×

கருப்பு வெறுப்பு நெருப்பு

பற்றியெரிகிறது அமெரிக்கா.. என்னதான் நடந்தது?

இருபது டாலர் கள்ளநோட்டு பிரச்சினையில் ஆரம்பித்தது அது. அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் நகரின் கடைக்காரர் ஒருவர் வாடிக்கையாளர் கள்ள நோட்டு அளித்துவிட்டார் என்று காவலர்களுக்குத் தகவல் தந்திருக்கிறார். விரைந்து வந்தவர்கள் ஜார்ஜ் ஃப்ளாயிட் என்ற அந்த நபரைக் கைது செய்து காருக்கு அழைத்துச் சென்றனர். அவர் காரில் ஏற மறுத்து குப்புற்று கீழே விழுந்து விட்டதாக காவல்துறை தெரிவிக்கிறது. விழுந்தவரின் கால்களையும் முதுகையும் இரண்டு காவலர்கள் பிடித்துக்கொள்ள அவரது கழுத்தின் பின்புறம் காவலர் டெரெக் தமது முழங்காலால் நசுக்கி, அழுத்தி,  அமர்ந்து கொண்டார். அசையவோ, திரும்பவோ முடியாத ஜார்ஜ் கழுத்துப் பிடியில் மூச்சு விடமுடியாமல் திணறிவிட்டார். “தயவுசெய்து விட்டு விடுங்கள், என்னால் மூச்சு விட முடியவில்லை, என்னைக் கொன்று விடாதீர்கள்” எனக் கெஞ்ச, காவலர் டெரெக் மனம் இறங்கவில்லை. 8 நிமிடம் 46 விநாடிகள் அவ்விதம் அழுத்திப் பிடித்திருந்தார். இறந்துவிட்டார் ஜார்ஜ். பற்றிக்கொண்டது தீ. ஜார்ஜ் ஃப்ளாயிட் என்ற கருப்பரை டெரெக் என்ற வெள்ளையர் அதிகார துஷ்பிரயோகம் செய்து அநியாயமாகக் கொன்றுவிட்டார்; இது அப்பட்டமான நிறவெறி என்று பற்றி எரிகிறது அமெரிக்கா.

மூச்சுவிட முடியவில்லை!

திருடன் போலீஸ் ஆட்டம் தப்பாட்டமாகி துர்மரணத்தில் முடிவுற்றுவிட்டது. சம்பந்தப்பட்ட இருவரும் இருவேறு நிறத்தவர் என்பதால் இதை நிற அரசியல் ஆக்குவதா? என்ற சுருக்கமான கேள்வியுடன் ஒதுக்கிவிட முடியாத பெரும் சிக்கல் இது. ‘கருப்பின மக்கள் மீதான அடக்குமுறையும் வன்முறைகளும் அமெரிக்க வரலாற்றின் கருப்புப் பக்கங்கள்; முடிவுற்றன அவை; இது ஜெகஜ்ஜோரான இருபத்தொன்றாம் நூற்றாண்டு’ என்ற அமெரிக்கா கர்வப்பட முடியாத வகையில் இன்றும் நிறவெறி அமெரிக்காவில் உயிருடன் உள்ளது என்பதே க்ளோரோக்வின் மருந்தைப்போல் கசப்பான உண்மை. கல்வி, தொழில், மருத்துவம், ஆட்சி போன்ற பற்பல துறைகளிலும் கருப்பு நிறத்தவர்கள் முன்னேறி, அவர்களும் மனித ஜாதிதான் என்று அமெரிக்காவின் பெரும்பான்மை சமூகம் வேற்றுமையைக் களைந்திருந்தாலும் நிற வெறியும் இன வெறியும் குறிப்பிடத்தக்க அளவிலான வெள்ளைத் தோலர்களிடம் ஊறித்தான் கிடக்கின்றன. சியாட்டில் நகரிலுள்ள தேவாலயம் ஒன்றைச் சேர்ந்த Dr. கெல்லி பிரவுன் என்பவர் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ள கருத்தில் முக்கியமான செய்தி ஒன்று அடங்கியுள்ளது. “காவல் துறையினரின் இத்தகைய அத்துமீறல் இயல்பாகிவிட்டது. ஜுலை 16, 2014 அன்று எரிக் கார்னர் என்பவரை காவலர் கைது செய்யும் போது, எரிக் கழுத்து நெறிபட்டு இறந்து போனார். “என்னால் மூச்சு விட முடியவில்லை” என்று அவர் அன்று உரைத்த வாசகத்தை அப்போதைய ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களது டிஷர்ட்டில் பதிந்து போராடினார்கள். சற்றும் மாற்றமில்லாமல் அதே டிஷர்ட்டை இன்றைய ஆர்ப்பாட்டக்கார்களின்
கைகளில் பார்க்கிறேன்.”

