ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் வீர மரணமடைந்தார். மோடி 3வது முறையாக பிரதமர் பதவி ஏற்ற கடந்த ஜூன் 9ம் தேதி முதல் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. கடந்த வியாழக்கிழமை(7ம் தேதி) தீவிரவாதிகள் ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் நசீர் அகமது, குல்தீப் குமார் ஆகிய கிராம பாதுகாவலர்களை குந்த்வாரா மற்றும் கேஷ்வான் வனப்பகுதிகளுக்கு கடத்தி சென்று கொன்றனர்.
இதையடுத்து அங்கு மறைந்துள்ள தீவிரவாதிகளை தேடும் பணியில் ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் சில தினங்களாக ஈடுபட்டிருந்தனர். நேற்று கேஷ்வான் வனப்பகுதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள் ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினர் மீது பயங்கர துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதற்கு ராணுவம், காவல்துறை தகுந்த பதிலடி கொடுத்தது. தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ராணுவ வீரர்கள் 4 பேர் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த 16வது படைப்பிரிவை சேர்ந்த ராணுவ இளநிலை அதிகாரி சுபேதார் ராகேஷ் குமார் வீரமரணமடைந்தார்.
The post ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர் வீர மரணம்: 3 வீரர்கள் காயம் appeared first on Dinakaran.