நன்றி குங்குமம் தோழி
புதிதாக திருமணம் ஆன ஒரு ஜோடி மாப்பிள்ளையின் சொந்த ஊருக்கு செல்ல ரயிலில் பயணம் செய்கிறார்கள். அதே ரயிலில் மேலும் இரண்டு புதுமண ஜோடிகள். மணப்பெண்ணிற்கு சிவப்பு நிற புடவை மற்றும் அதே நிறத்தில் முக்காடு என்றால், மணமகனுக்கு பிரவுன் நிறத்தில் கோட் சூட்.
இதுதான் அங்கு பெரும்பாலும் மணமக்களின் உடை. கிராமங்களில் குறிப்பாக வட இந்தியாவில் உள்ள கிராமங்களில் திருமணமான பெண்கள் தலைக்கு மேல் கூங்கட் (முக்காடு) அணிவது வழக்கம். அதுவும் புதிதாக திருமணமான பெண்கள் என்றால், அவர்கள் முகம் முழுதும் மறைக்கும் அளவிற்கு முக்காடினை அணிந்து தலைகுனிந்த நிலையில் தான் இருக்க வேண்டும். சொல்லப்போனால் அவர்களால் அவர்களின் கால் விரல்கள் மட்டும்தான் பார்க்க முடியும். அந்த அளவிற்கு முக்காடு அவர்களின் முகத்தினை மறைத்திருக்கும்.
கங்காபூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஃபூல்குமாரியை மணக்கிறார் தீபக்குமார். மணமக்கள் இருவரும் கிராமத்தில் இருந்து ரயில் நிலையத்திற்கு செல்ல சைக்கிள், பஸ் என பல பயணம் மேற்கொண்டுதான் மணமகனின் ஊருக்கு செல்லும் ரயிலினை பிடிக்கிறார்கள். அவர்கள் பயணிக்கும் அதே ரயிலில் ஏற்கனவே இரண்டு புதுமண தம்பதிகள் பயணிக்கிறார்கள். சிறிய இடைவேளையின் போது மணப்பெண்கள் இடம் மாறி அமர்ந்துவிடுகிறார்கள்.
தீபக் தன் கிராமம் வந்தவுடன் ஃபூல்குமாரி என்று நினைத்து வேற ஒரு பெண்ணை அழைத்து சென்றுவிடுகிறார்கள். அவர்கள் வீட்டிற்கு சென்ற பிறகு ஆரத்தி எடுக்க முக்காட்டினை நீக்கும் போது தான் ஃபூல்குமாரி இல்லை ஜெயா என்றும், மணப்பெண் மாறி இருப்பது அனைவருக்குமே தெரிய வருகிறது. தீபக்குடன் சென்ற ஜெயா சில மர்மமான வேலைகளை செய்கிறார். யார் அந்த பெண்? அந்தப்பெண்ணின் பின்னணி என்ன? தீபக் தன் மனைவியுடன் இணைந்தாரா? என்பது தான் மீதி கதை. இந்தி படமான இந்தப் படம் திரையரங்கில் வெளியாகி தற்போது நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
இந்தப் படத்தை இயக்கியவர் நடிகர் அமிர்கானின் முன்னாள் மனைவி கிரண் ராவ். படத்தினை அமிர்கானின் தயாரிப்பு நிறுவனம்தான் தயாரித்துள்ளது. படம் முழுக்க குடும்ப அமைப்பில் இருக்கும் பெண்கள் எவ்வாறெல்லாம் நடத்தப்படுகிறார்கள். குடும்பத்தில் உள்ள பெண்களின் நிலை குறித்து ஒவ்வொரு காட்சியிலும் பேசியிருக்கிறார்கள். கதையின் கரு சிறியது என்றாலும். இந்தப் படத்தின் முக்கியமான பலம் என்றால் அது படத்தின் வசனங்கள்.
பிரச்சார தொனி இல்லாமலும் கருத்து சொல்கிறேன் என்று இழுக்காமலும் கதையோட்டத்தின் இயல்பிலேயே பெண்களின் நிலை குறித்து வசனங்கள் கூர்மையாக எழுதப்பட்டுள்ளன. படத்தில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் மனதில் நிற்கிறது. ஃபூல்குமாரியாக வரும் நிதான்ஷி, ஜெயாவாக நடித்துள்ள பிரதீபா ரான்தா, டீ கடை நடத்தும் சைய்யா கடம் ஆகியோரின் நுட்பமான நடிப்பு கவனம் பெறுகிறது. வடமாநிலத்தின் பின்தங்கிய கிராமத்தினை நெருக்கமாக படம்பிடிக்கிறது விகாஷின் கேமரா.
