×

விற்பனை இன்றி மூடையிலேயே வெடிப்பதால் நெல்லையில் கால்நடைகளுக்கு தீவனமாகும் வெள்ளரி பழங்கள்

நெல்லை: நெல்லை நயினார்குளம் காய்கறி மார்க்கெட்டில் விற்பனை இன்றி மூடையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள வெள்ளரி பழங்கள் வெடிப்பதால் கால்நடைகளுக்கு தீவனமாக கொட்டப்படுகின்றன. நெல்லை, தென்காசி மாவட்டம் ஆலங்குளம், பாவூர்சத்திரம், வள்ளியூர், சங்கரன்கோவில், மானூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கத்தரிக்காய், வெண்டைகாய், அவரைகாய், தக்காளி, சாம்பார் வெள்ளிகாய் உள்ளிட்ட காய்கனிகளை விவசாயிகள் பயிர் ெசய்துள்ளனர். 144 தடை உத்தரவால்  காய்கறி கடைகள், மார்க்கெட்டுகள் காலை முதல் மதியம் வரை செயல்படுகின்றன.

குறிப்பிட்ட நேரம் வரை காய்கறி மார்க்கெட் கடைகள் இயங்குவதால் காய்கறிகள் விற்பனை இன்றி அழுகி வீணாகிறது. இதில் கத்தரிக்காய், மல்லி இலை, புதினா இலை, பஜ்ஜி மிளகாய் உள்ளிட்டவைகள் தெருவில் வீசப்பட்டு கால்நடைகளுக்கு உணவாகின்றன. தற்போது டவுன் நயினார்குளம் மார்க்கெட் பகுதியில் சாம்பார் வெள்ளரிக்காய் விற்பனை இன்றி அடிக்கும் கோடை வெயிலுக்கு வெடித்து வீணாகிறது. இதனால் வியாபாரிகள் மூட்டை, மூட்டையாக சாம்பார் வெள்ளரிக்காயை குப்பைகளில் கொட்டுகின்றனர். இதனை கால்நடைகள் தீவனமாக உண்டு வருகிறது.

மேலும் அதில் கிடக்கும் நல்ல வெள்ளரி பழங்களை சிலர் வீட்டில் வளர்க்கப்படும் முயல்களுக்கு உணவாக வழங்க மூட்டை கட்டி எடுத்து செல்கின்றனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், நெல்லையில் காய்கறிகடைகள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்து விற்பனை நடந்து வந்தது. இதனால் காய்கறிகள் அனைத்தும் அன்றைக்கே விற்று தீர்ந்து விடும். தற்போது 144 தடை உத்தரவால் கடைகள் குறிப்பிட்ட நேரத்தில் திறந்து மூடப்படுவதால் தினமும் காய்கறிகள் விற்பனை இன்றி காணப்படுகின்றன. இதனால் காய்கறிகள் அழுகிவிடுகின்றன.

சாம்பார் வெள்ளரிக்காய்கள் உடனுக்குடன் விற்பனை செய்ய வேண்டும். இதனை இருப்பு வைக்க முடியாது. தற்போதைய கோடை வெயிலுக்கு மூடைகளில் உள்ள சாம்பார் வெள்ளிரிக்காய் வெடித்து வீணாகின்றன. இதனை கால்நடைகளுக்காக கொட்டப்படுகின்றன. இதனால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே காய்கறிகடைகளை மாலை 3 மணி நேரம் செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என்றனர்.

Tags : source ,paddy field ,Paddy , Sale, Paddy, Cucumber Fruits
× RELATED நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாட்டம்