×

விவசாயத்திற்காக செயற்கைக்கோள் கண்டுபிடித்து அசத்திய மாணவிகள் மார்ச் 4ல் விண்ணில் ஏவப்பட உள்ளது

புதுக்கோட்டை: விவசாயத்திற்காக செயற்கைக்கோளை மாணவிகள் கண்டு பிடித்துள்ளனர். மார்ச் 4ல் விண்ணில் ஏவப்பட உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எஸ்.எப்.டி மெட்ரிக் மகளிர் மேல் நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் மாணவிகள் சுபாஹானா, கிருத்திகா ஆகியோர் எஸ்.எப்.டி-சாட் என்ற பெயரில் சிறிய ரக செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளனர். இதை அறிந்த கலெக்டர் உமா மகேஸ்வரி நேற்று அவர்களை கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து பாராட்டினார்.

இது குறித்து கலெக்டர் அளித்த பேட்டி: பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் எதிர்காலத்தில் சிறந்த விஞ்ஞானிகளாக உருவாகும் வகையில் அதிகளவில் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்க முன்வர வேண்டும். இந்த கண்டுபிடிப்பை உருவாக்கிய மாணவிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விஜயலட்சுமி, மாவட்ட கல்வி அதிகாரி திராவிடச்செல்வம் ஆகியார் உடன் இருந்தனர். மாணவிகள் கூறுகையில், இந்த செயற்கைக்கோள் மூலம் பருவநிலை மாற்றங்களை கண்டுபிடிக்க முடியும். மேலும் வளி மண்டலத்தில் உள்ள ஆக்சிஜன், கார்பன்டை ஆக்சைடு, காற்றின் ஈரப்பதம், காற்றின் நச்சுத்தன்மை ஆகியவற்றை அளவிட்டு அதன் மூலம் விவசாயத்திற்கு தேவையான பயன்களை பெற்று கொள்ளலாம்.

முதல் கட்டமாக அறந்தாங்கி பகுதியில் உள்ள சில விவசாய நிலங்களை ட்ரோன் மூலம் ஆராய்ந்து சோதனை செய்து பார்த்து உள்ளோம். வெற்றிகரமாக இந்த செயற்கைக்கோள் நிலைநிறுத்த பட்டதும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விவசாய நிலங்களையும் இதே போன்று ஆராய்ந்து பருவநிலை மாற்றங்களை முன்கூட்டியே கணித்து எந்த நிலத்தில் என்ன மாதிரியான பயிர் செய்தால் நல்ல விளைச்சல் இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். மெக்சிக்கோவில் உள்ள ஏர்பேஸ் தளத்தில் இருந்து ஹீலியம் கேப்சூல் மூலம் இந்த செயற்கை கோள் மார்ச் மாதம் 4ம்தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Astronomy students , Astronomy students to launch satellite on March 4 made for farming
× RELATED வாய்ச்சவடால் போதும் மணிப்பூரில்...