நீறுபூத்த நெருப்பு!

மே 25, 2020 நாளன்று நிகழ்ந்த ஜார்ஜ் ஃப்ளாயிடின் கொலை மட்டும் இன்றைய இந்த ஆக்ரோஷ ஆர்ப்பாட்டத்திற்கு காரணமன்று. இவ்வாண்டின் தொடக்கத்திலிருந்து நிகழ்வுற்ற இரு கருப்பர்களின் கொலைகளால் தகித்துக் கொண்டிருந்த கொதிகலனை இது வெடிக்க வைத்துவிட்டது என்பதுதான் அரசியல் நிபுணர்கள், ஊடகத்தினர் ஆகியோரின் கருத்து. அஹ்மத் அர்பெரி 25 வயது கருப்பின இளைஞர். சிறிய ஊரான பிரன்ஸ்விக்கில் தம் தாயாருடன் வசித்து வந்தார். பிப்ரவரி 23 ஞாயிற்றுக்கிழமை பகல் ஜாகிங் சென்றவரை தந்தையும் மகனுமாய் இரு வெள்ளையர்கள் வழிமறித்து, துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டனர். விசாரணையில், எங்கள் பகுதியில் நடைபெற்ற திருட்டுகளில் நாங்கள் சந்தேகப்பட்ட நபரைப்போல் இருந்தார். மறித்து விசாரிப்பதற்குள் ஓடினார், சுட்டுவிட்டோம் என்று தெரிவித்திருக்கிறார்கள் அவர்கள். இந்த கொலை நிகழ்வின் விசாரணைகூட முறையாக நடைபெறாமல், காவல் துறை கண்டும் காணாததைப் போல் கிடப்பில் போட்டுவிட்டது.  பிறகு ஒருவர் தமக்குத் தெரிந்த பத்திரிகையாளரைத் தொடர்பு கொண்டதில் அவரது முயற்சியில்தான் பிரச்சினையே பெரிதாகி, புலன் விசாரித்து அந்தக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.

மார்ச்சில் தொடங்கி உக்கிரமடைந்த கோவிட் பிரச்சினைதான் அக்கொலையின் ஆரம்பக்கட்ட விசாரணையைத் தாமதப்படுத்திவிட்டது என்று சமாதானம் சொல்லப்பட்டது. அதற்கு அடுத்து மார்ச் 13 ஆம் நாள் லூயிஸ்வில் நகரில் ஒரு நிகழ்வு. போதை மருந்து விற்பவர்களைப் பிடிக்க போலீஸ் சில ரகசிய நடவடிக்கைகள் எடுத்து வந்தது. அதன் ஒரு பகுதியாக குற்றவாளியுடன் முன்னர் தொடர்புடையவராகக் கருதப்பட்ட பெண் ஒருவரின் வீட்டிற்குள் நுழைய வாரண்ட்டுடன் துப்பறியும் அதிகாரிகள் நள்ளிரவில் சென்றனர். பிரியோன்னா டைலர் என்ற அந்த 26 வயது கருப்பினப் பெண் தம் காதலருடன் உறங்கிக் கொண்டிருந்தார். கதவைத் தட்டாமல் கொள்ளாமல் உடைத்துக்கொண்டு உள்ளே நுழைய, அவர்கள் திருடர்களோ என்று நினைத்து துப்பாக்கியால் சுட்டிருக்கிறார் பிரியோன்னாவின் காதலர் கென்னத். திருப்பி போலீஸ் சரமாரியாகச் சுட எட்டு குண்டு காயங்களுடன் இறந்து விட்டார் பிரியோன்னா டைலர். கென்னத்தை போலீஸ் கைது செய்தது.

