×

விளைச்சல் அதிகரிப்பு எதிரொலி காய்கறி விலை 40 சதவீதம் குறைந்தது: உச்சத்தில் இருந்த சாம்பார் வெங்காயம் 40, பல்லாரி 20, முருங்கைக்காய் 60க்கு விற்பனை

சென்னை: விளைச்சல் அதிகரிப்பு எதிரொலியாக காய்கறி விலை 40 சதவீதம் அளவுக்கு குறைந்தது. உச்சத்தில் இருந்த சாம்பார் வெங்காயம் கிலோ 40, பல்லாரி 20, முருங்கைக்காய் 60க்கு விற்பனையாகிறது.தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் காய்கறி விலை கடுமையாக உயர்ந்தது. ஒரு கிலோ சாம்பார் வெங்காயம் கிலோ 200 வரை விற்பனையானது. பல்லாரி வெங்காயம் அதிகபட்சமாக 150 வரை விற்பனையானது. அதேபோல, முருங்கைக்காய் 180 வரை விற்பனையானது. வெங்காயம் விலை என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். கிலோ கணக்கில் வாங்கி வந்தவர்கள் கிராம் கணக்கில் வாங்க தொடங்கினர். தட்டுப்பாட்டால் வெளிநாடுகளில் இருந்து பல்லாரி வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு சற்று நிலைமைக் கட்டுக்குள் வந்தது.

இந்நிலையில் தற்போது அறுவடை தொடங்கியுள்ளது. இதனால், காய்கறிகள் விலை கடுமையாக குறைந்து வருகிறது. வழக்கத்தை விட மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.இதுகுறித்து சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மொத்த வியாபாரிகள் சங்க ஆலோசகர் சவுந்தரராஜன் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் விவசாயத்திற்கு ஏற்ற வகையில் மழை பெய்துள்ளது. இதனால், காய்கறிகள் விளைச்சல் அதிகரித்துள்ளது. விளைச்சல் அதிகரிப்பால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து அதிகரித்துள்ளது. சென்னை கோயம்பேட்டிற்கு தினசரி 200 லாரிகளில் காய்கறி வந்து கொண்டிருந்தது. தற்போது அது 350 லாரிகளாக அதிகரித்துள்ளது. இதனால், காய்கறி விலை சுமார் 40 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.

 முட்டை கோஸ் 20லிருந்து 8, பீன்ஸ் 50லிருந்து 15, சாதா பீன்ஸ் 20லிருந்து 10, கேரட் 60லிருந்து 25, பீட்ருட் 25லிருந்து 12, 10. நூக்கல் 25லிருந்து 8, காலிபிளவர் 30லிருந்து 10, சவ்சவ் 20லிருந்து 8, முள்ளங்கி 20லிருந்து 8, உருளைக்கிழங்கு 30லிருந்து 15, 20.வரலாறு காணாத வகையில் விலையேற்றத்துடன் காணப்பட்ட சாம்பார் வெங்காயம் 150லிருந்து 40, பல்லாரி வெங்காயம் 100லிருந்து 20, முருங்கைக்காய் 180லிருந்து 60, பச்சை மிளகாய் 25லிருந்து 15, சேனைக்கிழங்கு 40லிருந்து 20 ஆக விலை குறைந்துள்ளது.அதேபோல கத்தரிக்காய் 25லிருந்து 15, அவரைக்காய் 40லிருந்து 15, புடலைங்காய் 20லிருந்து 10, பாகற்காய் 40லிருந்து 15, பச்சை மொச்சை 40லிருந்து ₹30, பச்சை பட்டாணி 40லிருந்து 30, தக்காளி 25லிருந்து 8, கொத்தமல்லி 25லிருந்து 10க்கும் விற்கப்படுகிறது. மேலும் இஞ்சி 60, சேப்பக்கிழங்கு 30 என்று அதே விலையில் விற்பனையாகிறது. மொத்தத்தில் காய்கறி விலை 40 சதவீதம் அளவுக்கும், முருங்கைக்காய், பல்லாரி, சாம்பார் வெங்காயம் விலை 60 சதவீதம் அளவுக்கும் விலை குறைந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.மொத்த மார்க்கெட்டில்தான் இந்த விலை. சில்லறை விற்பனையில் காய்கறி விலை கிலோவுக்கு 2 முதல் 5 வரை அதிகமாக விற்கப்பட்டு வருகிறது.


Tags : Pallari 20 , Echoes ,yield increase, Vegetable, prices down,
× RELATED பிளஸ் 1 பொது தேர்வில் மாநகராட்சி பள்ளி...