×

ஐபிஎல் பைனலில் ஐதராபாத்தை வீழ்த்தியது 3வது முறையாக கொல்கத்தா சாம்பியன்

சென்னை: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான ஐபிஎல் டி20 தொடரின் 17வது சீசன் பைனலில், 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3வது முறையாக கோப்பையை வென்றது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட் இணைந்து ஐதராபாத் இன்னிங்சை தொடங்கினர். மிட்செல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே அபிஷேக் ஷர்மா (2 ரன்) கிளீன் போல்டாக, ஐதராபாத் அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. அதில் இருந்து மீள்வதற்கு முன்பாகவே, வைபவ் அரோரா வேகத்தில் விக்கெட் கீப்பர் குர்பாஸ் வசம் கேட்ச் கொடுத்த டிராவிஸ் ஹெட்கோல்டன் டக் அவுட்டானார். ஐதராபாத் 2 ஓவரில் 6 ரன்னுக்கு 2 விக்கெட் என சரிவை சந்தித்தது. அடுத்து வந்த ராகுல் திரிபாதி 9 ரன் எடுத்து ஸ்டார்க் வேகத்தில் ரமன்தீப் வசம் பிடிபட்டார். இந்த நிலையில், எய்டன் மார்க்ரம் – நிதிஷ் குமார் ரெட்டி இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடினர். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 26 ரன் சேர்த்தது. நிதிஷ் குமார் 13 ரன், மார்க்ரம் 20 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். ஷாபாஸ் அகமது 8 ரன், அப்துல் சமத் 4 ரன், ஹென்ரிக் கிளாசன் 16 ரன் எடுத்து அணிவகுக்க, ஐதராபாத் அணி 14.1 ஓவரில் 90 ரன்னுக்கு 8 விக்கெட் இழந்தது.

கடைசி கட்டத்தில் ஸ்கோரை கவுரவமான நிலைக்கு உயர்த்த கேப்டன் பேட் கம்மின்ஸ் போராடினார். உனத்கட் 4 ரன் எடுத்து சுனில் நரைன் சுழலில் பெவிலியன் திரும்பினார். அதிகபட்சமாக 24 ரன் எடுத்த கம்மின்ஸ் (19 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) ரஸ்ஸல் வேகத்தில் ஸ்டார்க் வசம் பிடிபட, ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 113 ரன் சேர்த்து ஆல் அவுட்டானது. புவனேஷ்வர் குமார் (0) ஆட்டமிழக்காமல் இருந்தார்.கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சில் ரஸ்ஸல் 3 விக்கெட், ஸ்டார்க், ஹர்ஷித் ராணா தலா 2, அரோரா, சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 114 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களமிறங்கியது. ரகுமானுல்லா குர்பாஸ், சுனில் நரைன் இணைந்து துரத்தலை தொடங்கினர். நரைன் 6 ரன் எடுத்து கம்மின்ஸ் வேகத்தில் ஷாபாஸ் அகமது வசம் பிடிபட, ஐதராபாத் வீரர்கள் உற்சாகம் அடைந்தனர்.

எனினும், குர்பாஸ் உடன் இணைந்த வெங்கடேஷ் அய்யர் அதிரடியாக விளையாடி ரன் குவிக்க, கொல்கத்தா அணியின் வெற்றி உறுதியானது. குர்பாஸ் – வெங்கடேஷ் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 91 ரன் சேர்த்து அசத்தியது. குர்பாஸ் 39 ரன் (32 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஷாபாஸ் பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆனார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. வெங்கடேஷ் அய்யர் 52 ரன் (26 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஐதராபாத் பந்துவீச்சில் கம்மின்ஸ், ஷாபாஸ் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். ஏற்கனவே 2012, 2014ல் சாம்பியன் பட்டம் வென்றிருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தற்போது 3வது முறையாக கோப்பையை வசப்படுத்தியது.

 

The post ஐபிஎல் பைனலில் ஐதராபாத்தை வீழ்த்தியது 3வது முறையாக கொல்கத்தா சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Kolkata ,Hyderabad ,IPL ,CHENNAI ,Kolkata Knight Riders ,IPL T20 Season 17 ,Sunrisers Hyderabad ,MA Chidambaram Stadium ,Chepakkam ,
× RELATED ஐபிஎல் 2024 இறுதிப்போட்டி: கொல்கத்தா...