பூந்தமல்லி, டிச.22: வளசரவாக்கத்தில் 7ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அரசு மினி பேருந்து நடத்துநரை கைது செய்ய வலியுறுத்தி வளசரவாக்கம் காவல்நிலையம் முன்பு நேற்று முன்தினம் இரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வளசரவாக்கத்தை சேர்ந்த 7ம் வகுப்பு மாணவி ஒருவர் 19ம் தேதி காலை அரசு மினி பேருந்தில் பள்ளிக்கு சென்றுள்ளார். அந்த மாணவியிடம் பேருந்து நடத்துநர் பாலியல் அத்துமீறிலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, வளசரவாக்கம் காவல்நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். பேருந்தில் மாணவி பயணித்தபோது நடத்துநர் அநாகரீகமான வகையில் சைகை செய்ததாகவும், பின்னர் பாலியல் ரீதியில் சீண்டலில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த புகாரில் தெரிவித்து இருந்தனர். இதுதொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நடத்துநரை இதுவரை ஏன் கைது செய்யவில்லை எனக்கூறி மாணவியின் பெற்றோருடன் இணைந்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மற்றும் கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பினர் வளசரவாக்கம் காவல் நிலையம் முன்பு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான நடத்துநர் கைது செய்யப்படுவார் என போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
