×

வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!

நன்றி குங்குமம் தோழி

நாட்டு மருந்து என்பது பாரம்பரிய மூலிகைகள், வேர்கள், காய்கள் மற்றும் இலைகள் போன்ற இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இவை பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருந்துகள் செய்ய அடிப்படை மூல பொருட்கள்தான் நாட்டு மருந்துகள். பெண்கள் அதிகம் இல்லாத இந்த நாட்டு மருந்து தொழிலில் சில புதுமைகளை புகுத்தி ‘திருப்தி ஹாஷ்டாக்’ என்ற பெயரில் நாட்டு மருந்து கடை ஒன்றை நிர்வகித்து வருகிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த மேனகா சந்திரசேகர்.

‘‘பல வருடங்களாக எங்களோட ஃபேமிலி பிசினஸ் நாட்டு மருந்து தொழில் தான். அடுத்த தலைமுறையை சேர்ந்த நாங்க தான் எடுத்து நடத்தணும் என்கிற கட்டாயம் ஏற்பட்ட போது, இதை எப்படி புதுமையா நடத்தலாம் என்று சிந்தித்தேன். இது எங்களின் குடும்பத்தொழில் என்பதால் 45 வருடங்களுக்கு மேலாக நாங்க இந்த நாட்டு மருந்து தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். என் மாமனார் அவங்க அப்பா என எல்லாருமே நாட்டு மருந்துதான் தலைமுறை தலைமுறையா செய்து வருகிறார்கள்.

இப்போது நாங்களும் புதிய பிராண்ட் ஒன்றை உருவாக்கி புதுமையான முறையில் கடை ஒன்றை அமைத்து அதனை நிர்வகித்து வருகிறோம். இந்த மூன்று வருடங்களில் இரண்டு கிளைகள் துவங்கி இணைய தளத்திலும் வெற்றிகரமாக விற்பனை செய்து வருகிறோம்.இங்க தயாரிக்கப்படும் மருந்துகள் அனைத்தும் எங்களின் சொந்த தயாரிப்புகள்தான். 80க்கும் மேலான பொருட்கள் எங்களிடம் உள்ளது. மூலிகை குடிநீர் (தாகசாந்தி), மூலிகை தாம்பூலம், கோல்டன் ஃபேஸ் பேக், மூலிகை எண்ணை, நலங்கு மாவு, நலங்கு மாவு சோப்பு, குல்கந்து, பன்னீர், சுகர் டீ, ஃபேஸ் ஆயில், சளி இருமல் சூரணம், வாஸ்து தூபம் பவுடர், பாரம்பரிய ஹேர் மாஸ்க் என பல பொருட்களை அதற்கான மூலிகைகள் கொண்டு தயாரித்து விற்பனை செய்கிறோம்’’ என்றவர் அவர்கள் தயாரிக்கும் மூலிகைகள் பற்றி விவரித்தார்.

‘‘மூலிகை குடிநீர்தான் எங்க பிராண்டின் முதல் தயாரிப்பு. நம்முடைய பாரம்பரிய மூலிகைகளான சுக்கு, ஏலக்காய், கிராம்பு, சீரகம், நன்னாரி, மல்லி இன்னும் பல பொருட்களை சேர்த்துதான் இதை தயாரிச்சிருக்கோம். இந்த மூலிகை குடிநீரை இங்கு தஞ்சாவூரில் உள்ள பிரபல ஓட்டலுக்கு நாங்க ரெகுலரா சப்ளை செய்து வருகிறோம். அங்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பாட்டில் தண்ணீருக்கு பதில் இந்த மூலிகை தண்ணீரைதான் குடிக்க கொடுக்கிறாங்க. அந்த ஓட்டலில் உணவுகளையும் பாரம்பரிய முறையில் விறகு அடுப்பில்தான் சமைக்கிறார்கள். உணவு சாப்பிடும் போது அருந்த மட்டுமில்லை, அவர்கள் வாங்கிச் செல்லவும் இந்த மூலிகை குடிநீரை பாக்கெட்டில் விற்பனை செய்கிறார்கள்.

