×

குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தை சீரமைப்பதில் அலட்சியம் ஜல்லி குவியலால் தவிக்கும் மாணவர்கள்

திருவொற்றியூர்:  எண்ணூரில் குழாய் பதிக்க சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தை அதிகாரிகள் சீரமைக்காததால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கொடுங்கையூர் வழுதலைமேடு பகுதியில் குடிநீர் வழங்கல் வாரியத்திற்கு சொந்தமான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இங்கிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், குழாய் மூலம் மணலி, எர்ணாவூர் வழியாக காட்டுப்பள்ளி வடசென்னை அனல் மின் நிலையத்திற்கு கொண்டு செல்ல குழாய் பதிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், எண்ணூர் அரசு  மேல்நிலைப் பள்ளி அருகே சாலையில் குழாய் பதிக்க சில தினங்களுக்கு முன் பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர், பணிகள் முடிந்த இடத்தில் சாலை போடுவதற்காக ஜல்லி கற்கள் கொட்டி நிரவப்பட்டது. ஆனால், அந்த இடத்தில் இதுவரை சாலை அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதன் மீது மாணவ, மாணவியர், பொதுமக்கள் சிரமத்துடன் நடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி ஜல்லி குவியலில் சறுக்கி விழுந்து காயமடைகின்றனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தபோது, குழாய் பதிக்கும் பணி இன்னும்  முழுமை அடையவில்லை. சாலை சீரமைப்பு பணி எங்களிடம்  ஒப்படைக்கபடவும்  இல்லை. எங்களிடம் ஒப்படைத்தால்தான் சாலையை சீரமைக்க முடியும் என தெரிவித்துள்ளனர். குடிநீர் குழாய் பதிக்கும் திட்டப்பணி அதிகாரியிடம் கேட்டபோது, சில இடத்தில் குழாய் பதிக்க ரயில்வே துறை அனுமதி கொடுக்காததால் பணிகள் முடிவடையாமல் உள்ளது. இப்படி குடிநீர் வாரியமும், நெடுஞ்சாலைத்துறையும் பல காரணங்களை கூறி சாலையை சீரமைக்காமல் காலம் கடத்துவதால் பொதுமக்கள்  மாணவ, மாணவியர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே உடனடியாக சாலையை சீரமைமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Tags : rebuilding , Students,negligent in rebuilding,pipe-filled ditch
× RELATED திருப்போரூரில் மீண்டும் களை கட்டியது...