இறந்துபோன பிரியோன்னா அவசர மருத்துவ உதவி தொழில் நுட்ப வல்லுநர் (Emergency Medical Technician). மரணமடைந்த இவ்விருவரின் குடும்பத்தினர் சார்பாக, காவல் துறைக்கு எதிராக பென் கிரம்ப் என்ற வழக்கறிஞர் வழக்கைத் தாக்கல் செய்ததும் மே மாதம் ஆரம்பத்தில் இவை நாடெங்கும் பேசுபொருள் ஆகி, ஊடகங்களில் உஷ்ணப் பரிமாற்றம் தொடங்கியது. இப்படியாக, கருப்பினத்தவருக்கு எதிராகப் பாகுபாட்டுடன் காவல்துறை செயல்படுகிறது என்ற கோபமும் அதிருப்தியும் அதிகரித்துக்கொண்டிருந்த நிலையில், ஜார்ஜின் கொலை மடையைத் திறந்துவிட்டது. மின்னியாபொலிஸ் நகரில் ஆரம்பித்த அமைதிப் போராட்டம் வெகு விரைவில் கலவரமாக மாறி, மாநிலங்களைக் கடந்து அமெரிக்காவின் பல நகரங்களுக்கும் பரவி, கடைகள் சூரையாடல், காவலர்கள் மீது தாக்குதல், அவர்களுடைய வாகனங்களுக்குச் சேதம், தீயிடல் என்று அமைதி குலைந்துபோய் கிடக்கிறது வல்லரசு. கொரோனாவில் வீடடங்கிக் கிடந்த நகரங்களுள் சிலவற்றில் இப்பொழுது மாலை நேர ஊரடங்கு. குறிப்பிட்ட காவல்துறை அதிகாரிகள் உடனடி பணிநீக்கம், காவலர் டெரெக் மீது கொலைக்குற்றம் என்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும் எதுவும் பதட்டத்தைத் தணிக்கவில்லை. மாறாக தினசரி பெருகி வருகின்றன.

சமூகவிரோதிகள் ஊடுருவல்?

நடக்கும் கலவரங்களுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை; உள்நோக்கத்துடன் சமூக விரோதிகள் புகுந்து கொள்ளைகளில் ஈடுபடுகின்றனர்; நீதிக்கான எங்களது போராட்டத்தைக் குலைத்து பங்கம் விளைவிக்கிறார்கள் என்கிறது அமைதிவழி போராட்டக் குழு. அதற்கான ஆதரமாக சில விடியோக்களையும் அவர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். கருப்பர்கள் மட்டுமின்றி நீதிக்காகக் குரல் கொடுக்கும் அனைத்துத் தரப்பு மக்களும் நிறத்தினரும் உள்ளடங்கிய கூட்டம்தாம் இந்தப் போராட்டக்காரர்கள். கொரோனாவால் பலரும் முகக்கவசத்துடன் உலாவும் சூழலில் கொள்ளையர்கள் யார், மற்றவர்கள் யார் என்பதை முகத்தைக் கொண்டோ நிறத்தைக் கொண்டோ கண்டறிய முடியாமல்போய் விரோதிகளுக்கு அது  வெகு வசதியாக அமைந்துவிட்டது என்பதும் உண்மைதான். சட்டென்று யாரை எப்படி அடையாளம் காண்பது? கொரோனாவில் மூன்று மாதங்களாக நாடு வீடடங்கிவிட, தொழில்களும் பொருளாதாரமும் மரண அடி வாங்கிக்கிடக்க, வேலையின்றி, காசின்றி உள்ளவர்கள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு கடைகளில் கொள்ளையடிக்கின்றனர் என்பது பலரது கருத்து; குற்றச்சாட்டு.

ட்ரம்பு சொதப்பல்!


விவகாரம் ஒருபுறம் என்றால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்போ சமூக ஊடகப் போராளியைப் போல், சுட்டுக்கொல்லப்படுவீர்கள் என்றெல்லாம் ட்வீட்களைத் தட்ட அமெரிக்காவின் அதிபருக்கு ட்விட்டர் நிறுவனம் ஆலோசனையும் குட்டும் வைக்கும்படி நேரிட்டுள்ளது. உடனே ட்விட்டரை முடக்கலாமா என்ற ரீதியில் ட்ரம்ப் ஆலோசனை புரிவதாகவும் தகவல். அவருடைய அசட்டு ட்வீட்டுகளுக்குப் பழகிப்போய், சிரித்துக்கொண்டே புறந்தள்ளும் அவரது ஆலோசனையாளர்கள் கூட இந்த அவரது ட்வீட்டின் அபாயத்தை உணர்த்தி, வரவிருக்கும் தேர்தலில் அவருக்கு அது எப்படி வேட்டு வைக்கும் என்பதை எடுத்துச் சொல்ல, உர்ரென்ற முகத்துடன் தம் விரல்களைப் பிடித்துக்கொண்டிருப்பதாகக் கேள்வி. அது மட்டும் இல்லாமல், வெள்ளை மாளிகைக்கு வெளியே நின்று போராடுபவர்களைப் பார்த்து, நுழைந்து பாருங்கள், உங்கள் மீது நாய்கள் ஏவப்படும், தாக்கப்படுவீர்கள் என்றெல்லாம் அவர் ட்விட்டரில் சீறி விழ, தடுப்புகளை மீறி வெள்ளை மாளிகையின் வாசல்வரை நுழைந்துவிட்டார்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள். அவசர அவசரமாக ட்ரம்பையும் அவர் மனைவி, மகனையும் பதுங்குக் குழிக்குள் இழுத்துச் சென்றது அதிபரின் பாதுகாப்புக் குழு. களங்கப்பட்டு நிற்கிறது வெள்ளை மாளிகை.

