×

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவுக்கு கொரோனா பாதிப்பு: தனிமை முகாமில் சிகிச்சைக்காக அனுமதி

மதுரை : தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 5,48,318 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 16,475 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 70,000க்கும் மேற்பட்டோர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து மக்களைப் பாதுகாக்க மாநில அரசு பல்வேறு துரிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக தேனி மாவட்டத்தில் பெரியகுளம் நகராட்சி ஏற்கனவே முழுமையான கட்டுபாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டு வருகிறது.

எனினும், தேனி மாவட்டத்திலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அம்மாவட்டத்தில் இதுவரை 575 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஒ.ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை கட்டுப்பாட்டிலுள்ள விடுதியில் தனிமை முகாமில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், ஓ.பி.எஸ்.க்கும் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. அவரது பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. தேனி மாவட்ட ஆவின் தலைவராக ஒ.ராஜா பதவி வகித்து வருகிறார். முன்னதாக, கொரோனா அச்சம் காரணமாக சென்னையில் இருந்து தேனி மாவட்டம் வந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், போடி சுப்புராஜ் நகரில் ஒரு வாடகை வீட்டில் குடும்பத்துடன் குடியேறியுள்ளார். வழக்கமாக பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டில் தங்கும் அவர், இம்முறை போடியில் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : O. Raja ,O. Pannirselvam ,Tamil Nadu ,camp , Deputy Chief Minister O. Panneerselvam, Brother, O. Raja, Corona
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...