சென்னை, டிச.22: பழைய பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் கடும்பாடி. இவரது மகன் பார்த்திபன் (36). இவர் சென்னையில் உள்ள ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பார்த்திபன், அவரது உறவினர்கள் நான்கு பேருடன் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அவர்கள் அனைவரும் சின்னகோட்டக்குப்பம் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இதில் பார்த்திபன் தவிர உடன் வந்த மற்றவர்கள் மது அருந்தி உள்ளனர்.
கிட்னி பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பார்த்திபன் மது அருந்தவில்லை. இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் பார்த்திபனுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உறவினர்கள், அவரை லாஸ்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், கோட்டக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
