×

ரசிகர்கள் இல்லாத ஐபிஎல் டி20 விருந்தினர் இல்லாத திருமணம்...இர்பான் பதான் வேதனை

புதுடெல்லி: ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டிகள் நடந்தால், அது விருந்தினர்கள் பங்கேற்காத திருமணம் போலதான்... என்று முன்னாள் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். கொரோனா பிரச்னைக்கு இடையிலும் கால்பந்து போட்டிகள், பூட்டிய அரங்கில் ரசிகர்கள் இல்லாமல் மீண்டும் நடக்க ஆரம்பித்துள்ளன. ஆனால் மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இதில் முந்திக் கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் டெஸ்ட்தொடருக்கு ஏற்பாடு செய்துள்ளது. முதல் போட்டி ஜூலை 8ம் தேதி தொடங்க உள்ளது. அதே பாணியில் ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை, இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதற்கு பதில் டி20 உலக கோப்பை போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன்கள் உட்பட நட்சத்திர வீரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து இர்பான் பதான் கூறுகையில், ‘உறவினர்கள், நண்பர்கள் என விருந்தினர்கள் இல்லாமல் நடைபெறும் திருமணம் முழுமை பெறாது.  ரசிகர்கள் இல்லாமல் நடத்தும் ஐபிஎல் போட்டியும் அதே உணர்வைதான் தரும்’ என்று கூறியுள்ளார். அதே நேரத்தில் ரசிகர்கள் இல்லாமல் பூட்டிய அரங்கில் கிரிக்கெட் போட்டி ஏற்கனவே நடந்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாத்தில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி கொரோனா பீதி காரணமாக பூட்டிய அரங்கில்தான் நடந்தது. மற்ற 2 ஒருநாள் போட்டிகள் ஊரடங்கு அமலானதால் ரத்து செய்யப்பட்டன.

Tags : IPL T20 ,Irfan Pathan , Fans, IPL T20, Irfan Pathan
× RELATED ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் 2வது...