எரியும் நெருப்பில் வெண்ணெய்!

கோவிட் தாக்குதலால் நொடித்துப் போய் ஈனஸ்வரத்தில் பல கடைகளும் நிறுவனங்களும் உள்ளன. அவசியப் பொருள்களுக்கான பல்பொருள் அங்காடிகளைத் தவிர ஷாப்பிங் மால்களும் அவற்றிலுள்ள கடைகளும் எப்போது மீண்டும் திறக்கும் என்பதே தெரியவில்லை. இந்நிலையில் கடைகள் சூரையாடப்பட்டால் என்னாகும் அந்த முதலாளிகளின் நிலை? இதை அரசாங்கம் எப்படி அனுமதிக்க முடியும்? பொதுமக்கள் யார்தான் விரும்புவர்? என்றாலும் அதற்கான எதிர் நடவடிக்கைகளிலும் காட்டும் கடுமையிலும் சரியான அணுகுமுறையும் பக்குவமும் தந்திரமும் இருக்க வேண்டுமல்லவா? கடுமை என்ற பெயரில் அதிபர் தம்மிஷ்டத்திற்கு உரத்துப் பேச பேச, அது எரியும் நெருப்பில் கலப்படமற்ற வெண்ணெய்யைத்தான் ஊற்றி வருகிறது. காவலர் ஒருவரின் செயல்தான் இக்கலவரத்தின் ஆணிவேர் என்பதால் போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்துவதில் விழி பிதுங்கி நிற்கிறது நகரங்களின் காவல்துறை. அமைதி வழி ஆர்ப்பாட்டக்காரர்களை அனுமதித்து ஒத்துழைப்பு நல்கும் அதே வேளையில் அராஜகத்திலும் கொள்ளையிலும் ஈடுபடுபவர்களை பெரிதாகக் கட்டுப்படுத்த முடியாமல் அவர்கள் தவிக்கிறார்கள். எரிச்சலிலும் கோபத்திலும் சில ஊர்களில் காவலர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் நிகழ்த்தும் வரம்புமீறல் பெரும் ரூபமெடுக்கிறது. நியூயார்க் நகரில் காவல்துறை வாகனம் ஒன்று ஆர்ப்பாட்டக்காரர்களைக் கொத்தாக இடித்துத் தள்ளிய விடியோ சமூக ஊடகங்களில் பரவிவிட, அந்நிகழ்வைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள நியூயார்க் மேயர்  அக்காவலரைத் தற்காலிகப் பணி நீக்கம் செய்துவிட்டார்.

திகில் தேசம்!

அனைத்து மாநில ஆளுநர்களிடமும் ஜுன் 1, திங்களன்று உரையாற்றிய அதிபர் டிரம்ப், கலவரக்காரர்களை எதிர்த்து கடுமையான நடவடிக்கை எடுங்கள், அவர்களைப் பத்தாண்டு காலம் சிறையில் அடைக்க முடியுமா பாருங்கள் என்று தெரிவித்திருக்கிறார். தவிர இந்த அனைத்துக் கலவரத்தையும் தூண்டிவிட்டு நடத்துவது antifa என்று குற்றம் சுமத்தியுள்ளார். Antifa என்பது Anti-Fascist எனப்படும் வெகு தீவிர இடதுசாரி இயக்கத்தின் சுருக்கம். அமெரிக்காவில் பரவலாக துண்டுதுண்டாக உள்ள அவர்களிடம் இந்தளவிற்குப் போராட்டத்தை தூண்டவோ நிகழ்த்தவோ சக்தி கிடையாது என்பதே அமெரிக்க ஊடகங்கள், அரசியல் நிபுணர்களின் கருத்து. எந்தக் குற்றச்சாட்டையும் ஆதாரமின்றி தன்போக்கிற்குக் கூறுவதில் பிரசித்தி பெற்ற டிரம்ப் அதைப்பற்றிக் கவலைப்பட்டால்தானே? இவற்றின் இடையே அனைவரும் தலையைப் பிய்த்துக்கொள்ளும் பிரச்சினையோ வேறு. ஊரடங்கு, சமூக இடைவெளி என்றெல்லாம் முயன்று இப்பொழுதுதான் கோவிட் பரவலை சிறிது சிறிதாகக் கட்டுப்படுத்தி வருகிறோம். அந்த நோய் இன்னும் முழுக்க ஒழிந்த பாடில்லை. இந்நிலையில் இப்படி மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டால்? திகிலடைந்து கிடக்கிறது டாலர் தேசம்!

Tags : Black hate fire
× RELATED அந்தரங்க விஷயங்களை பொதுவெளியில்...