×

கழிவுகள் கலப்பதால் யமுனையில் அம்மோனியா அளவு மீண்டும் அதிகரிப்பு: நடவடிக்கைகோரி சிபிசிபிக்கு ராகவ் சதா வலியுறுத்தல்

புதுடெல்லி: யமுனை ஆற்றில் கழிவுகளை வெளியேற்றுவது குறித்து பலமுறை நினைவூட்டியும்  அரியானாவில் உள்ள தொழிற்சாலைகள் நிறுத்தவில்லை என குற்றம்சாட்டியுள்ள  டெல்லி குடிநீர் வாரிய துணைத்தலைவர் ராகவ் சதா, இந்த விவகாரத்தில் மத்திய  மாசு கட்டுப்பாட்டு வாரியம்(சிபிசிபி) உடனடி தீர்வுக்கான நடவடிக்கைகளை  எடுக்குமாறு வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

யமுனை ஆற்றில்  இருந்து நீர் பெறப்பட்டு அவற்றை சுத்தரித்து டெல்லிக்கு தேவையான குடிநீர்  விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், யமுனையில் கலக்கப்படும் கழிவுநீரால்  ஆற்றில் அம்மோனியாவின் அளவு அதிகரித்து நச்சுத்தன்மை உருவாகிறது. இதுபோன்ற  சூழலில் அந்த நீர் விநியோகம் பாதிப்படைவதாக புகார் கூறப்பட்டது.  குறிப்பாக, அரியானா மாநிலத்தில் உள்ள சில தொழிற்சாலைகளிலிருந்து யமுனையில்  கழிவுகள் வெளியேற்றப்படுவது குறித்து அம்மாநில அரசுக்கு பலமுறை டெல்லி அரசு  சுட்டிக்காட்டியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று டிஜேஎல் துணை தலைவர்  ராகவ் சதா குற்றம்சாட்டியுள்ளார்.

இதுபற்றி அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: வாசிராபாத்  பகுதியிலுள்ள யமுனை ஆற்றுப்பகுதியில் அம்மோனியாவின் செறிவு 7 பிபிஎம்  என்கிற அளவுக்கு உயர்ந்துள்ளது. இது அனுமதிக்கப்பட்ட அளவாக 0.8 பிபிஎம்  என்பதை காட்டிலும் கூடுதலாகும். இதனால் குடிநீர் விநியோகம்  பாதிக்கப்படுகிறது. யமுனாவில் தொழில்துறையினரால் வெளியேற்றப்படும்  மாசுபடுத்திகளை ரோஹ்தக் எக்ஸ்-ரெகுலேட்டர் மற்றும் டிடி6 மூலம்  வெளியேற்றுவது குறித்து  அரியானா அரசுக்கு பலமுறை நினைவூட்டப்பட்டது.  
இருந்தபோதிலும் இது நிறுத்தப்படவில்லை.

அரியானா அரசின் இந்த பொறுப்பற்ற  நடத்தையால் டெல்லியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுகிறது. எனவே,  அரியானா அரசாங்கத்தின் “முரண்பாடான”  இந்த அணுகுமுறையை  அறிந்து இதற்கான   தீர்வுகளை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை சிபிசிபி மற்றும் யமுனை உயர்மட்ட  நீர் வாரியம் எடுக்க வேண்டும். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

*  வஜிராபாத், சந்திரவால் மற்றும் ஓக்லா நீர் சுத்திகரிப்பு நிலையங்களில்  யமுனை ஆற்றிலிருந்து பெறப்படும் நீர் சுத்தரிகரிக்கப்பட்டு  இந்த  சுத்திகரிப்பு மையங்கள் மூலமாகவே  மத்திய, வடக்கு, மேற்கு மற்றும் தெற்கு  டெல்லிக்கு குடிநீரை வழங்கப்பட்டு வருகிறது.

* சிபிசிபி இந்த மாத  தொடக்கத்தில் யமுனை ஆறு மாசுபடுதல் குறித்து கவலை தெரிவித்ததுடன் டெல்லி,  அரியானா மற்றும் உத்தரபிரதேச மாநிலங்கள் கழிவுநீர் சுத்திகரிப்பை திறம்பட  மேற்கொள்ள சிபிசிபி இந்த மாத துவக்கத்தில் அறிவுறுத்தியிருந்தது.  

* சிபிசிபி அறிக்கையின்படி, டெல்லியில் 22 வடிகால்களை கண்காணித்ததில் 14  வடிகால்கள் மூடப்படாமல் கழிவுநீரை வெளியேற்றும் நிலையில் இருந்ததை கண்டுபிடித்து கூறியது.

* கடந்த காலங்களில், சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை வெளியேற்றுவது, தற்போதுள்ள எஸ்.டி.பி-க்கள் செயல்படாதது, தொழில்களால் நிறுவப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் முறையற்ற  செயல்பாடு ஆகியவற்றின் காரணமாக யமுனாவில் நுரை உருவாக்கம் மற்றும் அம்மோனியா அளவு அதிகரிப்பதை சிபிசிபி கவனித்து அவற்றை தடுப்பதற்கான  அறிவுறுரைகளை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Yamuna ,CPCB ,Raghav Sada , Waste, Yamuna, ammonia, increase
× RELATED “பாஜவில் சேராவிட்டால் கைது” டெல்லி...