×

அபினவ் இரட்டை சதம் தமிழகம் 490/7 டிக்ளேர்

வதோதரா: பரோடா அணியுடனான ரஞ்சி கோப்பை எலைட் பி பிரிவு லீக் ஆட்டத்தில், தொடக்க வீரர் அபினவ் முகுந்த் அபாரமாக விளையாடி இரட்டை சதம் விளாச  தமிழகம் முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 490 ரன் குவித்து  டிக்ளேர் செய்தது. குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற தமிழகம் முதலில் பந்துவீச...பரோடா அணி 51.4 ஓவரில் 174 ரன்னுக்கு சுருண்டது. தமிழக பந்துவீச்சில்  எம்.முகமது 7 விக்கெட் அள்ளினார்.  அடுத்து முதல் இன்னிங்சை விளையாடிய தமிழகம் முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 135 ரன் எடுத்திருந்தது. முகுந்த் 73, சூர்யபிரகாஷ் 61 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். சூர்யபிரகாஷ் 75 ரன் எடுத்து  ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு அபினவ்-சூர்யபிரகாஷ் ஜோடி 172 ரன் சேர்த்தது. அடுத்து கவுசிக் காந்தி 19, அபராஜித் 8 ரன்னில் வெளியேறினர்.

அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 49 ரன் (36 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். இந்திரஜித்  25 ரன் எடுத்து காயம் காரணமாக பெவிலியன் திரும்பினார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், பொறுப்புடன்  விளையாடிய முகுந்த் இரட்டை சதம்  விளாசி சாதனை படைத்தார். அவர் 206 ரன் ( 242 பந்து, 34 பவுண்டரி) விளாசி குருணல் பந்துவீச்சில் தேவ்தர் வசம் பிடிபட்டார். அபிஷேக் தன்வர் 9, ஜெகதீசன் 29 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.  எம்.முகமது அதிரடியாக அரை சதம் அடித்தார். தமிழகம் 7 விக்கெட் இழப்புக்கு 490 ரன் என்ற ஸ்கோருடன் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. முகமது  54 ரன் (56 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), சாய் கிஷோர் 10 ரன்னுடன்  ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பரோடா தரப்பில் யூசுப் பதான், குருணல் பாண்டியா, ஸ்வப்னில் சிங் தலா 2 விக்கெட்,  பாபாஷபி ஒரு விகெட் வீழ்த்தினர். 316 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய பரோடா, 2ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 10  ரன் எடுத்துள்ளது. முகுந்த் 10,000 இந்த போட்டியில் முகுந்த் 34 ரன் எடுத்தபோது ரஞ்சி உள்ளிட்ட முதல்தர போட்டிகளில் 10 ஆயிரம் ரன் என்ற சாதனை மைல்கல்லை எட்டினார். இவர் ஏற்கனவே முதல்தர போட்டியில் அதிகபட்சமாக  300*  ரன் எடுத்து சாதனை படைத்தவர். நடப்பு தொடரில் ரயில்வேக்கு எதிரான பேட்டியிலும் சதம் விளாசினார்.

புதுச்சேரி அபார வெற்றி
நடப்பு ரஞ்சி தொடரில் புதுச்சேரி-மணிப்பூர் அணிகள் மோதிய லீக் போட்டி கொல்கத்தாவில் நடந்தது. முதல் இன்னிங்சில்  புதுச்சேரி 490 ரன் குவித்து ஆட்டமிழந்தது. மணிப்பூர் முதல் இன்னிங்சில் 138 ரன்னுக்கு சுருண்டு பாலோ ஆன் பெற்றது.  2வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடிய அந்த அணி 111 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. புதுச்சேரி அணி இன்னிங்ஸ் மற்றும் 241 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அழகு பார்த்தீபன் 5 விக்கெட் வீழ்த்தினார்.



Tags : Tamil Nadu ,Abhinav Double Century , Abhinav, Double Century, Tamil Nadu
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...