புதுடெல்லி: கேரளாவில் பாஜ கட்சி பெரிய போட்டியாளரும் இல்லை, அக்கட்சிக்கு வரும் ஸ்ரீதரனால் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து விடாது என காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கூறி உள்ளார். கேரள மாநிலத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜ ஒரு இடத்தில் வென்றுள்ளது. இந்தநிலையில் ‘மெட்ரோ மேன்’ என அழைக்கப்படும் பொறியியல் வல்லுநர் ஸ்ரீதரன் பாஜவில் இணையப் போவதாக கூறி உள்ளார். அவரது வரவால் பாஜ அம்மாநிலத்தில் 3வது பெரிய கட்சியாக வளர்ச்சி அடையும் என கூறப்படுகிறது.
இது குறித்து காங்கிரஸ் எம்பியும் மூத்த தலைவருமான சசிதரூர் கூறியதாவது: மெட்ரோ மேன் என்று பேசப்படும் ஸ்ரீதரன் அரசியலுக்கு வருவது வியப்பாக இருந்தது. அவர் அரசியல் அனுபவம் இல்லாதவர். அரசியல் பின்புலமும் இல்லை. அப்படி இருக்கும் போது அவரால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மிகக்குறைவான தாக்கத்தைத்தான் ஏற்படுத்த முடியும். அரசியல் உலகம் மிகவும் சிக்கலானது. நான் 53 வயதில் அரசியலுக்குள் வந்தேன். எனக்கு போதுமான தகுதி இருப்பதாக உணர்ந்தாலும்கூட, பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தாமதித்துவிட்டேன் என நினைக்கிறேன். அப்படியிருக்கும் போது 88 வயதில் அரசியலுக்குள் வரும் ஸ்ரீதரனை என்ன சொல்ல முடியும். கேரளாவை பொறுத்த வரை பாஜ தீவிரமான போட்டியாளர் அல்ல. கடந்த தேர்தலில் பாஜ வென்ற ஒரு இடத்திற்கு மேல் வென்றாலே பெரிய விஷயம்தான். இவ்வாறு அவர் கூறினார்.
