×

லாக் டவுனில் இருந்து விடுதலை கிடைக்குமா ? : 29ல் மாவட்ட கலெக்டர்களுடன், 30ல் மருத்துவ குழுவுடன் முதல்வர் பழனிசாமி தீவிர ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் வரும் 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், வரும் 30ம் தேதி மருத்துவ வல்லுநர் குழுவுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.அப்போது ஊரடங்கை மேலும் நீடிப்பதா? அல்லது தளர்த்துவதா? என்பது குறித்து முக்கிய முடிவு எடுத்து அறிவிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மார்ச் 24ம் தேதி முதல் 6 கட்டங்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வருகிறது.

கடந்த 4 மாதங்கள் ஊரடங்கு நடைமுறையில் இருந்தாலும், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. கடைகள் திறக்கலாம், தொழிற்சாலைகள் இயங்கலாம், ஆட்டோ, டாக்சி ஓடலாம், அரசு-தனியார் அலுவலகங்கள் செயல்பட அனுமதி உள்ளிட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. ஆனாலும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.  இதனால், இ-பாஸ் இருந்தால் மட்டுமே வெளிமாவட்டங்களுக்கு செல்ல முடியும் என்ற நிலை உள்ளது. இதனால் 4 மாதமாக மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு, முழு ஊரடங்கு உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் 31ம் தேதியுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது. அதற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் ஆகஸ்டு 1ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு முழுவதுமாக தளர்த்தப்பட்டு மீண்டும் சகஜநிலை திரும்புமா? அல்லது மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்னென்ன தளர்வுகள் கிடைக்கும் என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 29ம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் இருந்தபடி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனையைத் தொடர்ந்து, மருத்துவ வல்லுநர் குழுவுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில், தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பதா? அல்லது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை கைவிடுவதா? என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்துவது தொடர்பாக மருத்துவக்குழு பரிந்துரை வழங்க உள்ளது.

அதே போல், கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாகவும் மருத்துவ குழுவிடம் முதலமைச்சர் கருத்துக் கேட்க உள்ளார்.மருத்துவ நிபுணர் குழுவின் பரிந்துரை, மத்திய உள்துறை மற்றும் சுகாதாரத் துறையின் பரிந்துரைகள், ஐசிஎம்ஆர்-ன் கருத்துகளை அறிந்து, அதன் அடிப்படையில் ஊடரங்கை எவ்வளவு நாட்களுக்கு நீட்டிப்பது என்பது குறித்து முதல்வர் அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள பொதுப் போக்குவரத்து தொடர்பாகவும் முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.

Tags : consultation ,Palanisamy ,29th and Medical Committee ,District Collectors , Lockdown, Liberation, 29th, District Collector, 30th Medical Committee, Chief Palanisamy, Consulting
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...