×

தனித்தனி பாக்கெட்டுகளில் குட்கா, பான்மசாலா விற்பனை செய்வதை தடுக்க கோரி வழக்கு: தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்

சென்னை: குட்கா மற்றும் பான்மசாலாவை தனி பாக்கெட்களிலும், புகையிலையை தனி பாக்கெட்களிலும் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில், ‘சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் உற்பத்தி, விநியோகம் ஒழுங்குமுறை மற்றும் விளம்பர தடைச் சட்டத்தில் இருந்து மெல்லும் புகையிலை, பான்மசாலா, குட்கா ஆகியவற்றை நீக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. புகையிலைப் பொருட்களை உணவு பொருட்கள் எனக் கூறி, அவற்றுக்கு தடை விதித்து 2011ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பாணையின் அடிப்படையில், தமிழக அரசு, 2013ம் ஆண்டு, பான்மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

ஆனால், ‘சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் உற்பத்தி, வினியோகம் ஒழுங்குமுறை மற்றும் விளம்பர தடைச் சட்டத்தில் மெல்லும் புகையிலை, பான் மசாலா, குட்கா ஆகிய புகையிலைப் பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், குட்கா, பான்மசாலா மற்றும் புகையிலை தனித்தனி பாக்கெட்களில் விற்பனை செய்யப்படுவதாககக் கூறி, சென்னை நிதிச் சந்தைகள் மற்றும் பொறுப்புடைமை அமைப்பின் தலைவர் மனோஜ் கே.சேத், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் தடை விதிப்பதை தடுப்பதற்காக குட்கா மற்றும் பான்மசாலா தனி பாக்கெட்களிலும், புகையிலை தனி பாக்கெட்களிலும் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுகிறது. குட்கா மற்றும் பான்மசாலாவுடன், மெல்லும் புகையிலை ஆகியவை உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் வருவதாக சென்னை உயர் நீதிமன்ற முதல் அமர்வு கூறியுள்ளது. இதனால், புகையிலை, பான்மசாலா மற்றும் குட்காவை தனித்தனி பாக்கெட்களில் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில், மெல்லும் புகையிலை, பான்மசாலா, குட்கா ஆகியவற்றை ‘சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் உற்பத்தி,

விநியோகம் ஒழுங்குமுறை மற்றும் விளம்பர தடைச் சட்டத்தில் இருந்து நீக்கும் வகையில் அந்த சட்டப் பிரிவை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கோரியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ேஹமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்தது.

Tags : Chief Justice Session , Separate pocket, gutkha, panmasala, sale
× RELATED தமிழ் வழக்காடு மொழி வழக்கு.....