* தமிழக அரசிதழில் வெளியீடு
* சட்டப்பேரவை மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்
சென்னை: தமிழக சட்டப்பேரவையில், கடந்த 20ம் தேதி காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலமாக அறிவித்த சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து அரசிதழில் அதிகாரப்பூர்வமாக நேற்று வெளியிடப்பட்டது. இதேபோன்று, பெட்ரோ கெமிக்கல் மண்டல திட்டத்தையும் ரத்து செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்டமுன்வடிவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 20ம் தேதி தாக்கல் செய்தார். இந்த சட்டத்தின்படி, காவிரி டெல்டா பகுதியில் துத்தநாக உருக்காலை, இரும்புத்தாது செயல்முறை ஆலை. ஒருங்கிணைந்த எக்கு ஆலை அல்லது இரும்பு உருக்காலை, செம்பு அலுமினிய உருக்காலை, விலங்குகளின் எலும்பு, கொம்பு, குளம்புகள் மற்றும் பிற உடல் பாகங்களை பதப்படுத்துதல், தோல் பதனிடுதல், எண்ணெய் மற்றும் நிலக்கரி படுகை மீத்தேன், மென்களிக்கல் எரிவாயு, ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட இயற்கை எரிவாயு ஆய்வு துளைத்தல் மற்றும் பிரித்தெடுத்தல், கப்பல் உடைக்கும் தொழிற்சாலை ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்படுகிறது.தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய டெல்டா மாவட்டங்களிலும், கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில், மேல் புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை மற்றும் குமராட்சி வட்டாரங்கள், புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், மணமேல்குடி, திருவரங்குளம் மற்றும் கரம்பக்குடி வட்டாரங்களுக்கு இந்தத் தடை பொருந்தும் என்று அந்த சட்டத்தில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த சட்டமுன்வடிவை, தேர்வு குழுவுக்கு அனுப்பி வைத்து அதில் உள்ள நிறை, குறைகளை கண்டறிந்து அதன்பிறகு நிறைவேற்ற வேண்டும் என திமுக, காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்கவில்லை. ஆனாலும், இந்த சட்டமுன்வடிவு கடந்த 20ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு தமிழக கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், காவிரி டெல்டா பகுதியில் ஏற்கனவே 2017ம் ஆண்டு, பெட்ரோலியம் மற்றும் கெமிக்கல் எடுப்பதற்காக அனுமதி அளித்து வெளியிட்ட அரசாணையை ரத்து செய்தும் தமிழக அரசு நேற்று ஒரு உத்தரவு வெளியிட்டுள்ளது.இதுகுறித்து தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் ராஜேஷ் லக்கானி நேற்று வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது:தமிழக அரசு கடந்த 20ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட, காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வகை செய்யும் சட்ட முன்வடிவுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, தமிழக அரசின் சட்ட முன்வடிவு அரசிதழிலில் வெளியிடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.அதேபோன்று நேற்று முதன்மை செயலாளர் ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ள மற்றொரு அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது:காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு வந்துள்ளதாகவும், இதையடுத்து காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வந்துள்ளது. அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும், டெல்டா பகுதியை ஒட்டியுள்ள புதுக்கோட்டை, கடலூர், திருச்சி, கரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் நெல் மற்றும் உணவு உற்பத்தி அதிகம் உள்ள பகுதியாகும். இந்த பகுதி சுற்றுச்சூழல் மற்றும் விவசாயத்துக்கு ஏற்ற பகுதி ஆகும்.
இந்த பகுதியில் பெட்ரோலியம் கெமிக்கல் மற்றும் பெட்ரோ ெகமிக்கல் முதலீட்டு மண்டலமாக 2017ம் ஆண்டு ஜூன் மாதம் 20ம் தேதி அறிவிக்கப்பட்டது. அந்த அரசாணைபடி 45 கிராமங்களில் சுமார் 57,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தற்போது அந்த அரசாணையை ரத்து செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் 2017ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிடப்படுகிறது. நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்ட கலெக்டர்கள் தமிழக அரசிதழில் வெளியான இந்த அரசாணை மாவட்ட அரசிதழில் வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
* தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும், டெல்டா பகுதியை ஒட்டியுள்ள புதுக்கோட்டை, கடலூர், திருச்சி, கரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் நெல் மற்றும் உணவு உற்பத்தி அதிகம் உள்ள பகுதியாகும்.
* தமிழக அரசாணைபடி 45 கிராமங்களில் சுமார் 57,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
