×

மனுதாக்கல் முடிந்த நிலையில் பணம், மது சப்ளையை தடுக்க தமிழகத்தில் வருமானவரி அதிகாரிகள் சோதனையை தீவிரப்படுத்த திட்டம்: சிறப்பு தேர்தல் செலவின பார்வையாளர் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் முடிந்துள்ள நிலையில், பணம் பட்டுவாடா மற்றும் மதுபானம் சப்ளையை தடுக்க வருமான வரி அதிகாரிகள் சோதனையை தீவிரப்படுத்த சிறப்பு தேர்தல் செலவின பார்வையாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. வழக்கமாக, தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் சமயங்களில், ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதுபற்றி தேர்தல் ஆணையத்துக்கு அதிகளவில் புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.

கடந்த 2, 3 தேர்தல்களில் கூடுதல் பார்வையாளர்கள், சிறப்பு பார்வையாளர்கள் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குறிப்பாக வருமான வரித்துறை உயர் அதிகாரிகள் தமிழகம் வந்து, அதிரடி சோதனைகளை நடத்தினர். இதன்மூலம் சில தொகுதிகளில் தேர்தல் கூட நிறுத்தப்பட்ட சம்பவங்களும் உண்டு. இந்நிலையில், தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலிலும் ஆளுங்கட்சியினர் பணம் பட்டுவாடா செய்வது குறித்து ஆதாரத்துடன் தேர்தல் ஆணையத்துக்கு எதிர்க்கட்சியினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் புகார் அளித்து வருகிறார்கள்.

இதையடுத்து சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் தேர்தலின்போது பணம் மற்றும் மதுபானம் வகைகளை பறிமுதல் செய்வதை தீவிரமாக கண்காணித்து செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், சிறப்பு தேர்தல் செலவின பார்வையாளர் மது மகாஜன் (ஐஆர்எஸ் ஓய்வு), மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆணையர் கிர்லோஷ் குமார், அமலாக்கத்துறை சிறப்பு காவல் துறை தலைமை இயக்குநர் கரன் சின்ஹா, காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் ராஜீவ்குமார், தமிழ்நாடு மாநில வாணிப கழகம் மேலாண்மை இயக்குநர் மோகன், அமலாக்கத்துறை ஐஜி செந்தாமரை கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில், தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை முற்றிலும் தடுக்க அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் போலீசார் பறக்கும் படை மற்றும் தேர்தல் பார்வையாளர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும், தேர்தல் ஆணையத்துக்கு வரும் புகார்கள் குறித்து உடனடி சோதனை நடத்தப்பட வேண்டும், தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு சப்ளை செய்ய அதிகளவில் மதுபானங்கள் பதுக்கப்படுவதாகவும் தகவல் வருகிறது. அதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் தினசரி விற்பனையை கண்காணிக்க வேண்டும், பணம் பதுக்கி வைத்துள்ளவர்கள் பற்றி தகவல் கிடைத்தால், வருமான வரி துறை அதிகாரிகள் உடனடியாக சோதனையில் ஈடுபட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை சிறப்பு தேர்தல் செலவின பார்வையாளர் மதுமகாஜன் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Tags : Tamil Nadu , Plan to intensify Income Tax authorities' probe in Tamil Nadu to curb supply of cash and liquor after completion of petition: Special Election Expenditure Observer Order
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...