×

பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள் ஒருபோதும் மறக்கவும்,மன்னிக்கவும் மாட்டார்கள்: திமுக விமர்சனம்

சென்னை: பா.ஜ. அரசின் எண்ணற்ற மக்கள் விரோத சட்டங்களுக்கு ஒப்புதல் தந்த பழனிசாமியின் பாதகச் செயல்களை மக்கள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள் என திமுக விமர்சனம் செய்துள்ளது.

இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கை:
எடப்பாடி பழனிசாமி ஏறத்தாழ நான்கு ஆண்டு காலம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பில் இருந்தார். தமிழ்நாட்டு மக்களுக்கோ, தமிழ் மொழிக்கோ அவரால் சிறு பயனும் இல்லை. பதவி சுகத்தை அனுபவித்தார். ஆனால், தமிழர்களுக்குப் பாதகங்கள் பல செய்தார்.எந்த ஒரு அரசியல் கட்சியின் பின்னணியும் இல்லாமல், தன்னெழுச்சியாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக மக்கள் திரண்டு பல மாதங்கள் போராடினார்கள். ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் அப்பகுதியில் வசிக்கின்ற மக்களுக்குப் புற்றுநோய் முதலான கொடிய நோய்கள் ஏற்பட்டு, அவர்கள் கொடுமைகளுக்கு ஆளானார்கள். அப்படி பாதிக்கப்பட்ட மக்கள் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடக்கோரி திரண்டு எழுந்து போராடினார்கள். அந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரைக் கொன்றது பழனிசாமியின் காவல்துறை. ஒரு பெண்ணின் வாய்க்குள் துப்பாக்கியை வைத்துச் சுட்டுக் கொன்றார்கள்.

பொள்ளாச்சியில் அன்றைய ஆளுங்கட்சியான அதிமுகவைச் சேர்ந்தவர்கள், 200க்கும் மேற்பட்ட மகளிரை மிரட்டி, கற்பழிக்கும் கொடுமைகளுக்கு ஆளாக்கினர். மகளிர் சங்கங்கள் போராடின. பாதிக்கப்பட்ட மகளிர் கூறியும் குற்றவாளிகளைப் பாதுகாத்தவர் பழனிசாமி. பா.ஜ. அரசின் பாதகச் செயல்களில் ஒன்று சிறுபான்மையினருக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டம். அச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது அ.தி.மு.க. எம்.பி.க்கள் 11 பேர் வாக்களிக்காமல் இருந்திருந்தால், அந்தச் சட்டம் நிறைவேறி இருக்காது. ஆனால், அந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் தந்து சிறுபான்மையினருக்கு எதிராக நடந்து கொண்டது பழனிசாமியின் அதிமுக தான்.

இப்படித் தமிழ்நாட்டை பாஜவிடம் அடகு வைத்து பிரதமரின் பாதம் தாங்கிய பழனிசாமி இப்பொழுது பா.ஜவிடம் கூட்டணி இல்லை என்று கூறி முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களின் வாக்குகள் முழுவதும் திமுக கூட்டணிக்குச் சென்று விடக்கூடாது என வஞ்சக நோக்கத்துடன் பிதற்றுகிறார். பாஜவுடன் கள்ளக் கூட்டணி வைத்துள்ள பழனிசாமியின் செயலை இனியும் தமிழ்நாட்டு மக்கள் நம்புவதற்கு ஏமாளிகள் அல்ல. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

The post பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள் ஒருபோதும் மறக்கவும்,மன்னிக்கவும் மாட்டார்கள்: திமுக விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Palanisamy ,Dimuka ,Chennai ,J. Dimuka ,Edappadi Palanisami ,Palanisami ,
× RELATED தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக...