×

காந்தக்குரலில் பாடி கலக்கிய கங்குபாய்: - இன்று ஹிந்துஸ்தானி பாடகி கங்குபாய் ஹங்கல் பிறந்தநாள்

இசைக்கேட்டு மயங்காதவர்கள் யாரேனும் உண்டா இவ்வுலகில்...? பிறந்த குழந்தைக்கு தாலாட்டு பாடலில் துவங்கி, மங்கல விழாக்கள் உட்பட  வாழ்க்கையின் இறுதிநாள் வரை இசை நம் வாழ்க்கையில் நீக்கமற நிறைந்திருக்கிறது. அதிலும், சில பாடகர்கள், பாடகிகளின் குரலில் ஒலிக்கும்  பாடலை கேட்கும்போது மனம் லயித்து ஒன்றிப்போய் விடும். அன்று முழுவதும் அந்த பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருப்போம். அப்படி ஒரு  அற்புதமான பாடகிதான் கங்குபாய் ஹங்கல்.யார் அவர் ?
கர்நாடக மாநிலம், தார்வாட் நகரில் 1913, மார்ச் 3ம் தேதி சிக்குராவ் - அம்பாபாய்க்கு மகளாக பிறந்தவர் கங்குபாய் ஹங்கல். இவரது தாய் கர்நாடக  சங்கீதம் கற்றவர். இதை தனது மகளுக்கும் கற்றுத்தந்தார். வளரும் வயதிலேயே தியாகராஜர் கீர்த்தனைகளை பிரமாதமாக பாடுவாராம் கங்குபாய்  ஹங்கல். வளர, வளர கர்நாடக சங்கீதத்தை கரைத்து குடிக்கத் தொடங்கினார். அப்போது அவர் வசித்த பகுதிகளில், இந்துஸ்தானி இசை அடிக்கடி  ஒலிக்கும். இது கங்குபாயை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து பிரபல இந்துஸ்தானி மேதை கிருஷ்ணாச்சார்யாவிடம் இசை கற்றார். பாடினால்  மட்டும் போதுமா? கதக் நடனத்திலும் கலக்கினார். காயல், பஜன்கள் ஆகியவற்றையும் கற்றுத் தேர்ந்தார்.

இவரது சங்கீத குருவான  கிருஷ்ணாச்சார்யா வசித்த கிராமம் வெகு தொலைவில் இருந்தது. இதனால் பல நேரங்களில் ரயிலிலும், பின்னர் நீண்ட  தூரம் நடந்து சென்று இசை கற்றார். பெண்கள் வீட்டில் முடங்கிய காலத்தில், இப்படி வெளியே சென்று இசை கற்பதா என பலரும் இவரை  விமர்சித்தனர். ஆனாலும், தனது இசை ஆர்வத்தை அவர் விடவில்லை. பெரும் இடையூறுகளுக்கு மத்தியிலும் கர்நாடக சங்கீதம், இந்துஸ்தானி  இசையை சாதகம் செய்யத் துவங்கினார். எதிர்ப்பையை முன்னேற்ற படியாக கருதி, மிகச்சிறந்த பாடகியாக வரவேண்டும் என்ற வைராக்கியம்  கொண்டார். அதற்காக மேலும், பல இசை ஜாம்பவான்களை சந்தித்தார். தத்தோபந்த் தேசாய், சவாய் கந்தர்வா உள்ளிட்ட ஜாம்பவான்களிடம் இசை கற்று  மிகச்சிறந்த இசைக்கலைஞர் என பலராலும் பாராட்டப்பட்டார். இவர் பாடிய சபாக்களில் கூட்டம் அலை மோதியது. இந்தியாவின் பல நகரங்களில்  இந்துஸ்தானி இசைக் கச்சேரிகள் நடத்தினார். அகில இந்திய வானொலியில் இவரது பாடல்கள் தொடர்ந்து ஒலிபரப்பாகின. பண்டிகைகளில்  பாடுவதற்கு பல பகுதிகளில் இருந்தும் அழைப்புகள் வந்தன. நாடு முழுவதும் இவரது புகழ் பரவியது.

இவரது குரல் தனித்துவமானது. வேறு யாரும் இவரைப்போல பாட முடியாது என அப்போது பெரும் பாராட்டை பெற்றவர். 70 ஆண்டுகளுக்கு மேலாக  இவரது இசைப்பயம் தொடர்ந்து. பத்மபூஷண், பத்ம விபூஷண், தான்சேன், ரூஹே கஜல் பேகம் அக்தார், புவால்கா, வாழ்நாள் சாதனையாளர் விருது  உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றார். கர்நாடகா, குல்பர்கா, டெல்லி பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி  சிறப்பித்தன. வயதானாலும் கூட இவரது குரல் இசை ரசிகர்களை வெகுவாக வசீகரித்தது. தனித்துவ குரலால் தரணி போற்றுமளவுக்கு உயர்ந்த, இந்துஸ்தானி  இசைக்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய கங்குபாய் ஹங்கல் 2009, ஜூலை 21ம் தேதி ஹூப்ளியில் தனது 96வது வயதில் காலமானார். அன்று  முதல் இன்று வரை இந்துஸ்தானி இசையின் முக்கிய பிரபலங்களில் கங்குபாய் குறிப்பிடத்தக்கவர். அவர் மறைந்தாலும், அவரது குரல் காற்றிலே  ஒலித்து நம் இதயங்களில் சென்று சேரும்.

Tags : Gangbhai ,Ganguai Hangal ,birthday ,Gangubai Hangal , Gangbhai singing , magnet, Hindustani Singer, Gangubai Hangal ,Birthday
× RELATED மாவட்டம் முழுவதும் கலைஞர் 101வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்