திருமலை: தலைபொங்கல் பண்டிகை கொண்டாட வந்த புதுமாப்பிள்ளைக்கு 125 வகையிலான அறுசுவை விருந்து வைத்து அவரது மாமியார் அசத்தியுள்ளார். ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டம் சம்பிரதாய கலாச்சாரங்களுக்கு மிகவும் பெயர் பெற்றதாகும். இங்குள்ள மக்கள் பெரும்பாலும் முந்தைய கலாச்சாரங்களை கடைபிடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். குறிப்பாக தமிழகத்தை போன்று விருந்தோம்பல் மற்றும் புது மாப்பிள்ளைக்கு மாமனார் வீட்டில் தடபுடல் விருந்து கொடுத்து அசத்துவது போன்றவை பிரசித்தம் ஆகும். அதன்படி சில ஆண்டுகளுக்கு முன் தீபாவளி பண்டிகைக்கு மாமியார் வீடு வந்த புதுமாப்பிள்ளைக்கு 101 பலகாரங்கள், சிற்றுண்டி, அசைவ உணவு என பரிமாறி அசத்தினர்.
இது சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதேபோன்று தற்போது மேற்கு கோதாவரி மாவட்டம் பீமவரத்தில் சங்கராந்தி (தலை பொங்கல் பண்டிகை) கொண்டாட மாமியார் வீடு வந்த புதுமாப்பிள்ளைக்கு 125 வகையிலான உணவு பரிமாறப்பட்டது. மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஒரு 29 வயது வாலிபர். வியாபாரம் செய்து வரும் இவருக்கும் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த மாதம் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது. இதையடுத்து தலை சங்கராந்தி பண்டிகை கொண்டாட புதுமாப்பிள்ளை, மனைவியுடன் தனது மாமியார் வீட்டுக்கு வந்தார்.
தனது மருமகனுக்கு பல்வேறு வகையிலான உணவை பரிமாற வேண்டும் என்று அவரது மாமியார் திட்டமிட்டு பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே அதற்கான பணியில் ஈடுபட்டார். அதன்படி மசாலா இட்லி, மசாலா தோசை, நெய் ரோஸ்ட், பூரி, சப்பாத்தி, பரோட்டா, கிச்சடி, டோமேட்டா பாத், கேசரி, முறுக்கு, சீடை, அதிரசம் உள்பட பல்வேறு வகையான இனிப்புகள் என 125 வகையிலான உணவை தயாரித்தார். இவற்றை பொங்கலுக்கு வந்த மருமகனுக்கும், தனது மகளுக்கும் பரிமாறினார். இதை பார்த்த புதுமாப்பிள்ளை எதை சாப்பிடுவது, இவ்வளவையும் சாப்பிட முடியுமா என்று திக்குமுக்காடிய நிலையில் மேலும் ஐஸ்கிரீம் மற்றும் பல்வேறு வகையான பழங்களையும் கொடுத்தார்.
இதை அருகில் இருந்தபடியே அவரது இளம்மனைவி பார்த்து ரசித்தார். இந்த காட்சிகள் தற்போது ‘புதுமாப்பிள்ளைக்கு மாமியார் வைத்த விருந்து’ என தலைப்பிட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் நகைச்சுவையாக கருத்து பதிவு செய்து வருகின்றனர்.