×

தங்கவயலில் விஷதன்மை கொண்ட தண்ணீர் சுத்திகரிக்கப்படாத குடிநீரால் பொதுமக்கள் பாதிப்பு: தீர்வு வேண்டும் என கோரிக்கை

தங்கவயல்: தங்கவயலில் விஷத்தன்மை கொண்ட தண்ணீர் பயன்படுத்துவதால் ஆயிரக்கணக்கானோர்  மூட்டு வலியால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.  தங்கசுரங்கம் இயங்கி வந்த சமயத்தில் சுரங்க தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் வாழும் மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தொழிலாளர் குடும்பங்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்பதற்காக பேத்தமங்களம் ஏரி உருவாக்கியதுடன், ஏரியில் இருந்து வெளியே எடுக்கும் தண்ணீரை சுத்தகரிப்பதற்காக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய நீர் சுத்திகரிப்பு நிலையம் இங்கிலாந்து நாட்டின் தொழில்நுட்பத்தில் அமைத்திருந்தனர். அதில் சுத்திகரிக்கப்படும் தண்ணீர் ராட்சத பைப்புகள் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டது. தங்கச்சுரங்க நிறுவனம்: இது தவிர சுரங்கத்தில் இருந்து வெளியேற்றிய தண்ணீரை நேரடியாக மக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க, ஒவ்வொரு பகுதியில் பெரிய டாங்க் அமைத்தனர். அதில் தண்ணீர் நிரப்பி பிளீச்சிங் பவுடர் உள்பட பல கிருமிகள் அழிக்கும் ரசாயன கலவை பயன்படுத்திய பின் குழாய்கள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது. அதை பயன்படுத்திய மக்கள் எந்த விதமான நோய் பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். தங்கச்சுரங்கம் மூடப்பட்ட பின் தொழிலாளர் குடியிருப்புகள் முற்றிலும் மாறிவிட்டது. மக்களுக்கான அடிப்படை வசதிகள் கேள்வி குறியாகியுள்ளது.

விஷத்தண்ணீர்: மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கிறோம் என்ற பெயரில் போர்வெல் தோண்டி அதில் கிடைக்கும் தண்ணீரை சுத்திகரிக்காமல் நேரடியாக வினியோகம் செய்கிறார்கள். அதை பயன்படுத்தும் மக்கள் கொடிய நோய்கள் தாக்கி ஆபத்தான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். இது மிக பெரிய சமூக பிரச்னையாக இருந்தும் மக்கள் பிரதிநிதியாக இருப்பவர்கள் கண்டுக்கொள்ளாமல் போர்வெல் தோண்டி தண்ணீர் கொடுக்கிறோம் என்று மார் தட்டி கொள்கிறார்களே தவிர, சுத்திகரிக்காமல் வழங்கப்படும் தண்ணீரை பயன்படுத்துவதன் மூலம் மக்கள் அனுபவித்து வரும் பேராபத்தை உணராமல் உள்ளனர். டாக்டர்கள் ஆய்வு: சமீபத்தில் மருத்துவ குழுவினர் நடத்தியுள்ள ஆய்வில், தங்கவயலில் கடந்த 15 ஆண்டுகளில் சுத்திகரிக்காமல் புளோரைட் அமிலம் கலந்த தண்ணீரை பயன்படுத்துவதன் மூலம் பல பெண்களுக்கு கர்ப்ப பை பாதிப்பு ஏற்பட்டுள்ளனர். பலர் அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பபை இழந்துள்ளனர். திருமணமான பெண்கள் குழந்தை பேறு இல்லாமல் கர்ப்பபை பாதிக்கப்பட்டுள்ளது. பலருக்கு கருமுட்டைகள் குழந்தை பாக்கியம் கொடுக்க முடியாத வகையில் பலவீனமாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. சுரங்க குடியிருப்பு பகுதியில் ஒரு வட்டாரத்தில் குறைந்த பட்சம் 1 முதல் 5 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டும், பத்துக்கும் மேற்பட்டவர்கள் சிறுநீரக கோளாறு, நுரையீரல் பாதிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலருக்கு மஞ்சள் காமாலை தாக்கியுள்ளது. சிலரின் பற்கள் வெண்மை நிறம் மாறி, மஞ்சளாகி வருகிறது.

கை, கால்கள் முடக்கம்: இந்நிலையில் கடந்த இரண்டாண்டு காலமாக தங்கவயலில் உள்ள ஆயிரக்கணக்கானோர் கால் பாதம், கை, கால்களின் மூட்டு வலியால் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இந்த பாதிப்பு டெங்கு, மலேரியா, சிக்குன் குன்யா நோயால் வருவதாக நினைத்து சிகிச்சை பெற்று வந்தனர்.  பாதிப்பு தொடர்பாக டாக்டர்கள் குழுவினர் நடத்தியுள்ள ஆய்வில், மேற்கண்ட பாதிப்புகள் கொசு கடிப்பதால் வருவது 10 முதல் 20 சதவீதமாக இருந்தால், சுத்தகரிக்கப்படாத தண்ணீர் பயன்படுத்துவதன் மூலம் தான் அதிகம் பாதிப்பு இருப்பதாக கண்டறிந்துள்ளனர். இதே நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில்  கை, கால் முடங்கி வீட்டில் தங்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்படும் ஆபத்துள்ளதாக டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள்.

கர்நாடக மாநில அரசு வரும் 2020ம் ஆண்டுக்குள் மாநிலம் முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் நகர பகுதிகளை காட்டிலும் ஊரக பகுதியில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோக மையம் அமைக்கப்பட்டுள்ளது. போர்வெல் தோண்டி அதில் கிடைக்கும் தண்ணீரை தொட்டியில் நிரப்பி சுத்திகரித்து வழங்கி வருகிறார்கள். மக்கள் தேவைக்கு ஏற்ப கட்டணம் செலுத்தி குடிநீர் பெற்று வருகிறார்கள். இதனால் சுகாதாரமான வாழ்க்கை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. நகர பகுதியிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தங்கவயலில் ஒவ்வொரு குடியிருப்பு பகுதியிலும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். போர்வெல் மூலம் கிடைக்கும் தண்ணீரை அதில் நிரப்பி சுத்திகரித்து மக்களுக்கு வழங்க வேண்டும். இப்படி செய்யாமல் அலட்சியம் காட்டினால் ஒவ்வொருவராக பலவிதமான கொடிய நோய்களால் பாதிக்கப்படுவதை தடுக்க முடியாது.

Tags : Goldfields , In Goldfields, water is untreated, drinking water, public, vulnerability
× RELATED தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில்...