×

6ம் கட்ட அகழாய்வு கீழடியில் இன்று துவக்கம்

திருப்புவனம்: கீழடியில் 6ம் கட்ட அகழாய்வுப் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைக்கிறார்.   சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் கடந்த 2015ம் ஆண்டு அகழாய்வு பணி தொடங்கியது. முதல் மூன்று கட்ட அகழாய்வு பணியை மத்திய தொல்லியல் துறையினரும்,  நான்காம், ஐந்தாம் கட்ட அகழாய்வு பணிகளை தமிழக தொல்லியல் துறையினரும் நடத்தினர். இதில் பழங்கால பொருட்கள், கட்டுமானங்கள் கண்டறியப்பட்டன. இவை 2,600 ஆண்டுகள் பழமையானவை என ஆய்வில் தெரியவந்தது. மதுரை தமிழ் சங்க கட்டிடத்தில் இந்த பொருட்கள் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 6ம் கட்ட அகழாய்வு பணியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். இதற்காக அகழாய்வு செய்யும் இடத்தை சுத்தம் செய்து, தயார்படுத்தும் பணி கடந்த 2 நாட்களாக நடந்து வருகின்றன.

3 இடங்களில் ஆய்வு: மார்ச் 1ம் தேதி முதல் கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய அருகேயுள்ள 3 இடங்களிலும் அகழாய்வுப்பணி நடக்கிறது. கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 பகுதிகளின் அகழாய்வுக்கென ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பொருட்கள் ஆய்வு: மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் கூறுகையில், கீழடியில் கிடைக்கும் அகழாய்வு பொருட்களை ஆய்வு செய்ய தமிழக தொல்லியல் துறையுடன் மதுரை காமராஜர் பல்கலைரக்கழகம் மற்றும் அமெரிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஆகியவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. தற்போது கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணிகள் துவங்குவதால், தமிழக அரசுடன் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் இணைந்து கீழடி அகழ்வாராய்ச்சியை தீவிரமாக நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்பட உள்ள நிலையில், அமெரிக்க சிகாகோ பல்கலைக்கழகம், பூனே டெகான் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஆகியவை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆராய்ச்சி செய்ய விருப்பம் தெரிவித்துள்ளன. கீழடியில் கிடைக்கும் பொருட்களை வெளிநாடுகளுக்கு எடுத்துச்சென்று பரிசோதனை செய்வதற்காக நிதி ஒதுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு பல்கலைக்கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சிக்காக பல்கலைக்கழக வளாகத்தில் 20 ஆயிரம் சதுரஅடி கொண்ட பிரத்யேக கட்டிடம் ஆராய்ச்சிக் கூடமாக செயல்பட தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : phase , azhagalvai keeladi
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...