பத்திரியில் முதலில் ஒரு டிராப் விடுவார்கள். அதற்குப் பின்பு தான் டாக்டரை பார்க்க முடியும். பரிசோதனை முடிந்து வெளியே வந்தேன்.

“ஒன்றும் பெரிய பாதிப்பு இல்லை. சாதாரண மாத்திரைகளை சாப்பிட்டால் போதும்” என்றார் டாக்டர்.ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வரும் முன் ஒரு நர்ஸ். “ெகாஞ்ச நேரம் உட்கார்ந்து விட்டு போங்கள். கண்கள் பளிச் சென்று இருக்கும். கண்களை திறக்க முடியாது” என்றார். நான் அவரை அலட்சியமாக பார்த்துவிட்டு வெளியே வந்தேன். ரோட்டில் இறங்கியவுடன் கண்களை திறக்கவே முடியவில்லை. செருப்பே போட முடியவில்லை. பெட்ரோமாக்ஸ் லைட் கண் அருகே இருப்பது போல இருந்தது.

சூரியனே அருகில் இருப்பது போல் தோன்றியது. சுமார் பத்து அடி நடந்ததும் அங்கு ஒரு கடை பூட்டி இருந்தது. அதன் வாசலில் உட்கார்ந்தேன். அங்கு ஒரு பெரிய கூடை இருந்தது. அதன் மீது சாய்ந்து உட்கார்ந்தேன். ஒரே துர் நாற்றம். வேறு வழி இல்லை. அப்போது ஒரு கிழவி வந்தாள் “என்ன சாமி! கருவாட்டு கூடை மேல் படுத்து இருக்கே” என்றாள். நான் சுத்த சைவம். ஆசாரமான பிராமணன் வேறு. “கண்ணில் மருந்து விட்டுண்டேன், கண்ணை திறக்க முடியல” என்றேன். “ஆமா, எங்க போகணும் நீ” என்றாள். “அல்லிக்குளம்” என்றேன். அவள் என் கையை பிடித்துக் கொண்டு, சாலையை கடந்து பஸ் ஸ்டாப்பிங்கில் விட்டு, பார்த்து போ என்றாள்.

கண்களை திறந்து அவளுக்கு நன்றிகூட சொல்லவில்லை. நிறைய பஸ்கள் வந்தன. கூட்டம் வேறு. ஏறமுடியல. எங்கள் பகுதியில் ஷேர் ஆட்டோ நிறைய உண்டு. ஒரு ஷேர் ஆட்டோ வந்தது. “எங்க போற சாமி” என்றான் ஆட்டோக்காரன்.

“அல்லிக்குளம்” என்றேன்.
“சரி ஏறு 15 ரூபாய் என்றான்.”
எனக்கு தெரியும் எங்கள் ஊருக்கு 10 ரூபாதான் என்று.

ஆனால் என்ன செய்வது? வேறு வழியில்லை. ஏறி உட்கார்ந்தேன். ஆட்டோவில் வரும் போது கண்ணே திறக்க முடியவில்லை. எங்கள் அல்லிக்குளம் ஸ்டாப்பிங் வந்ததும் அவனே என்னை இறக்கிவிட்டான்.

20 ரூபா நோட்டை கொடுத்தேன். அவன் மீதி சில்லறை 5 ரூபா இல்லை என்றான். அவனிடம் வாக்குவாதம் செய்ய நேரம் இல்லை. சரி போ என்றேன். அவனிடம் சில்லறை நிறைய இருந்தது. ஆனால் கொடுக்க மனம் வரவில்லை. என்னுடைய நிலைமையை அவன் பயன்படுத்திக் கொண்டான். இறங்கிய இடத்திலேயே நின்றேன். ஓரடி கூட நகர முடியவில்லை. அப்போது எங்கள் தெருவுக்கு ரெகுலராக வரும் காயலான் கடைக்காரன் மூன்று சக்கர வண்டியில் வந்தான். அவனுக்கு என்னை நன்றாகத் தெரியும். “எங்க அய்யரே! வீட்டுக்குப் போகணுமா?” என்றான்.

“ஆமாம்ப்பா கண்ணில் டிராப் போட்டுக் கொண்டேன். கண்ணை திறக்கமுடியல” என்றேன். வண்டி காலியாக இருந்தது. உடனே அவன் “ஏறு வண்டியிலே வீட்டுக்குப் போகலாம்” என்று ெசான்னான். அந்த காயலான் கடை வண்டியில் ஏறி வீடு வந்து சேர்ந்தேன். உள்ளே நுழைந்ததும் ஃபேனை போட்டுக் கொண்டு படுத்துவிட்டேன். தூக்கம் வரவில்லை. அப்போது நினைத்துப் பார்த்தேன். ஒரு நாள் ஒரு மணி நேரம் கண் தெரியாமல் இருப்பதற்கே இத்தனை கஷ்ட பட்டோமே! பல பேருடைய உதவி தேவைப்பட்டதே. நிரந்தரமாக கண் தெரியாதவர்கள், பிறவியிலே கண் தெரியாதவர்கள் எத்தனை கஷ்டம் அடைவார்கள்? ஒரு மனிதன் மற்றொரு சக மனிதனையே பார்க்க முடியவில்லை என்பது எவ்வளவு சோகம்? கொடூரம்? அப்பா, அம்மா, கடல், மலை, கோயில் என்று எதையும் பார்க்க முடியவில்லை என்பது எவ்வளவு பெரிய துயரம்?

இவர்கள் இப்படி என்றால், பாதிவயசிலே பார்வை போவது எவ்வளவு கொடுமை? எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, திடீரென்று ஒன்றையும் பார்க்க முடியவில்லை என்பது எண்ணிப் பார்க்க முடியாத சோகம். அப்போது என்னை நினைத்து நானே வெட்கப்பட்டு கொண்டேன். கண் பார்வையற்றவர்களைப் பற்றி, எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கோமா? அவர்கள் மீது அனுதாபம் கொண்டு இருக்கோமா! அப்போதே ஒரு முடிவுக்கு வந்தேன்.

இனிமேல் இவர்களைப் பார்த்தால் நம்மால் முடிந்த உதவியை அவர்களுக்கு செய்வது, பஸ்ஸில் நின்றால் அவர்களை உட்கார வைப்பது. ரோட்டை கடந்து செல்ல உதவி செய்வது. அவர்கள் ஏதாவது சிறு சிறு பொருட்கள் விற்றால் ஒரு ரூபாஇரண்டு ரூபா அதிகம் என்றாலும் வாங்குவது என முடிவு செய்தேன். முக்கியமாக மறுநாள் என் மனைவியை அழைத்துக் கொண்டு அரசு கண் மருத்துவமனைக்கு சென்று எங்கள் இரண்டு கண்களையும் தானம் செய்தேன். உலகில் ஒரு மனிதன் மற்றொரு மனிதன் உதவி இல்லாமல் வாழ முடியாது என்று தெரிந்து கொண்டேன். ஒரு கோடீஸ்வரனுக்கும் ஏழை வேலைக்காரன் வேண்டும். ஒரு சர்வாதிகாரிக்கும் ஒரு பாதுகாப்பு வீரன் வேண்டும்
அல்லவா!

தொகுப்பு: ஆர்.சேஷாத்திரி

The post சிறுகதை-கண்ணிலே அன்பிருந்தால்… appeared first on Dinakaran.

Tags : Kannile Anbi Ifla ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...