1/4 லிட்டர் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, பின்பு அடுப்பை அணைத்து விட்டு அதில் மூலிகை குடிநீர் பொடியினை ஒரு ஸ்பூன் அளவு போட்டு அரை மணி நேரம் மூடி வைக்கவும். பிறகு அதை வடிகட்டி 3 லிட்டர் சாதாரண குடிநீர் (அ) வெந்நீரில் கலந்து குடிக்கலாம். மறுநாள் வரை வைக்காமல் அன்றே பயன்படுத்தி விட வேண்டும். இந்த மூலிகை குடிநீர் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடம்பை வறட்சித்தன்மை இல்லாம் வைத்துக்கொள்ள உதவும். சருமம் பளபளப்பாக இருக்கும், வயிறு புண், வயிறு பிரச்னைகளை சரி செய்யும், பெண்களுக்கு கர்ப்பப்பைக்கு வலு சேர்க்கும்.

எங்களின் புதுமையான தயாரிப்பு தான் மூலிகை பீடா. ஓட்டல்கள் மற்றும் திருமண விழாக்களில் பீடா கண்டிப்பாக இருக்கும். இது அதுபோல் இருக்காது. முழுக்க முழுக்க மூலிகை பொருட்களை மட்டுமே கொண்டு தயாரித்து இருக்கிறோம். வெற்றிலை மற்றும் குல்கந்து சேர்த்து சாப்பிடும் பொழுது ஒரு நல்ல சுவையான பீடா சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். குழந்தைகளுக்கும் சளிக்கான மருந்தாகவும் தரலாம். வயிறு உப்புசம், நெஞ்செரிச்சல், செரிமான கோளாறுக்கு இந்த பீடாவை சாப்பிடலாம். நாட்டு மருந்து பொடிகளை அரைத்து தேன் கலந்து லேகியம் மாதிரியான ஒரு பதத்தில் தருகிறோம்’’ என்றவர் மூலிகை ெபாருட்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக தெரிவித்தார்.

‘‘எங்களுக்கு தஞ்சாவூரில் மட்டுமில்லாமல் சென்னையிலும் கடை உள்ளது. இரண்டு இடத்திலும் சில்லரை மட்டுமில்லாமல் மொத்த வியாபாரமாகவும் பொருட்களை விற்பனை செய்து வருகிறோம். எங்களின் தனிப்பட்ட தயாரிப்புகள் மட்டுமில்லாமல் அனைத்து நாட்டு மருந்து பொருட்களும் கடைகளில் கிடைக்கும். மக்களிடையே இப்போது மூலிகை பொருட்கள் மேல் அதிக அளவு நம்பிக்கை ஏற்பட்டு வருகிறது. கோவிட் தாக்கத்திற்கு பிறகு பாரம்பரியத்தையும் நம்முடைய பழைய பயன்பாட்டு முறைகளையும் மக்கள் தேடி வருகிறார்கள்.

அதனால்தான் நாட்டு மருந்து, மூலிகை பொருட்கள் மற்றும் ஆர்கானிக் பொருட்கள் மேல் மக்கள் தனிப்பட்ட கவனம் செலுத்துகிறார்கள். இது ஒரு நல்ல மாற்றம் தான். என்னதான் நாம் அதனை நோக்கி பயணித்தாலும், மூலிகை மருந்துகள் குறித்த புரிதல்கள் மக்களுக்கு அவசியம் வேண்டும். அதனால் அது குறித்த விழிப்புணர்வினை மக்கள் மனதில் மேலும் ஏற்படுத்த வேண்டும் மற்றும் பல இடங்களில் நாட்டு மருந்து கடைகளை திறக்கணும் என்பது எனது கனவு.

நான் இந்த தொழிலுக்கு வர முக்கிய காரணம் என் மாமனார்தான். அவரிடம் நான் இதனை எடுத்து செய்கிறேன்னு சொன்ன போது அவரும் என் கணவரும் எனக்கு முழு ஆதரவு கொடுத்தாங்க. அதனால் முதலில் நாட்டு மருந்து குறித்து நான் முழுமையாக தெரிந்து கொண்டேன். அதன் பிறகுதான் நிர்வாகப் பொறுப்பினை ஏற்றேன். வீட்டில் உள்ளவர்கள் ஆதரவுக்கரம் நீட்டும் போது கண்டிப்பாக எந்த தொழிலிலும் பெண்கள் முன்னேற முடியும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். அதுதான் என்னை இவ்வளவு தூரம் பயணிக்க வைத்துள்ளது’’ என்றார் மேனகா சந்திரசேகர்.

தொகுப்பு: தனுஜா ஜெயராமன்

The post வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி! appeared first on Dinakaran.

Tags : India ,Dinakaran ,
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...