2001ம் ஆண்டு காலகட்டத்தில் நடக்கும் கதை என்பதால் கிராமத்தில் இருக்கும் பெண்கள் குடும்ப அமைப்புகளால் எவ்வாறு நடத்தப்பட்டுள்ளார்கள் என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறது. பெண்களின் விடுதலை பற்றிய தெறிப்புகள் படத்தின் காட்சிகளாக வந்தாலும், அவற்றை கடந்து போக விடாமல் சிந்திக்க வைத்துள்ளார் இயக்குனர்.
தன் கல்விக் கனவை தேடும் ஒரு பெண், பொருளாதார தன்னிறைவோடு தனியாக வாழும் பெண், அப்பாவி பெண் என மூவரின் வாழ்க்கையை எடுத்துக் கொண்டு இதன் வழியாக பெண் விடுதலை குறித்து மிகவும் யதார்த்தமாக பேசியிருக்கிறார். ஜெயாவிடம், தீபக் குடும்பத்தினர் உன் கணவரின் செருப்பு எது என்று அடையாளம் தெரியவில்லை என்று வினவும் போது, அவர், ‘புது கணவன், புது செருப்பு… முகத்தை முழுமையாக மறைக்கும் முக்காடு… இதற்கிடையில் எவ்வாறு அடையாளம் காண்பது’ என்று அவர் கேட்கும் அந்த கேள்வி முக்காடுக்குள் பெண்களின் கனவுகள் மறைக்கப்பட்டு இருப்பதை சம்மட்டியால் அடித்து உணர்த்தி இருக்கிறார்.
அதே சமயம் அப்பாவி பெண்ணான ஃபூல்குமாரியிடம், ரயில் நிலையத்தில் டீ கடை நடத்தி வரும் மஞ்சு மாய், ‘முட்டாளாக இருப்பது வெட்கக்கேடானது அல்ல, ஆனால் முட்டாள் தனத்தை நினைத்து பெருமைப்படுவது அவமானம்’ என்று கூறும் போது கணவனே உலகம் என்று வாழும் பெண்களின் முட்டாள்தனத்தை சுட்டிக்காட்டுகிறது. அதே போல் மஞ்சுமாய் தனியாக வாழ்வது சுதந்திரம் என்பதை, தன் மேல் அன்பு உள்ளவர்களுக்கு அடிக்க உரிமையும் உள்ளது என்ற கணவனின் அதே உரிமையை தான் எடுத்துக் கொண்டதாக கூறுவார். மேலும் தனியாக வாழ ஆரம்பத்தில் பயமாக இருந்தாலும், அதில் மாஸ்டராகிவிட்டால் அதில் கிடைக்கும் சுகமே தனி என்று மஞ்சுமாய் சொல்வது பெண்கள் பொருளாதார ரீதியாக தன்னிறைவுப்பெற வேண்டியதின் அவசியத்தை உணர்த்துகிறது.
படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கும் ஜெயா கதாப்பாத்திரம் குடும்ப அமைப்பிற்குள் இருக்கும் பெண்களுக்கான சுமைகள் பற்றியும் பேசாமடந்தையாக சிக்கியிருக்கும் பெண்களின் நிலை பற்றியும் பேசும் கதாப்பாத்திரமாக இருக்கிறார். தன்னுடைய கணவரின் பெயரை மனைவி சொல்லக்கூடாது என்கிற முறையை உடைத்து துணிந்து தன்னை கல்யாணம் செய்தவரின் பெயரை சொல்கிறார். மேலும் தனக்குப் பிடித்த உணவினை கணவன், மகனுக்காக ஏன் தியாகம் செய்ய வேண்டும். விரும்பியதை சாப்பிட நமக்கு உரிமை உள்ளது என்பதை வெளிப்படுத்தி இருப்பார். சில பெண்கள் தங்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை மறந்துதான் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். இது போன்ற வசனங்கள் இயல்பாக எழுதப்
பட்டிருப்பது படத்தை ரசிக்க வைக்கிறது.
பெண்களை பற்றிய படமென்றாலும் ஆண்தரப்பு நியாயங்களையும் சொல்லாமல் இல்லை. வரதட்சணை வாங்காவிட்டால் ஆணுக்கு உடல் ரீதியாக பிரச்னை உள்ளது என்றும், மனைவியை தொலைத்த கணவனை மற்றவர்கள் பார்க்கும் விதம் என ஆண் தரப்பு பிரச்னைகளையும் பேசியிருக்கிறார்கள். ஆண், பெண் என இரு தரப்பு நியாயங்களையும் மிக இயல்பான திரை மொழியில் பேசியிருப்பதால், இந்தத் திரைப்படம் ஒரு ரசிக்கத்தக்க கலைப்படைப்பாக மாறியிருக்கிறது.
தொகுப்பு: மா.வினோத்குமார்
The post Laapataa Ladies (தொலைந்த பெண்கள்) appeared first on Dinakaran.