×

வள்ளல் அதியமான் கோலோச்சிய பூமி: தகடூர் நாடு என்று புகழ் பெற்ற நம்ம தர்மபுரி

‘‘நிகழ்வுகளை விட, அந்த நிகழ்வுகளால் பதிந்திருக்கும் நினைவுகளே என்றென்றும் நிலைத்திருக்கும் பொக்கிஷங்கள். இப்படி பண்பாடும், கலாச்சாரமும் நிலைத்திருக்கும் தமிழ்நிலத்தில் ஒவ்வொரு பகுதியும் அளப்பரிய பெருமைகளை கொண்ட அரிய பொக்கிஷமாக திகழ்கிறது. இந்த பகுதிகள் குறித்து நாம் அறிந்த, அறியாத தகவல்களை நினைவலைகளில் சுழல வைப்பதற்காக வருகிறது இந்த ‘பிளாஷ்பேக்,’’.

கடையெழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் நெடுமான் அஞ்சி, ஆட்சி செய்த பெருமைக்குரிய தகடூர் நாடே காலத்தின் சுழற்சியால் தர்மபுரியாக உருமாறி நிற்கிறது. அவ்வைக்கு நெல்லிக்கனி வழங்கிய அதியமான் குறித்து புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, சிறுபாணாற்றுபடை போன்ற சங்க இலக்கிய நூல்களில் குறிப்புகள் இடம் பெற்றுள்ளது காலம் கடந்தும் தர்மபுரியை வரலாற்றில் இடம் பெறச்செய்யும் என்பது நிதர்சனம்.
பிற்காலத்தில் சேரமன்னன் பெருஞ்சேரல் இரும்பொறையால் அதியமான் மகன் எழினி தோற்கடிக்கப்பட்டான். சேரர்களின் ஆட்சிக்கு பிறகு நுளம்பர், சோழர், மீண்டும் அதியமான்கள், ஹொய்சாளர்கள், விஜயநகர மன்னர்களின் ஆட்சியில் தகடூர்நாடு இருந்தது. 17ம் நூற்றாண்டில் பிஜப்பூர் சுல்தான்களின் ஆளுகையின் கீழ் கொண்டு வரப்பட்டது. 1652 முதல் 1768வரை மைசூர் மன்னர்களின் மேலாண்மையின் கீழ் இருந்தது. இந்த காலகட்டத்தில் தான், கன்னடர்கள் பெருமளவில் இங்கு குடியேறினர்.

18ம் நூற்றாண்டின் மத்தியில் ஆங்கிலத் தளபதி வுட் என்பவர், பிரிட்டீஷ் இந்தியப் பகுதிக்குள் தர்மபுரியை கொண்டு வந்தார். அதன் பிறகு சேலம் மாவட்டத்தின் முக்கிய மையமாக தர்மபுரி விளங்கியது. 1965ம் ஆண்டு அக்டோபர் 2ம்தேதி சேலத்தில் இருந்து தர்மபுரி தனிமாவட்டமாக பிரிக்கப்பட்டது. அப்போது ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் அரூர் தாலுகாக்களை உள்ளடக்கிய மாவட்டமாக, இது இருந்தது. இந்தச்சூழலில் 2004ம் ஆண்டு தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது.

ஆனால் இப்போதும் தர்மபுரியின் இதயமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது அதியமான் கோட்டை. 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோட்டை கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது. அதியமான் கோட்டை தான், அந்தக்காலத்தில் தகடூர் நாடு என்னும் தர்மபுரியின் நுழைவு வாயிலாக இருந்துள்ளது. கோட்டை மதிலின் மீது எதிரிகள் ஏறாதவகையில் கடுகு எண்ணையை பூசி வைத்துள்ளனர். கோட்டைக்குள் இருக்கும் சோமேஸ்வரர் கோயில், ஆன்மீகத்தின் அற்புதமாக திகழ்கிறது. கோயில் கல்சுவரில் யானை உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இதுவே அதியமானின் முத்திரையாகும். கோட்டை மண்டபத்தின் மேற்புற சுவர்களில் ராமாயண, மகாபாரத சிற்பங்களோடு படை வீரர்களின் சிற்பங்களும் செதுக்கப்பட்டிருப்பது வேறு எங்கும் இல்லாத சிறப்பு. இந்த ஓவியங்களில் சிவப்பு, கறுப்பு, வெள்ளளை வண்ணங்கள் மட்டுமே காணப்படுவது வியப்பு. மகாமண்டபத்தின் கல்தூண்கள் கட்டிடக்கலையின் உச்சம் தொட்டு நிற்பது அதிசயம்.

இப்படி மன்னராட்சியில் பெருமை சேர்த்த தர்மபுரி, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அடிமை விலங்குகளை உடைத்தெறிந்து மக்களாட்சிக்கு வித்திட்ட போராட்ட களமாகவும் திகழ்ந்துள்ளது. திண்டுக்கல்லில் பிறந்த வீரத்தியாகி சுப்ரமணியசிவா, வெள்ளைக்கார ஆஷ்துரையை தீர்த்துக்கட்ட ஆயத்தமான மாவீரன் தீர்த்தகிரியார், மகாத்மாவின் ஒப்பற்ற சீடராக இருந்த மூதறிஞர் ராஜாஜி என்று பலர், இந்த மண்ணில் பிறந்தும், வாழ்ந்தும் வரலாறு படைத்திருக்கிறார்கள்.
தமிழகத்தின் நெற்களஞ்சியங்களுக்கு நீர்வார்க்கும் காவிரி, தர்மபுரியில் ஒகேனக்கல் அருவியாக பொங்கி பிரவாகம் எடுத்த பின்னரே டெல்டாவை முத்தமிடுகிறது. அரிய கோயில்களும், வழிபாட்டு தலங்களும் மாவட்டம் முழுவதும் நிரம்பிக்கிடக்கிறது. அதேநேரத்தில் தமிழகத்தின் வறண்ட பூமியாகவே இன்றும் தர்மபுரி திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் இந்த மண்ணை விட்டு வெளியேறாமல் பண்பாடு காத்து வாழும் மக்களால் வளம் என்பது சில வருடங்களாக சாத்தியமாகி கொண்டிருக்கிறது. அவர்களின் உழைப்பும், நம்பிக்கையும் தமிழகத்தின் தலையாய பூமியாய் தர்மபுரியை மாற்றும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.

Tags : Valal Adiyaman Colossian Earth ,Dharmapuri ,Tagore Nadu , Dharmapuri
× RELATED காயங்களுடன்கிடந்தவர் சாவு