×

‘ஹலோ... வணக்கம்... எப்படி இருக்கீங்க...’ : இன்று (மார்ச் 3) கிரஹாம் பெல் பிறந்தநாள்

‘என்னங்க... எங்கே இருக்கீங்க...’.  ‘இன்னும் வண்டியை எடுத்து வாசலை கூட தாண்டலைம்மா... அதுக்குள்ளே போன் பண்ணுறியே... ச்சே...’. - இப்படி ஒரு சம்பவம் உங்கள் வாழ்க்கையில் நடந்திருந்தால், நீங்கள் கண்டிப்பாக திருமணமானவராகத்தான் இருக்க முடியும். இப்படி தொலைத்தொடர்புக்கு முன்னோடியாக திகழ்ந்த, ெதாலைபேசியை கண்டறிந்த அலெக்சாண்டர் கிரஹாம் பெல்லை பற்றித்தான் இன்றைய பதிவில் பார்க்கப் போகிறோம்.ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பர்க் நகரில் 1847ம் ஆண்டு, மார்ச் 3ம் தேதி பிறந்தவர் அலெக்ஸாண்டர் கிரகாம் பெல். பின்னாடி மணி ஒலிக்கும் தொலைபேசியை கண்டறிவார் என முன்கூட்டியே, ‘பெல்’ என பெயர் வைத்தார்களோ என்னவோ? இவரது தந்தை ஒரு பேராசிரியர். இதனால் இவருக்கு 11 வயது வரை வீட்டில் வைத்து பாடம் கற்பிக்கப்பட்டது. எத்தனையோ பாடங்கள் படித்தாலும் அறிவியல் பாடமே இவரது முக்கிய தேர்வாக இருந்தது. தனது வாழ்க்கையில் பெரும்பாலான நேரத்தை ஒலி அலைகள் குறித்த ஆராய்ச்சியிலே ஈடுபட்டார் கிரஹாம் பெல். இதற்காக தனது மூதாதையர் வாழ்ந்த லண்டனுக்கு 1863ல் பெல் குடும்பம் குடி பெயர்ந்தது.

பியானோ வாசிப்பதில் கிரஹாம் பெல் கில்லாடி. பியானோவில் ஒலி எழுப்பி மின்சாரம் மூலமாக அந்த இசையை ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை அனுப்பி பார்த்தார். அதில் ஓரளவு வெற்றி கண்டதும், இதை ஏன் தொலைதூரத்தில் இருக்கும் ஒருவர் கேட்கும்படி செய்யக்கூடாது என யோசித்தார். உடனே அதற்கான தேடலில் தீவிரமாக இறங்கினார். பேச்சை மின் ஒலியாக மாற்றும் ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டார். 1876ல் அவரது ஆராய்ச்சி முழு வடிவம் பெற்றது. முதன்முதலாக உதவியாளருக்கு தனது கண்டுபிடிப்பான தொலைபேசி மூலம் பேசினார். பெல் பேச்சு, ‘பெல்’ அடித்தது போல உதவியாளருக்கு கேட்டது. அவ்வளவுதான்.... துள்ளிக்குதித்தார் கிரஹாம் பெல். பெல் பேசிய சொற்களை வாட்சனால் தெளிவாக கேட்க முடிந்தது. பின்னர், இதை ஒரு பிரபல கண்காட்சியில் பார்வைக்கு வைத்தார்.

ஒரு மாதிரியான கண்டுபிடிப்பை கண்காட்சியில் பார்வையிட்ட பிரேசில் மன்னர், அதை எப்படி பயன்படுத்துவது என கிரஹாம் பெல்லிடம் கேட்டறிந்தார். அவரை வேறிடத்துக்கு அனுப்பி, ‘ஹலோ மிஸ்டர் கிங்’ என்றார் பெல். மிரண்டு போன பிரேசில் மன்னர், ‘உடனடியாக இதை உலக அளவில் கொண்டு செல்லுங்கள்’ எனக்கூறினார். இதையடுத்து தொலைபேசிக்கு காப்புரிமை பெற்றார். இதன்பிறகு தொலைபேசி சர்வதேச அளவில் பெருமை பெற்றது. பின்னர் 1877ம் ஆண்டு வாட்சனுடன் இணைந்து பெல் தொலைபேசி கம்பெனியைத் தொடங்கினார்.தொலைபேசி கண்டுபிடிப்புக்காக பிரிட்டிஷ் அரசு இவருக்க மிகப்பெரிய பரிசுத்தொகையை வழங்கியது. இதைக்கொண்டு வோல்டா ஆய்வுக்கூடம் துவங்கி, குரலை பதிவு செய்யும் ஒலித்தகடுகளை உருவாக்கினார்.1885ல் தனது குரலை மெழுகு தடவிய கார்போர்ட் தகட்டில் பதிவு செய்துள்ளார். அது இன்றும் அமெரிக்காவில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. காது கேளாதோர் பேசவும் மற்றவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்வதற்குமான முறைகளை மேம்படுத்தினார். உலகம் முழுவதும் உள்ள காது கேளாதோர் பள்ளிகளுக்கு பெருமளவில் நிதியுதவி வழங்கியதுடன், அவர்கள் துயரைக் களைவதற்கான பல அமைப்புகளையும் தொடங்கினார். வோல்டா பரிசு, ஆல்பர்ட் பதக்கம், எடிசன் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளையும் விருதுகளையும் பெற்றார்.

இன்று தொலைபேசி பரிணாம வளர்ச்சி பெற்று, செல்போன் அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனாலும், இன்றளவும் மிகச்சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளில், தொலைபேசி முக்கிய பங்கு வகிக்கிறது. கடிதம் மூலம் பகிரப்பட்ட தகவல்களை, இன்று ஒரு சில வினாடிகளில் உலகத்தில் இருக்கும் அனைவருக்கும் பரப்புகிறோம். அதற்கான முன்னோடியான அலெக்சாண்டர் கிரஹாம் பெல், 1922ம் ஆண்டு, ஆக.2ம் தேதி, தனது 75வது வயதில் உயிரிழந்தார்.

Tags : Graham Bell , Hello,hello ,how are you ,Graham Bell's birthday today
× RELATED வடக்கன்குளம் எஸ்ஏவி பள்ளியில் திருவாசகம் முற்றோதுதல்