×

இரு பருவமழை பெய்தும் குமரியில் நிரம்பாத பாசன குளங்கள்: கோடையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

நாகர்கோவில்: தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் மழை பெறும் மாவட்டமாக குமரி மாவட்டம் இருந்து வருகிறது. இதனால் அணைகள் நிரம்பிவிடுகின்றன. ஆனால் குளங்கள் முழுமையாக நிரம்புவது இல்லை. அவ்வாறு நிரம்பினாலும் கோடையை தாக்குபிடிக்க முடியாமல் குளங்கள் எளிதில் வறண்டு விடுகின்றன. குளங்கள் பெயரளவில் நிரம்பினாலும் அவற்றில் போதிய அளவில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலையே இதற்கு காரணம் ஆகும். குளங்கள் முழுமையாக தூர்வாரப்படாததும், ஆக்ரமிப்பால் நிரம்பி வழிவதும் தண்ணீர் நிரம்புவதில் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் கட்டுப்பாட்டில் மொத்தம் 2040 குளங்கள் உள்ளன. இவற்றில் நடப்பு டிசம்பர் மாத நிலவரப்படி தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகள் பொழிந்தபோதிலும் 363 குளங்கள் மட்டுமே முழுமையாக நிரம்பியுள்ளன. இதர குளங்கள் முழுமையாக தண்ணீர் நிரம்பாத நிலை காணப்படுகிறது. மாவட்டத்தில் இனி பெருமழைக்காலம் இல்லை. எனவே தற்போதுள்ள தண்ணீரின் அளவு வரும் நாட்களில் குறையவே செய்யும். இதனால் கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு, குடிநீர் பிரச்னை, பயிர்களுக்கு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை போன்றவை ஏற்படுகிறது. இந்த ஆண்டில் மட்டுமல்ல ஒவ்வொரு ஆண்டிலும் இதே நிலைதான் உள்ளது.

இவை ஒருபுறம் இருக்க ஓகி புயல் வேளையில் சேதமடைந்த குளங்கள், கால்வாய்கள் போன்றவற்றின் கரைகளை சீர் செய்ய பொதுப்பணித்துறை சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. நாகர்கோவில், புத்தேரி பகுதியில் உள்ள நெடுங்குளத்தில் இருந்து ‘புரெவி’ புயல் சின்னம் வேளையில் அதிக மழை பொழியும் என்று கருதி விவசாயிகள் தண்ணீரை திறந்துவிட்டனர். இதற்கு முக்கிய காரணம் இந்த குளத்தின் கரைகள் ‘ஓகி’ புயல் வேளையில் உடைப்பு எடுத்தது ஆகும். அதன் பின்னர் இந்த கரைகள் இதுவரை முழுமையாக பலப்படுத்தப்படவில்லை. இதனால் குளத்தில் நீர்நிரம்பினால் எந்த நேரத்திலும் உடைப்பு எடுக்கும் அபாய நிலை உள்ளது. இது அருகே உள்ள சுமார் 800 ஏக்கர் நெற்பயிர்களை சேதப்படுத்தும் அபாயம் உள்ளது.

அதே வேளையில் ‘புரெவி’ புயல் மழை குமரி மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதனால் குளத்தில் தண்ணீர் நிரம்புவதிலும் தற்போது சிக்கல் எழுந்துள்ளது. தற்போது பயிர்களுக்கும் முழுமையாக தண்ணீர் கிடைக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. புத்தேரி, நெடுங்குளம் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள குளங்களும், கால்வாய்களும் இதே போன்று கரைகள் பலப்படுத்தப்படாமலும், ஷட்டர்கள் முறையாக சீரமைக்கப்படாமலும், ஆக்ரமிப்புகளிலும், மணல் நிரம்பியும் காணப்படுவதால் பெருமழை பெய்தாலும் பெரும்பாலான குளங்கள் முழுமையாக நிரம்பாமல் போவதுடன் கோடையில் எளிதில் வறண்டும் விடுகின்றன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கோடையில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படுகிறது.

