×

கொரோனா தாக்குதல் தீவிரம் எதிரொலி சென்னை அண்ணாசாலைக்கு சீல்: போலீசார் அதிரடி நடவடிக்கை

சென்னை: கொரோனா வைரஸ் தீவிரமாக தாக்குவதால், அண்ணா சாலைக்கு நேற்று முதல் சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த தடையை மீறி வாகனங்களில் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் வரும் 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை  அனுமதிக்கப்படுகின்றனர். தேவையில்லாமல் பல்வேறு காரணங்களை கூறிக்கொண்டு கார், பைக்கில் செல்பவர்களை கைது செய்து வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் ஊரடங்கை மீறியதாக 2,68,537 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அதில், 2,85,150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2,88,770 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 2,68,537 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2 கோடியே 68 லட்சத்து 30 ஆயிரத்து 954 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளன.

மேலும், கொரோனா பாதிப்பில் சென்னை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் சுகாதார பணியாளர்கள், போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒருவார காலமாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக காவல்துறையை சேர்ந்த நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் போலீசார் தொடர்ந்து தங்கள் பணியில் தீவிரம் காட்டி வந்தனர். இதையடுத்து, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுபடி மாநகரம் முழுவதும் 160க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது அரசு அனுமதி அளித்த நபர்களை தவிர்த்து பொதுமக்கள் யாரையும் வெளியில் செல்லாத வகையில் கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அரசு அனுமதி அளித்த நபர்கள் அவர்களுக்கு அரசு சார்பில் அளித்த அடையாள அட்டை மற்றும் முககவசம் அணிந்திருந்தால் மட்டுமே அனுமதிக்கின்றனர். இந்நிலையில் சென்னையின் முதன்மை சாலையாக கருதப்படும் அண்ணாசாலை சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா தொற்று தீவிரமாக உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து,  மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் சைதாப்பேட்டை சின்னமலை முதல் பல்லவன் இல்லம் வரை சுமார் 15 கிலோமீட்டர் நீளம் உள்ள அண்ணாசாலையில் எந்தவித போக்குவரத்துமின்றி தடை செய்து உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, போக்குவரத்து போலீசார் சின்னமலை முதல் பல்லவன் இல்லம் வரை அண்ணாசாலையை இணைக்கும் இணைப்பு சாலைகள் அனைத்தும் தடுப்புகள் வைத்து மூடப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை அண்ணா மேம்பாலத்தில் இருந்து திருவல்லிக்கேணி வாலாஜா சாலை வரை உள்ள சிக்னல் வரையும் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டன.அதைத் தவிர நகர் முழுவதும் மாலை 4 மணி முதல் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. இந்தச் சோதனை இரவு வரை நடைபெற்றது. நூற்றுக்கணக்கான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதைத் தவிர சாலையில் வாக்கிங் சென்றவர்களையும் வீட்டுக்குள் செல்லும்படி போலீசார் உத்தரவிட்டனர். சாலைகளில் நடக்கவும் தடை விதிக்கப்பட்டது.  

போலீசார் தடை உத்தரவை மீறி வாகனங்களில் அண்ணாசாலையில் பயணம் செய்தால் அவர்கள் மீது 188,269,270 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்படுவார்கள். மேலும் போக்குவரத்து விதிகளை மீறியதாக அவர்களுடைய வாகனங்கள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர். இது நேற்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் முதன்மை சாலையான அண்ணா சாலையை மூடப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.  


Tags : Chennai ,attack ,auditorium ,Corona ,police action , Corona attack, intensified echoes, Chennai auditorium,police action
× RELATED உணவக உரிமையாளர் மீது தாக்குதல்: பாஜக நிர்வாகி கைது