×

அரசு அலுவலகங்களில் கபசுர குடிநீர் வழங்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

ஸ்ரீபெரும்புதூர்: அதிகாரிகள், அலுவலர்கள் தொற்று நோய் தடுப்பு பணியில் ஈடுபடுவதால், அரசு அலுவலகங்களில் கபசுர குடிநீர் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா,  தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் பெரும்பாலான அரசு துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன. ஊரக வளர்ச்சி, சுகாதாரம், வருவாய், காவல்துறை ஆகிய துறைகள் இணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இதனால் அரசு ஊழியர்கள், தொற்று பரவல் குறித்து கடும் அச்சமடைந்துள்ளனர்.

இதையொட்டி, அரசு துறை அலுவலகங்களில் ஊழியர்கள், பொதுமக்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த கபசுர குடிநீர் வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். குறிப்பாக, சுகாதாரம், ஊரக வளர்ச்சி, வருவாய் மற்றும் காவல் துறையினர் பாதிக்கப்பட்ட பகுதியில் நேரடியாக தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு தொற்று பரவால் தடுக்க கபசுர குடிநீர் பருக வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரை செய்கின்றனர். இதனால் களத்தில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு கபசுர குடிநீர் வழங்க வேண்டும். மேலும் அனைத்து துறை அலுவலகங்களிலும் கபசுர குடிநீர் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : community activists ,government offices ,Kapasura , Government offices, Kapasura drinking water, community activists
× RELATED சிவகங்கையில் கபசுர குடிநீர் வழங்கல்