×

புதுச்சேரி ஊசுட்டேரிக்கு படையெடுத்துள்ள ஆஸ்திரேலியா பிளமிங்கோ பறவைகள்

புதுச்சேரி: புதுச்சேரி ஊசுட்டேரியில் நூற்றுக்கணக்கான ஆஸ்திரேலியா பிளமிங்கோ பறவைகள் வந்து குவிந்துள்ளன.புதுச்சேரியில் இருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ள ஊசுட்டேரி புதுவை மற்றும் தமிழக பகுதிகளை உள்ளடக்கியது. இப்பகுதியில் ஆண்டுதோறும் பருவமழையின் போது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீடுர் அணை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தண்ணீர் வருவது வழக்கம். அப்போது ஏரி நிரம்பி கடல் போல் காட்சியளிக்கும். கோடை காலத்திலும் இந்த ஏரியில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு பறவைகள் வருவதுண்டு. இனப்பெருக்கத்துக்கு இதமான சூழ்நிலை நிலவுவதால், ஆண்டுதோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வந்து செல்வதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஊசுட்டேரியின் சூழலால் ஈர்க்கப்பட்டு கூழைகடா, சாம்பல் நாரை, ஊசிவால் வாத்து, நாமக்கோழி, அரிவாள் மூக்கன் உள்ளிட்ட பறவைகள் நிரந்தரமாக இங்கு முகாமிட்டுள்ளன.

தற்போது ஊசுட்டேரியில் நீர்மட்டம் குறைந்து பறவைகள் சேற்றில் நடந்து செல்லும் அளவுக்கு அப்பகுதி இருந்து வருகிறது. இதனால் சிறப்பு விருந்தாளியாக, அரிய இனமாக கருதப்படுகின்ற பூநாரைகள் எனப்படும் ஆஸ்திரேலியா பிளமிங்கோ பறவைகள் நூற்றுக்கணக்கில் ஊசுட்டேரியில் குவிந்துள்ளன. ஆழமற்ற நீரில் இறங்கி வரிசையாக நின்று தலையை நீருக்குள் அழுத்தி, மேல் அலகை தரையில் படும்படுபடியாக கவிழ்த்து, இரை தேடுவது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. இப்பறவைகளை காண்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊசுட்டேரிக்கு குவிந்து வருகின்றனர். சரணாலயத்தை அலங்கரிக்கும் பிளமிங்கோ குறித்து, பறவை ஆராய்ச்சியாளர்கள் கணக்கெடுக்கும் பணியை தொடங்கி உள்ளனர்.

The post புதுச்சேரி ஊசுட்டேரிக்கு படையெடுத்துள்ள ஆஸ்திரேலியா பிளமிங்கோ பறவைகள் appeared first on Dinakaran.

Tags : Puducherry Oosutteri ,Puducherry ,Oosutteri.Oosutteri ,Puduwai ,Tamil Nadu ,Veedur Dam ,Villupuram district ,Oosutteri ,
× RELATED புதுச்சேரி லாஸ்பேட்டையில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர் உயிரிழப்பு!!