×

தமிழக தலைநகரில் இருந்து ஊருக்கு சென்றவர்கள் அச்சத்தில் தவிப்பு பஸ்களே எட்டி பார்க்காத குக்கிராமங்களிலும் கொரோனா: மருத்துவ கட்டமைப்பை உருவாக்குவதில் சிக்கல்; நெருக்கமாக பழகுவதால் கொத்தாக பாதிப்பு

சென்னை: பஸ்களே எட்டி பார்க்காத குக்கிராமங்களிலும் கொரோனா பரவல் மின்னல் வேகத்தை தொட்டு வருவதால், பாதிப்பு எண்ணிக்கை பலமடங்காக உயர்ந்து வருகிறது. விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் அரசு திணறல், நெருக்கமாக வாழ்ந்து பழக்கப்பட்ட கிராம மக்களிடம் தொற்று ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு வேகமாக தொற்றுபரவுகிறது. இதனால் சென்னையில் இருந்து சாரை சாரையாக ஊர்களுக்கு சென்றவர்கள் தற்போது கொரோனா பீதியால் தவித்து வருகின்றனர்.
சென்னையை உண்டு இல்லை என்று செய்த கொரோனாவுக்கு பயந்து பலரும் விட்டால் போதும் என்று சிட்டாக கிராமங்கள், சிறு நகரங்கள், குக்கிராமங்கள் என்று சாரை சாரையாக தாங்கள் பிறந்து வளர்ந்த மண்ணுக்கு சென்றனர். தற்போது சென்னையில் நிலைமை மாறி கொரோனா வேகம் கட்டுப்படுத்தப்பட்டு 1100 முதல் 1500 என்ற அளவில் தான் உள்ளது. அதற்கு சென்னையில் தொடர் பரிசோதனை, தனிமைப்படுத்துதல் மற்றும் விழிப்புணர்வு, சித்தா, ஆயுர்வேத சிகிச்சை தடுப்பு முறைகளால் நோய் தொற்று குறைந்து வருகிறது.

சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா நடவடிக்கைகள் எல்லாம் கலெக்டரின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவர்கள் ஊரடங்கில் ஊரடங்கு, நேரக்கட்டுப்பாடு, நோயாளிகளை கண்டறிவது, மருத்துவமனையில் சேர்ப்பது, டிஸ்சார்ஜ் செய்வது, விழிப்புணர்வு நோட்டீஸ் அச்சிட்டு தருவது, இபாஸ் போன்ற தங்கள் அதிகார எல்லைக்குள் நின்றுவிட்டனர். இவைகள் அனைத்தும் நகரப்பகுதிகளில் மட்டுமே பெரும்பாலும் இருந்தது. பஸ் செல்லாத கிராமங்கள் மற்றும் நேரத்துக்கு ஒன்று இரண்டு பஸ்கள் செல்லும் கிராமங்களில் போலீசார் மிரட்டி மக்களை ஊருக்குள் முடக்கினர்.

ஆனால் கிராமங்களின் உள்ளே மக்களின் வாழ்க்கை இயல்பு வாழ்க்கையாகவே இருந்தது. உறவுமுறைகளிடம், நண்பர்களிடம் சமூக இடைவெளி, மாஸ்க் போன்றவை எல்லாம் விரோதத்தையும் குரோதத்தையும் ஏற்படுத்தும் என்பதாலும் அது குறித்து விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், குக்கிராமமக்கள் அவர்களாகவே இருந்து வருகிறார்கள். ஆனாலும் தங்கள் ஊர்களுக்கு வெளியூரில் இருந்து வரும் யாரையும் அனுமதிக்காமல் பாதுகாத்தனர். ஆனால் குக்கிராமங்களில் தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியிருப்பது சமூக ஆர்வலர்கள், சுகதாரத்துறையினர், சென்னை மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இதனால் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த கிராம மக்கள் தற்போது கொரோனா அச்சத்தால் வீடுகளில் முடங்க தொடங்கியுள்ளனர். மதுரை, விருதுநகர், தேனி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம் என அத்தனை தென்மாவட்டங்களிலும் கொரோனா மோசமாக பரவி வருகிறது. அதுவும் கிராமப்புறங்களில் தொற்று அதிகரித்து வருவது அந்தந்த மாவட்ட நிர்வாகங்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் ஜூலை 18ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் பதிவான 1, 65, 714 கொரோனா தொற்றுகளில் சென்னையில் 84, 193 தொற்றும், மற்ற மாவட்டங்களில் 81,116 தொற்றும் கண்டறியப்பட்டுள்ளது. ஜூன் 30ம் தேதி வரை சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் 31,748 தொற்றுகள் மட்டும் பதிவாகி இருந்தது.

இந்நிலையில் கடந்த 19 நாட்களில் மட்டும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இந்த எண்ணிக்கை (ஜூலை 19 ம் தேதி) 84,834 ஆக அதிகரித்துள்ளது. இந்த 19 நாட்களில் கிராமங்களில்  கொரோனா பரவல் கடுமையாக அதிகரித்து பல மடங்காகியுள்ளது. இது மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தி உள்ளது. சென்னையிலிருந்து சென்றவர்கள் தங்கள் சொந்த ஊர்களிலும் மிகப் பெரிய அச்சத்துடன் வாழும் நிலை உருவாகி வருவதாக பீதியில் உள்ளனர். இதுகுறித்து மருத்துவ நிபுணர் ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் சென்னை தான் கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருந்தது. தற்போது மக்களிடம் ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் இந்த நோய் குறித்த அச்சம் தான் இருக்கிறது. ஆனால் பெரிய அளவில் விழிப்புணர்வு எதுவும் இல்லை. அவர்கள் தங்கள் வழக்கமான பணிகளில் எந்தவித தொய்வில்லாமல் செய்து வருகின்றனர். அதில் ஒருவருக்கு வந்தால் கூட போதும் பலரையும் பாதித்து விடும். பொதுவாக கிராம மக்களை வீடுகளுக்குள் முடக்குவது என்பது முடியாத காரியம். எனவே கிராமப் பரவலை தடுப்பதில் தமிழக அரசு மிகப் பெரிய முயற்சியை எடுத்தாக வேண்டும். இல்லாவிட்டால் தமிழகம் மிகப் பெரிய பாதிப்பை சந்திக்கும் நிலை வந்துவிடும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : slums ,capital ,Tamil Nadu ,Corona ,city , The capital of Tamil Nadu, those who went to the city, suffered in fear, Corona: a medical problem
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...