×

சொற்களில் சிலம்பாடிய ‘சொல்லின் செல்வர்’ : இன்று(மார்ச் 2) ரா.பி.சேதுப்பிள்ளை பிறந்தநாள் ‘

சொல்லின் செல்வர்’ என போற்றப்படும் ரா.பி.சேதுப்பிள்ளை திருநெல்வேலியில் இராசவல்லிபுரம் என்ற ஊரில் 1896ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி பிறவிப்பெருமான்பிள்ளை - சொர்ணம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். ஐந்தாண்டு நிரம்பிய சேது உள்ளூர் திண்ணைப் பள்ளியில் சேர்ந்து, தமிழ் நீதி நூல்களைக் கற்றார். இராசவல்லிபுரம் செப்பறைத் திருமடத் தலைவர் அருணாசல தேசிகரிடம் மூதுரை, நல்aவழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம், தேவாரம், திருவாசகம் போன்ற நூல்களைக் கற்றார். பின்னர் தனது தொடக்கக் கல்வியைப் பாளையங்கோட்டையில் தூய சேவியர் உயர்நிலைப் பள்ளியிலும், இடைநிலை வகுப்பின் (இண்டர் மீடியட்) இரண்டாண்டுகளை திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், இளங்கலை வகுப்பின் இரண்டாண்டுகளை சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் பயின்று தேர்ச்சி பெற்றார். உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக விளங்கிய சுப்பிரமணியம், இந்து கல்லூரித் தமிழாசிரியர் சிவராமன் ஆகியோர் சேதுவிற்கு தமிழார்வத்தை வளர்த்தவர்கள்.

தாம் படித்த பச்சையப்பன் கல்லூரியிலேயே ஆசிரியராகவும் பணியாற்றினார். பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியராக பணிபுரிந்து கொண்டே சட்டக் கல்லூரியில் மாணவராகச் சேர்ந்து படித்தார். சட்டப்படிப்பை முடித்து நெல்லை திரும்பிய சேது, ஆழ்வார்ஜானகி என்பவரை மணந்தார். 1923ம் ஆண்டில் திருநெல்வேலியில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டு பணியாற்ற தொடங்கினார். நெல்லையில் வழக்குரைஞர் தொழிலை மேற்கொண்ட சேது, நகர்மன்ற உறுப்பினராகவும், நகர்மன்றத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பணியின் போது இவர் நெல்லை நகரில் தெருக்களின் பெயர்கள் தவறாக வழங்கி வந்ததை மாற்றி அத்தெருக்களின் உண்மையான பெயர்கள் நிலை பெறுமாறு செய்தார்.

வழக்குரைஞராக இருப்பினும் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்தார். இவரின் செந்தமிழ்த் திறம் அறிந்த அண்ணாமலை பல்கலைக்கழகம் இவரைத் தமிழ் அறிஞராக ஏற்றுக் கொண்டு தமிழ்த் துறையில் தமிழ்ப் பேரறிஞர் பதவியை அளித்தது. சேதுப்பிள்ளை தமிழ்த் துறையில் விரிவுரையாளராகச் சேர்ந்து விபுலானந்தர், சோமசுந்தர பாரதியார் ஆகிய இருபெரும் புலவர்களின் தலைமையில் தொடர்ந்து ஆறாண்டுகள் பணி புரிந்தார். தமது மிடுக்கான செந்தமிழ் பேச்சால் மாணவர்களை பெரிதும் கவர்ந்தார். மொழி நூலை இளங்கலை வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலத்திலேயே கற்பித்துத் தமிழுக்கு இணையான தம் ஆங்கில புலமையையும் வெளிப்படுத்தினார்.

1936ல் சென்னைப் பல்கலைக்கழகம் சேதுப்பிள்ளையை தமிழ்ப் பேராசிரியராக அமர்த்தியது. 25 ஆண்டு காலம் சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய சேதுப்பிள்ளை தம் எழுத்தாலும் பேச்சாலும் தமிழுக்கு பெருமையும் தமிழ் உரைநடைக்குச் சிறப்பையும் சேர்த்தார். சேதுப்பிள்ளையின் நூல்களுள் பலவும் அவர் தமிழக வானொலி நிலையங்களில் ஆற்றிய இலக்கியப் பொழிவுகளின் தொகுப்புக்களாகும். இவர் எழுதிய முதல் கட்டுரை நூல் “திருவள்ளுவர் நூல் நயம்” என்பதாகும். படைத்த உரைநடை நூல்களுள் தலை சிறந்தது “தமிழகம் ஊரும் பேரும்” என்பதாகும். இந்நூல் அவரின் முதிர்ந்த ஆராய்ச்சிப் பெருநூலாகவும், ஒப்பற்ற ஆராய்ச்சிக் கருவூலமாகவும் திகழ்கிறது.  

சேதுப்பிள்ளையின் ‘தமிழின்பம்’ என்னும் நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. அடுக்குமொழி, எதுகை, மோனை, இலக்கியத் தொடர் மூன்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்த சேதுப்பிள்ளையின் பேச்சாற்றலை பாராட்டித் தருமபுர ஆதீனம் 1950ம் ஆண்டு ‘சொல்லின் செல்வர்’ என்னும் விருது வழங்கியது.  இவ்வாறு தமிழுக்கு அயராது தொண்டாற்றிய சேதுப்பிள்ளை ஏப்ரல் 25, 1961ல் இயற்கை எய்தினார். இவருடைய நூல்கள் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.

ரா.பி. சேதுப்பிள்ளையின் உரைநடை சிறப்பை விளக்கும் சில தொடர் வருமாறு: “தென்னாட்டிலே தென்றல் என்றொரு பொருள் உண்டு; தனியே அதற்கொரு சுகம் உண்டு. வசந்த காலத்தில் தெற்கேயிருந்து அசைந்து வரும் தென்றலின் சுகத்தை நன்றாக அறிந்தவர் தமிழர்; வடக்கேயிருந்துவரும் குளிர்காற்றை “வாடை” என்றார்கள்; தெற்கேயிருந்து வரும் இளங்காற்றை “ தென்றல்” என்றார்கள். வாடையென்ற சொல்லிலே வன்மையுண்டு; தென்றல் என்ற சொல்லிலே மென்மையுண்டு. தமிழகத்தார் வாடையை வெறுப்பர்; தென்றலின் மகிழ்ந்து திளைப்பர்.”



Tags : Birthday ,Robert Sethupillai , Birthday,Robert Sethupillai ,today '
× RELATED கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா பள்ளி...