×

சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் 23 ஆயிரம் துப்புரவு பணியாளருக்கு தினமும் தரமான உணவு: 15 இடங்களில் சுடச்சுட வழங்கப்படுகிறது

சென்னை, டிச.23: சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் 23 ஆயிரம் பேருக்கு தினமும் சூடான உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் பணியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகத்தில் உள்ள மாநராட்சி, நகராட்சிகளில் துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். திமுக அரசு பதவி ஏற்ற பிறகு, அவர்களுக்கு ஏராளமான திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து வருகிறார். இரவு பகல் பாராமல் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் நேரத்துக்கு சாப்பிடுவதில்லை என்றும், அவர்கள் தரமான உணவு சாப்பிடுவது இல்லை என்றும் தெரியவந்தது. இதனால், அவர்களுக்கு தரமான வகையில் தேவையான அளவுக்கு சாப்பாடு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து, சென்னையில் மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தலைமையில் இதற்கான ஏற்பாடுகளை செய்ய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டார். அதை தொடர்ந்து சென்னையில் 5 இடங்களில் உணவுகளை தயாரித்து நகரில் உள்ள அனைத்து துப்புரவு ஊழியர்களுக்கும் தரமான உணவுகள் வழங்கப்பட்டன. ஆனால், சில இடங்களில் உணவு செல்ல தாமதமாவது ஆய்வில் தெரியவந்தது. இதனால் உணவு தயாரிக்கும் கூடங்களை அதிகரித்து கமிஷனர் குமரகுருபரன் உத்தரவிட்டார். தொடர்ந்து, நகரில் 15 இடங்களில் உணவு தயாரிக்கும் கூடம் உருவாக்கப்பட்டது.

இந்த கூடங்களில் இருந்து காலை 2 ஆயிரம் பேருக்கும், மதியம் 16 ஆயிரம் பேருக்கும், இரவு 5 ஆயிரம் பேருக்கும் உணவு தயாரிக்கப்பட்டு, டிபன்பாக்சில் எடுத்துவரப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அதில் காலையில் பொங்கல், கிச்சடி, உப்புமா வழங்கப்படுகிறது. மதிய நேரத்தில் லெமன், தங்காளி, கரிவேப்பிலை சாதம் மற்றும் உருளைக்கிழங்கு கூட்டு, அப்பளம் வழங்கப்படுகிறது. இரவு இட்லி, சேமியா, தோசை ஆகியவை வழங்கப்படுகிறது. ஓட்டலில் வழங்கப்படுவதுபோல தரமான உணவுகளை தயாரித்து சூடான வகையில் அவர்கள் பணியாற்றும் பகுதிகளுக்கே சென்று வழங்கப்படுகிறது.

அதோடு, அவர்கள் சாலையில் நின்று சாப்பிடக்கூடாது என்பதற்காக மாநகராட்சி அலுவலகத்தில் இருக்கைகள், மேஜைகள் போடப்பட்டு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உணவுகள் வழங்கப்படுகின்றன. இதை அதிகாரிகள் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டு வருகின்றன. மேலும், சத்துணவு பணியாளர்களுக்கு முட்டை வழங்க நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விரைவில் இந்த திட்டமும் முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. நாட்டிலேயே துப்புரவு பணியாளர்களுக்கு சுகாதாரமான முறையில், சூடாக 3 நேரமும் உணவு வழங்கப்படுவது இதுதான் முதன்முறை என்கின்றனர் சென்னை மாநகராட்சி அதிகாரிகள்.

Tags : Chennai Municipality ,Chennai ,Maharashtra ,Tamil Nadu ,
× RELATED சுற்றுலா சென்ற போது வாலிபர் திடீர் மரணம்