×

சகதியானது திருமழிசை காய்கறி சந்தை 100க்கும் மேற்பட்ட கடைகள் மூடல்: சாலையில் வியாபாரம் நடத்திய அவலம்

திருவள்ளூர்: திருமழிசை காய்கறிகள் சந்தையில் மழைநீர் குளம்போல் தேங்கி சகதியானதால், காய்கறி வாகனங்கள் சிக்கின. இதனால், 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தங்களது கடைகளை மூடிவிட்டு, சாலையில் வியாபாரத்தில் ஈடுபட்டனர்.  கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, கோயம்பேடு காய்கறிகள் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது. இதனையடுத்து, சென்னை பூந்தமல்லி அடுத்துள்ளள திருமழிசை துணை நகரத்தில், காய்கறி சந்தை தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. காய்கறி சந்தைக்கான முறையான இடம், சாலை, கழிவறை உள்ளிட்ட வசதிகள் இல்லை என ஆரம்பத்தில் இருந்தே வியாபாரிகள் கூறி வருகின்றனர். எனினும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தொடர்ந்து திருமழிசையில் காய்கறி சந்தையை வியாபாரிகள் நடத்தி வருகின்றனர்.

இங்கு தினமும் இரவு 10 மணி முதல் காலை 8 மணி வரை மொத்த வியாபாரிகளுக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. திருமழிசையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், காய்கறி சந்தை முழுவதும் தண்ணீர் தேங்கியது. கடைகளுக்குள் தண்ணீர் புகுந்து, வளாகம் முழுவதும் சேறும் சகதியுமானது. இதனால், நேற்று அதிகாலை காய்கறிகளை ஏற்றி வந்த வாகனங்கள் சேற்றில் சிக்கின. பின்னர் பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு வாகனங்கள் மீட்கப்பட்டன. தொடர்ந்து காய்கறி மூட்டைகளை கடைக்கு கொண்டு செல்ல முடியாமல் சுமை தூக்கும் தொழிலாளர்கள் கடும் அவதிப்பட்டனர்.

இதனால், சந்தையின் இருபுறமும் உள்ள கடைகளுக்கு காய்கறி மூட்டைகளை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று காலை 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தங்களது கடைகளை பூட்டினர். தொடர்ந்து காய்கறி வாகனங்களை சந்தையின் முன்புறம் நிறுத்தி வியாபாரத்தில் ஈடுபட்டனர். இதனால் சந்தை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இவ்வாறு ஒரே இடத்தில் சமூக இடைவெளி இன்றி வியாபாரிகள் குவிந்து வருவதால் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

Tags : Closure ,shops ,Thirumazillai Vegetable Market Thirumazillai Vegetable Market , Tirumalai Vegetable Market, Road, Commercial
× RELATED ஆந்திராவில் தேர்தலை முன்னிட்டு 17 டாஸ்மாக் மது கடைகள் மூடல்