நாகர்கோவில் மாநகர பகுதியில் குடிநீர் தேவைக்கு விவசாயத்திற்கு பயன்படுத்துகின்ற பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் தண்ணீரை நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறையும் நடவடிக்கை மேற்கொண்டு முழுமையாக நிரம்பாத குளங்களை ஆய்வு செய்து அவற்றில் தண்ணீர் சென்றடையவும், மழைக்கால தண்ணீரை தேக்கி வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் ‘ஓகி’ புயலிலில் மாவட்டத்தில் உடைப்பு ஏற்பட்ட குளங்கள், கால்வாய்களை சீர்செய்து கரைகளை பலப்படுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் விரும்புகின்றனர்.

இது தொடர்பாக குமரி பாசனத்துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ கூறியதாவது: குமரி மாவட்டத்தில் ஓகி புயல் வேளையில் நீர்நிலைகளில் அணைகள், ஆறுகள், சானல், குளங்கள், நீரோடை என்று பல பகுதிகளிலும் உடைப்புகள் ஏற்பட்டது. இதில் 50 சதவீதம் தற்காலிக பணிகள் நடைபெற்றது. உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறை சார்பில் மணல் மூடைகள் அடுக்கப்பட்டன. இதர 50 சதவீதம் பகுதிகளில் அதுவும் நடைபெறவில்லை. இதன் தொடர்ச்சியாக நிரந்தர பணிகள் மேற்கொள்ள பொதுப்பணித்துறை சார்பில் மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் 30 சதவீத பணிகளுக்குத்தான் நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ளது. இதனால் ஓகி புயலில் சேதமடைந்ததில் 70 சதவீத பணிகள் நடைபெறவில்லை.

மேலும் நிரந்தர பணிகள் இரண்டு விதமாக நடைபெற்றது. முதலில் தற்காலிக பணிகள் நடைபெற்ற இடங்களில் மணல்மூட்டைகளை அகற்றி அதே இடத்தில் நிரந்தர பணிகளை மேற்கொண்டனர். மணல்மூடைகளை அகற்றாமல் அருகே உள்ள சேதமடைந்த பிற பகுதிகளில் நிரந்தர பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதே வேளையில் இதுவரை சில இடங்களில் மணல்மூடையும் அடுக்காமல், நிரந்தரமாக சிமென்ட் ஒர்க் பணிகளும் நடைபெறாத அவலமும் உள்ளது. சானல்களில் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்படும் என்று கருதப்பட்ட ஒரு சில இடங்களில் பிற நிதியை கொண்டு பணிகள் நடைபெற்றது. ஓகி புயலால் மணவாளக்குறிச்சி அருகே வள்ளியாற்றில் உடைப்பு ஏற்பட்ட பகுதி, கப்பியறை அருகே உடைந்த பாம்புரி வாய்க்கால் பகுதிகள் உட்பட பல பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெறவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* குமரியில் வடகிழக்கு பருவமழை குறைவு
குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் வரையும், வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையும் மழை பொழிவை தருகிறது. தென்மேற்கு பருவமழை ஆண்டு சராசரி 559.1 மி.மீ ஆகும். 2019ம் ஆண்டு 690.45 மி.மீ பெய்திருந்தது. இது இயல்பைவிட 23.49 சதவீதம் அதிகம் ஆகும். 2020ம் ஆண்டு 664.55 மி.மீ மழை பெய்திருந்தது. இது இயல்பைவிட 18.86 சதவீதம் அதிகம் ஆகும். ஆனால் கடந்த ஆண்டைவிட குறைவு ஆகும். வடகிழக்கு பருவமழை ஆண்டு சராசரி 526 மி.மீ ஆகும். 2019ம் ஆண்டு பெய்த மழையளவு 592.19 மி.மீ ஆகும். இது இயல்பைவிட 12.58 சதவீதம் அதிகம் அகும். 2020ம் ஆண்டு 294.99 மி.மீ மழை பெய்திருந்தது. இது இயல்பைவிட 43.92 சதவீதம் குறைவு ஆகும்.

Tags : monsoons ,Kumari , Irrigated ponds in Kumari due to two monsoons: Risk of shortage of drinking water in summer
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...