×

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தாக கபசுர குடிநீரை வழங்க பரிசீலிக்க வேண்டும்:பொதுநல வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக கபசுர குடிநீர் என்ற சித்த மருத்துவம் மக்கள் மத்தியில் தற்போது பிரபலமாகி வருகிறது. இந்த குடிநீர் தயாரிப்பதற்கான மூலிகையை வாங்குவதற்கு சித்த மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த கபசுர குடிநீரை கொரோனா வைரஸ் நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கவும், இந்த வைரஸ் தாக்காமல் இருக்க தடுப்பு மருந்தாக வழங்குமாறும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி பி.ஏ.ஜோசப் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஜூம் வீடியோ ஆப் மூலம் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் அர்விந்த் பாண்டியன் ஆஜராகி, கபசுர குடிநீரை பயன்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய முதல்வர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் சுகாதாரத்துறை செயலாளர், 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர். மத்திய அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அரசு உரிய முடிவை எடுக்கும் என்று தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. மனுதாரரின் கோரிக்கை குறித்து தமிழக அரசு அமைத்துள்ள குழு பரிசீலனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

Tags : Corona virus, kapacura drinking water, public interest litigation, HC
× RELATED தொழில் நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ...